1. பின்புலம்
கத்தோலிக்கத்
திருவழிபாட்டிலும் (திருப்பலி), திருவழிபாட்டிற்குப் புறம்பே திருமணங்கள், அடக்கச் சடங்குகள், மரியா / புனிதர்களின் நவ நாள்கள் மற்றும் திருவிழாக்களிலும், கிறிஸ்து பிறப்பு, வருடப் பிறப்பு மற்றும் தவக்காலம் / புனித வாரச் சிறப்புக் கொண்டாட்டங்களின் போதும் இறைமக்கள் பாடுவதற்காகப் புதுப்புது பாடல்கள் இயற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. அருள்பணியாளர்கள், அர்ப்பண வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள், பொதுநிலையினர் என்று பலரும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு
ஆலயப் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் பாடல்கள் கொண்டிருக்க வேண்டிய சிறப்புப் பண்புகள் யாவை? அவற்றிற்குத் திரு அவையின் உரிய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமா? திரு இசைக்கு அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகள் என்ன? இக்கேள்விகளுக்கு இக்கட்டுரை விளக்கமளிக்கிறது.
2. திரு இசையின் பண்புகள்
இறைவனுக்கு
மாட்சிமை நல்குவதையும், மானிடரைத் தூய்மைப்படுத்துவதுமே திரு இசை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிடும் திரு அவை, ஆசிரியப் படிப்பினை, அதன் இன்றியமையாத பண்புகளாகக் கீழ்க் காண்பவற்றைக் கோடிட்டுக்காட்டியுள்ளது:
1) இசை
அமைப்பாளர்கள் கிறித்தவ உணர்வால் நிரம்பியிருக்க வேண்டும். திரு இசையைப் பேணி அதன் கருவூலத்தைப் பெருக்கத் தாங்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் அமைக்கும் பண்கள் பாட்டுக் குழுக்களால் மட்டும் பாடக்கூடியனவாய் இல்லாமல், நம்பிக்கையாளர் குழுமம் அனைத்தும் செயல்முறையில் பங்கு கொள்ளப் பொருத்தமானவையாகவும் விளங்கவேண்டும்.
2) ஆலயப்
பாடல்கள் திருவிவிலிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டும், கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கு ஒத்திருப்பதாகவும் அமைய வேண்டும்.
3) திருவழிபாட்டுக்
காலங்களோடும், திருவழிபாட்டு மறைநிகழ்வுகளின் கொண்டாட்டங்களோடும், திருவழிபாட்டுப் பாடல்களின் வார்த்தைகளும் இசையும் பொருந்திச் செல்லவேண்டும்.
4) திரு
இசையின் வார்த்தைகள் இறைவனின் பெயரில், அவரை நோக்கி விளித்து, அவரது மாட்சியையும் மாபெரும் செயல்களையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
5) திருவழிபாட்டில்
இடம்பெறும் பாடல்களின் கீழ்க்காணும் வகைகளுக்கு ஏற்றவாறு திரு இசை அமைய வேண்டும்.
வருகைப்பாடல்:
கொண்டாட்டத்தைத் தொடங்கவும், திருக்கூட்டத்தின் ஒன்றிப்பைப் பேணவும், திருவழிபாட்டுக் காலத்தின் அல்லது திரு நாளின் மறையுண்மையைப் பற்றிய அவர்களுடைய சிந்தனையைத் தூண்டவும், அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் வரும் பவனியில் இணைந்திருப்பதும் இவ்வருகைப் பாட லின் நோக்கம் ஆகும்
பதிலுரைப் பாடல்:
முதல் வாசகத்தைத் தொடர்ந்து வரும் பதிலுரைப் பாடலுக்கு வாசக நூலில் உள்ள பதிலுரைத் திருப்பாடலையே பாடவேண்டும். அதே திருப்பாடல் ஏற்கெனவே இசையமைக்கப்பட்டுள்ள ஒரு தியானப் பாடலாக இருப்பின் அதைப் பாடலாம்.
காணிக்கைப் பாடல்:
நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான அப்ப, இரசம் உள்ளிட்ட காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பதற்காகப் பவனியாகவோ பவனியின்றியோ பீடத்திற்குக் கொண்டுவரும்போது பாடுவது.
திருவிருந்துப்
பாடல்:
நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மிக ஒற்றுமையை வெளிப்படுத்தவும், உள்ளத்து மகிழ்ச்சியை எடுத்துக்காட்டவும், பவனியாகச் செல்பவரின் குழும இயல்பைத் தெளிவாக வெளிப்படுத்தவும் அமையும் பாடல் (‘கிறிஸ்துவின் ஆத்துமமே’
என்ற பாடலை ஒவ்வொரு திருப்பலியிலும் பாடவேண்டுமென்ற கட்டாயம் இல்லை).
நன்றிப்பாடல்:
நற்கருணை விருந்திற்குப் பின், ‘திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு’க்கு முன் அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சிறிது நேரம் அமைதியாகச் செபித்த பின் இறைவனுக்கு நன்றிகூறுவதற்காகப் பாடப்படும் ஒரு திருப்பாடல் அல்லது புகழ்ச்சிப் பாடல்.
இறுதிப்பாடல்:
திருப்பலியின் இறுதியில் அருள்பணியாளர் திருக்குழுமத்திற்கு ஆசி வழங்கி, நற்செய்தியை அறிவிக்கவும், நற்பணி செய்யவும் திரும்பிச் செல்லும்படி அதை அனுப்பியபின் பாடுவதற்கு உரோமைத் திருப்பலி நூலில் ஏற்பாடு எதுவும் இல்லை (மக்கள் கலைந்து செல்லும்போது அன்னை மரியா / புனிதர்களின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுவதும் ஏற்புடையதல்ல; அந்நேரத்தில் பொருத்தமான இசையை மட்டும் இசைப் பெட்டியில் வாசிப்பது உகந்தது).
6) திருவழிபாடு
திரு அவையின் ‘தனிநபர் கொண்டாட்டம்’ என்றல்லாமல்,
‘பொதுக் கொண்டாட்டம்’ என்பதால்
அதில் இடம்பெறும் திரு இசையும், திரு அவையினுடைய மரபு மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் பின்பற்றியிருக்க வேண்டும் (காண்: 2-ஆம் வத்திக்கான் சங்கம். திருவழிபாடு, எண்: 112-121; உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை, மூன்றாம் மாதிரிப் படிவம், 2017, எண்: 40-41, 47-48, 61, 74,
86 - 88 அன்பின் அருளடையாளம் (Sacamentum Caritatis, 2007), எண் : 42 - 70; ஆண்டவரின்
அருள்வாக்கு, (Verbum Domini, 2010), எண்:
69.
3. அனுமதிபெற வேண்டிய வழிமுறைகள்
ஆலய
வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பாடல்கள், இராகங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றைத் தீர்மானிப்பதும் அனுமதிப்பதும் அவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதும் ஆயர் பேரவையின் பொறுப்பாகும் (காண்: உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை, 2017, எண்: 48 - 393). இந்தியாவில் திருவழிபாடு சார்ந்தவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பை அந்தந்த மண்டல ஆயர் பேரவைக்கு இலத்தின் ஆயர் பேரவை வழங்கியுள்ளது. சில நாடுகளின் ஆயர் பேரவைகள் (கனடா, வட அமெரிக்கா, மலேசியா)
இசை அமைப்பாளர்கள் தங்களின் திரு இசைக்கு அனுமதி பெறுவதற்காக வழங்கியுள்ள கீழ்க்காணும் விதிமுறைகள் மாதிரிக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. ஓர்
இசை அமைப்பாளர் தனது இடத்து ஆயருக்குத் தனது படைப்புகளை அனுப்ப வேண்டும். 2. அதை, அந்த ஆயர் தமக்குரிய ஆயர் பேரவை திருவழிபாட்டுப் பணிக்குழுவிற்கு மேலனுப்ப வேண்டும். 3. மேற்காணும் திருவழிபாட்டுப் பணிக்குழு அனுப்பப்பட்டுள்ள திரு இசைப்பாடல்களை மேற்கூறப்பட்டுள்ள திரு இசையின் பண்புகளின்படி ஆராய்ந்து அவற்றின் தகுதியைப் பற்றிய கருத்தை மறைமாவட்ட ஆயருக்குத் தெரிவிக்க வேண்டும். 4. அக்கருத்தைப் பெற்றவுடன் மறைமாவட்ட ஆயர் திரு இசைப்பாடல்கள் அனுப்பிய இசை அமைப்பாளருக்கு ‘அனுமதி வழங்கப்படுகிறது’ / ‘மறுக்கப்படுகிறது’
என்ற பதிலை அனுப்ப வேண்டும். 5. மறைமாவட்ட ஆயர் அனுமதி வழங்கும் திரு இசைப் பாடல்களின் காப்புரிமை (Coyright) மறைமாவட்டத்திற்கு
உரியது. அப்பாடல்கள் மறைமாவட்ட டிஜிட்டல் கருவூலத்தில் சேமிக்கப்படும். அவற்றைக் கத்தோலிக்க இறைமக்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவற்றையே ஆலயப் பாடல்களாகப் பயன்படுத்தவேண்டும். 6. தனிச்சுற்றுக்காக வெளியிடப்படும் ஒலி நாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளிலிருந்து பாடல்களை ஆலயங்களில் பாடுவதற்கும் மேற்கண்ட முறையான அனுமதி பெற்றிருக்கவேண்டும்.
4. இறுதியாக...
மேலே
குறிப்பிடப்பட்டுள்ள திரு இசையின் பண்புகளை உள்வாங்கி இசை அமைக்கப்பட்டு வெளியிடப்படும் அருமையான ஆலயப் பாடல்கள் உள்ளன. அதேவேளையில், திருவிவிலியத்திலும், இறையியல் கோட்பாட்டிலும் வேரூன்றி இல்லாத, இறைவனின் பெயரை விளித்து எழுதப்படாத, நம்பிக்கையாளர்களின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்தாத பண்களும், திருக்குழுமம் அனைத்தும் பங்குகொள்ள இயலாத, சினிமா/பாட்டுக் கச்சேரிப் பாடல்களின் இராகங்களைப் பிரதிபலிக்கும் இசையும் கொண்ட பாடல்கள் ஆலயப் பயன்பாட்டிற்காக வியாபாரப் போட்டியுடன் புதிது புதிதாக இறக்கப்படுகின்றன என்பதையும் மறுக்கமுடியாது. இந்நிலையில், தமிழ்நாடு ஆயர் பேரவை திரு அவை ஆசிரியப் படிப்பினைகளின்படி ஆலயப் பாடல்களை இயற்றுவதற்குரிய விதிமுறைகளை வெளியிட்டு, அனுமதி வழங்கி, கண்காணிப்பு செய்து திரு இசையின் தரத்தையும் மாண்பையும் உறுதிப்படுத்த வேண்டுமென்பதே எமது வேண்டுகோள்.