news-details
ஆன்மிகம்
கடவுள் தமது உடன்படிக்கைக்கு என்றென்றைக்கும் நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறார்! (God is ever faithful to his covenant) (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 17)

இறைவாக்கினர்கள் கடவுளுக்கும், இஸ்ரயேல் மக்களுக்குமிடையேயான உடன்படிக்கையின் உறவை விவரிக்க, கணவன்-மனைவிக்கு இடையேயானதிருமண உறவுபற்றிய உருவகத்தை அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள்.

1. திருவிவிலியமானது இஸ்ரயேல் நகர மக்களைக் குறிப்பதற்கு வரலாற்றுப்பூர்வமாகவும் சமயம் சார்ந்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீயோன் மலையை மையப்படுத்திசீயோனின் மகளேஎன்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது (ஒப்பிடுக. மீக் 4:10-13; செப் 3:14-18; செக் 2:14, 9:9-10).

மண ஒப்பந்தமானவள்அல்லதுமனைவிஎன்று அடிக்கடி விவரிக்கப்படும் இந்த உருவகமானது, கடவுளுக்கும் இஸ்ரயேலுக்குமிடையேயான அன்புறவைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.

மீட்பின் வரலாறானது கடவுளின் அன்பின் கதையாக இருக்கிறது. அதேநேரத்தில், அக்கதையானது மனிதனின் பிரமாணிக்கமின்மையைக் கூறுவதாகவும் இருக்கிறது. கடவுள் தமது இணையாக (மனைவியாக) ஏற்றுக்கொண்ட அந்த மக்கள், கடவுளோடு ஏற்படுத்திய திருமண உடன்படிக்கையை அடிக்கடி மீறுவதை இறைவார்த்தையானது பின்வரும் வார்த்தைகளில் கண்டிக்கின்றது: “ஒரு மனைவி தன் கணவருக்குத் துரோகம் செய்வதுபோல இஸ்ரயேல் இனத்தவராகிய நீங்கள் எனக்குத் துரோகம் செய்தது உண்மை (எரே 3:20).

யாவேயின்மணவாட்டியானஇஸ்ரயேலைக் கறைபடுத்துகின்ற துரோகத்தின் பாவம் எதுவாக இருக்கின்றது? அது எல்லாவற்றையும்விட விபச்சாரத்தில் இருக்கின்றது. திருவிவிலிய வார்த்தைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சிலைகளை நோக்கிச் செல்வதென்பது ஆண்டவரின் பார்வையில் விபச்சாரத்திற்கு இணையானதாகும்.

2. ஓசேயா இறைவாக்கினர் தனது நாடக வடிவிலான விளக்கத்தின் வழியாக மிக அற்புதமாக இதை விவரிக்கின்றார். தன்னுடைய சொந்த வாழ்க்கையே விளக்குவதற்கான எதார்த்தமான அடையாளமாக மாறுகின்றது. உண்மையில் அவருடைய பிள்ளைகளின் பிறப்பில் அவர்கள் இவ்வாறு கட்டளையிடப்படுகிறார்கள்: “இரக்கமற்றவள் என்று அவளைக் கூப்பிடுங்கள்; இஸ்ரயேல் இனத்தார்மேல் இனி ஒருபோதும் நான் இரக்கம்கொள்ளவோ, மன்னிக்கவோ மாட்டேன், மேலும், இனி ஒருபோதும் உன்னை நான் பெயர் சொல்லி அழைக்கமாட்டேன்; ஏனெனில், நீங்கள் என் மக்களுமல்ல, நான் உங்கள் கடவுளுமல்ல (ஓசே 1:6,9).  

எதிர்காலத்திற்கான மிக உன்னதமானதோர் உடன்படிக்கையை ஆண்டவர் அறிவிக்கின்றார். ஆண்டவரது கண்டிப்பு மற்றும் சிலைகளை வழிபட்டதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் அனுபவமானது பிரமாணிக்கமற்ற மனைவியை மனம் மாறி மீண்டும் புது வாழ்வை நோக்கித் திரும்பி வரச் செய்கிறது. அதனால் அவள் இவ்வாறு சொல்வாள்: “நான் என் முதல் கணவனிடம் திரும்பிச் செல்வேன்; ஏனெனில், இப்பொழுது இருப்பதைவிட அப்பொழுது நன்றாய் இருந்தது (ஓசே 2:7). ஆனால், கடவுளோ மீண்டுமோர் உடன்படிக்கையை ஏற்படுத்த விரும்புகிறார். அவரது வார்த்தைகள் நினைவு, இரக்கம் மற்றும் கனிவு மிக்கவைகளாக மாறுகின்றன. “இதன் காரணமாக இதோ அவளுக்கு நயங்காட்டி அவளைப் பாலைவனத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அவளோடு நயமாகப் பேசுவேன் (ஓசே 2:14). உண்மையில் பாலைவனம் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்த பிறகு கடவுள் அம்மக்களோடு உறுதியான உடன்படிக்கை செய்துகொண்ட ஓர் இடமாகும்

இந்த அன்பின் உருவகங்கள் கடவுளுக்கும் இஸ்ரயேலுக்குமான கடினமான உறவை விவரித்தாலும், இவற்றின் வழியாகப் பாவத்தின் துயரத்தையும், பிரமாணிக்கமின்மையின் சங்கடங்களையும், மக்களை மீண்டும் உடன்படிக்கையை நோக்கிக் கொண்டுவர மனித இதயத்தோடு பேசும் இறையன்பின் முயற்சியையும் இறைவாக்கினர் விளக்குகின்றார்.

3. அன்றைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசினாலும், இறைவாக்கினர் வழியாக எதிர்காலத்திற்கான மிகவும் நிறைவானதோர் உடன்படிக்கையை ஆண்டவர் அறிவிக்கின்றார்: “அக்காலத்தில் நீ என்னை இனிபாகாலேஎன்று சொல்லாமல், ‘என் கணவன்என்று கூப்பிடுவாய் என்கிறார் ஆண்டவர்.… மேலும், உன்னை எனக்கு மணம் முடித்துக்கொள்வேன்; நீதியிலும் உண்மையிலும் என்றைக்குமான அன்பிலும் இரக்கத்திலும் மணம் முடித்துக்கொள்வேன். நம்பிக்கையில் உன்னை எனக்கு மணம் முடித்துக் கொள்வேன்; நீ உன் ஆண்டவரை அறிந்து கொள்வாய் (ஓசே 2:16,19-20).   

மனித பலவீனங்களால் ஆண்டவர் சோர்ந்து விடுவதில்லை. மாறாக, இன்னும் நெருக்கமான மற்றும் நிலையான ஒன்றிப்பை முன்வைத்து மனிதனின் நம்பிக்கையின்மைக்குப் பதில் தருகிறார்: “நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைப்பேன். இரக்கம் பெறாதவர்களுக்கு இரங்குவேன் மற்றும் என் மக்களாக இல்லாதிருந்தவர்களைஎன் மக்கள்என்று சொல்லுவேன்; அவர்கள்என் ஆண்டவரேஎன்பார்கள் (ஓசே 2:23).     

கடவுளின் முடிவில்லாத அன்பானது மக்களுடைய நம்பிக்கையின்மையிலும், எப்பொழுதுமே அன்பின் உடன்படிக்கையை மீண்டுமாக ஏற்படுத்திடவும், எல்லாவிதமான எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக மீட்பை அளித்திடவும் தயாராக இருக்கிறது.

4. இறைவாக்கினர்களான எசேக்கியேல் மற்றும் எசாயா இருவருமே மன்னிக்கப்பட்ட, பிரமாணிக்கமற்ற பெண்ணின் உருவகத்தினைப் பற்றிப் பேசுகிறார்கள். இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக ஆண்டவர் அவருடைய மனைவியிடம் இவ்வாறு கூறுகிறார்: “உன் இளமையின் நாள்களில் உன்னோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையை இன்னும் நினைவுகூர்வேன்; மற்றும் என்றைக்குமானதோர் உடன்படிக்கையை உன்னோடு நான் ஏற்படுத்துவேன் (எசே 16:60).

இறைவாக்கினர் எசாயா நூல் கடவுளின் கருணை நிறைந்ததோர் உரையை மேற்கோள் காட்டுகிறது: “அன்பினால் நான் உனக்கு இரக்கம் காட்டுவேன்என்கிறார் உன் மீட்பரகிய கடவுள் (எசா 54:5,7-8).  

சீயோனின் மகளுக்கான வாக்குறுதியானது பிரமாணிக்கமற்ற மனைவியின் கைவிடப்பட்ட நிலையிலிருந்து மீண்டெழச் செய்கின்ற ஒரு புதிய, நம்பிக்கையுள்ள அன்பு மற்றும் வியக்கத்தக்க நம்பிக்கையாக இருக்கிறது (எசா 62:11-12). கடவுளுடனான உறவானது ஏற்கத்தக்க வரையறைகள் வழியாக விவரிக்கப்படுகின்றது

இறைவாக்கினர் எசாயா கடவுளுடனான உறவை இவ்வாறு விவரிக்கிறார்: “கைவிடப்பட்டவள்என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; ‘பாழ்பட்டதுஎன இனி உன் நாடு அழைக்கப்படாது; நீஎப்சிபாஎன்று அழைக்கப்படுவாய்; உன் நாடுபெயுலாஎன்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார் (எசா 62:4-5). உருவகங்கள் மற்றும் அன்பின் மனநிலைகளை இனிமைமிகு பாடல்கள் இவ்வாறு சுருக்கமாக விவரிக்கின்றன: “நான் என் காதலர்க்குரியவள்; என் காதலர் எனக்குரியர் (இபா 6:3). இவ்வாறு யாவே கடவுளுக்கும், அவருடைய மக்களுக்குமிடையேயான உறவானது மீண்டும் இத்தகைய பொருத்தமுள்ள வரையறைகளால் விவரிக்கப்படுகின்றது.     

5.  மரியா இறைவாக்கினர்களின் முன்னறிவிப்பைக் கேட்டபொழுது, அவரது இதயத்தில் மீட்பரின் வருகையை வளர்க்கின்ற இந்தக் கண்ணோட்டத்தை நினைத்திருக்க வேண்டும்.

நம்பிக்கையற்ற மக்களின்மீது கூறப்பட்ட சாபங்கள் அனைத்தும் அருளிலும் அன்பிலும் ஆண்டவருடனான உறுதியான திருமண ஒன்றிப்பினுடையதொரு வேண்டுதலுக்கு அவளது ஆன்மாவை புதுப்பிக்கின்ற உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவராய் இருப்பதற்காக மிகவும் உறுதியான அர்ப்பணத்தை அவளில் தூண்டுகிறது. இந்தப் புதிய உடன்படிக்கையிலிருந்து முழு உலகத்தினுடைய மீட்பும் வரும்.

மூலம்: John Paul II, God is ever faithful to his covenant, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 1 May 1996, p. 11.