பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு, பாம்பன் பாலத் திறப்பு விழாவிற்கு விமானத்தில் பறக்கிறார். பறந்த பின் மோடி தன் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிடுகிறார்: ‘இராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், இலங்கையிலிருந்து திரும்பும்போது வானத்திலிருந்து இராமர் சேதுவைக் காணும் தெய்வீகப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதேநேரத்தில் அயோத்தியில் இராம் லல்லாவின் சூரிய திலக விழாவையும் காண முடிந்தது. ஸ்ரீ இராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் இருக்கட்டும்.’
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் பிரிவு பா.ச.க.வுக்கு எல்லா நிகழ்வுகளுமே மதவாதம்தான்! மத அடிப்படைவாதம்தான்! மதச்சார்பற்ற குடியரசு
என அரசமைப்புச் சட்டம் தன்னைப் பிரகடனப்படுத்துகிற நாட்டில், பிரதமரே இப்படி மதச்சார்பில் பேசலாமா? என்ற கேள்வி எழுகிறது.
பா.ச.க.வின்
ஒன்றிய ஆட்சி அதிகாரம் என்ற கதையில் ‘இராமர் கோவில்’ என்பதே முக்கியப் பங்காற்றியது. உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில், இந்த இராமர் வெறி வாக்குகள் பெறத் தொடர்ந்து காக்கப்படுகிறது. பா.ச.க.வின் இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்த அரசியலில் சிறுபான்மையோர்
நசுக்கப்படுகிறார்கள்
என்பதே கொடிய மறுபக்கம். பா.ச.க.வின் மதவாத அரசியல் காலத்தே ‘வியாபம்’ ஊழல் நீட்சி பெறுகிறது. மாநிலங்களில் விருப்பத் தெய்வங்களை முன்னிறுத்திய மதவாத அரசியல்போக்குத் தீவிரமடைகிறது.
ஒடிசா
சட்டமன்றத் தேர்தல் காலம். 2000 முதல் 2024 வரை பிஜூ சனதாதளத்தைச் சார்ந்த நவீன் பட்நாயக் மாநில முதல்வராக அசைக்க முடியாமல் இருந்தார். “பூரி செகநாதர் ஆலய இரத்னபந்தரின் பொக்கிஷ அறைச் சாவிகளைக் காணவில்லை; அச்சாவிகள் தமிழ்நாட்டில் உள்ளது” எனப் பா.ச.க.
மதவாதப் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. நவீன் பட்நாயக் அவர்களுக்கு மாநில வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் எல்லாமுமாக இருந்த குடிமைப்பணி அதிகாரி தமிழர் வி.கே. பாண்டியனை
அது மறைமுகமாகக் குற்றம்சாட்டியது. ஒரு படி மேலே சென்று ‘ஒடிசாவைத் தமிழர் ஆள்வதா?’ என்ற பிரச்சாரமும் நடந்தது.
மேலும்,
வி.கே.பாண்டியனை முன்னிறுத்தி,
தமிழரின் உணவுமுறையைக் கேலி செய்த காணொளியைப்
பாச.க.வினர் சமூக
வலைதளங்களில் வெளியிட்டனர். நாகரிகமற்ற அரசியல் செய்தனர். ஒடிசாவில் ஆட்சியைப் பா.ச.க.
பிடித்தது.
2023-இல் கர்நாடகா
தேர்தல் நிலவரங்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தியது. பா.ச.க.
வெற்றியைத் தந்திரமாகப் பறிக்க ‘ஜெய் ஹனுமான்’ என்ற முழக்கத்தோடு ஹனுமான் யாத்திரைகளை நடத்தினார்கள்.
காங்கிரஸ் விழித்தது. ஆட்சியைப் பா.ச.க.விடமிருந்து கைப்பற்றியது.
மேற்கு
வங்கத்திலும் மகாராஷ்டிராவைப்போல விநாயகர் சிலை வழிபாட்டைப் போல காளி பூசையின்போது ஆண்டுதோறும் காளி சிலைகளை அதிகப்படுத்துகிறார்கள். மம்தா அம்மையார் கூட மதவாத அரசியலுக்குத் தப்ப முடியாது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். மகாராஷ்டிரா அரசியலில் பாலகங்காதர திலகர் காலம் முதல் இன்றுவரை விநாயகர் சிலை அரசியலே பா.ச.க.வை நிலை நிறுத்துகிறது.
2024-ஆந்திரத் தேர்தலுக்குப் பா.ச.க.
எடுத்தது இலட்டு அரசியல்! திருப்பதி பிரசாத இலட்டு தயாரிப்பில் நெய்யுடன் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது ஆகம விரோதம் என எகிறிக் குதித்தார்கள்.
பதவியேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நெய் வழங்கிய நிறுவனங்கள் வட இந்தியாவைச் சார்ந்த
காவிகள் என்றவுடன் அமைதி அடைந்தார். ஆனால், இது குறித்துக் கேலிச்சித்திரம் பதிவிட்டவரைத் தண்டித்தது ஆந்திர மாடல் அரசியல். வட மாநிலங்களில் மாட்டுக்
கறி வைத்திருந்தார்கள், மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்று விளிம்புநிலை மக்கள், பா.ச.க
ஆட்சியில் கொடுமைப்படுத்தப்பட்ட நிலை தேசத்தின்
பெரும் சாபம். உணவு உரிமை மதவாதத்தின் பெயரால் மறுக்கப்பட்ட சமூக அவலம்.
கேரளாவில்
சபரிமலைக்குப் பெண்களை அனுமதிக்கலாம் என்றது நீதிமன்றம். பெண்கள் சென்றால் தீட்டாகிவிடும் எனத் துடித்தது பா.ச.க.
கேரள இடதுசாரி அரசு பால் சமத்துவத்தைத் தூக்கிப் பிடித்து வென்றது. பா.ச.க.வின் எந்த
ஓர் அசைவிற்கும் இணையாத தமிழ்நாடு
அரசியலில் ‘தமிழ்க் கடவுள்’ எனக் கொண்டாடப்படும் முருகனைத் துணைக்கு அழைக்கின்றனர். முருகன் இவர்கள் சனாதன நெறியில் கூறப்படாத கடவுள்.
அன்றைய
பா.ச.க. தலைவர்
எல். முருகன், 2021, ஜனவரி 6-இல்
திருப்பரங்குன்றத்தில்
வேல் யாத்திரையைத் துவங்கினார். 2025, பிப்ரவரி 11-இல்
பழனிமலை முக்கோணத்தில் அன்றைய பா.ச.க.
தலைவர் அண்ணாமலை மயில் காவடி எடுத்தார். இம்முறை பா.ச.க.,
தான் களம் இறங்காமல் தன் குட்டியை விட்டுப் பதம் பார்க்கிறது. திருப்பரங்குன்றம் குறித்து உயர்நீதிமன்றத் தீர்ப்பு, மத நல்லிணக்கம் சார்ந்ததாக
உள்ளது. பா.ச.க.
புலிவால் பிடித்த கதையாகி விடுமோ? என இந்து முன்னணி
அமைப்பைக் களம் இறக்கியது. மாநாடு வெற்றிக்காக உள்துறை அமைச்சர், பா.ச.க.வோடு இந்துத் துவா சங்பரிவார் அமைப்புகளை இணைத்துக் கூட்டம் போட்டது, இந்த மாநாட்டிற்குப் பா.ச.க.
அளித்த முக்கியத்துவத்தை
உணரலாம்.
2025, ஜூன் 22 அன்று
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டை ஆன்மிக மாநாடாக மட்டுமே நடத்தவேண்டும், அரசியல் கலப்பு கூடாது என உயர்நீதிமன்றம் நிபந்தனையிட்டது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி வருவார் என்றார்கள். பின் நடிகர் ரஜினி என்றார்கள். ரஜினி ‘உங்கள் விளையாட்டில் இனி நான் இல்லை’ என்று கூறி மறுத்தார். இறுதியில், அம்பேத்கர் குறித்துக் கட்சி துவக்க நாள்களில் பேசி, தற்போது முழுக் காவியாகிவிட்ட ஆந்திரத் துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். பவன் மதமாற்றம் குறித்து எழுதிக் கொடுத்ததை எந்தப் புரிதலும் இல்லாமல் பேசியது விவாதமானது.
தமிழ்நாடு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மதுரை முருகன் மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்து முன்னணி முருகன் மாநாட்டில் ஒலி, ஒளி பரப்பிய தன் அமைப்புக் குறித்த காணொளியில் பெரியார், அண்ணா குறித்த கடுமையான விமர்சனத்தை வைத்தனர். முருகன் மாநாட்டிற்குச் சென்ற நான்கு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களும் அமைதியாக
அமர்ந்து இருந்தது, பொதுவெளியில் பேசுபொருளானது. ‘2026-இல் மாற்றம் வரும், மாற்றத்தை முருகன் மாநாடு கொண்டு வரும்’ என்ற பேச்சுகளே அதிகமாக இருந்தது. முருகன் மாநாட்டில் ‘பாரத் மாதாவுக்கு ஜே’ என்ற முழக்கம் ஏன்? எனக் கேள்விகள் பொதுமக்களால் கேட்கப்பட்டன.
முருகன்
மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். சாயம் கொண்ட அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதினங்கள் அடையாளம் காணப்பட்டனர். புல்டோசர் யோகியைப் புகழ்ந்து பலர் பேசினர். ‘சங்கி’ என்றால் ‘சங்கம் வைத்தவன்’
என்ற புதிய கருத்தை இந்து முன்னணித் தலைவர் காடேஸ் வரா சுப்ரமணியம் கூறியது கேலிப்பொருளானது. அண்ணாமலை ‘நாட்டில் இரு வகையான சட்டங்கள் எதற்கு?’ என்றார். நயினார் ‘மூன்றாவது மொழி படியுங்கள்’ என
அறிவுரை வழங்கினார். முருகன் மாநாட்டில் ஆறு தீர்மானங்களில் 5-வது தீர்மானம் ‘இந்து மக்கள் ஒரே வாக்கு வங்கியாகத் திரள வேண்டும்’
என்ற பா.ச.க.வின் மதவாத, வாக்கு வங்கி அரசியலை வெளிக்கொணர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது மாநாட்டுக்கான உயர் நீதிமன்ற நிபந்தனை மீறல், நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறப்படுகிறது.
முருகன்
மாநாடு குறித்து மதுரை மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களது கருத்து என்ன? மதுரையிலுள்ள வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அனைத்துத் தமிழ்நாடு மக்களுக்கு விடுக்கும் அறைகூவல் இதுதான்: “இந்து, முசுலிம், கிறித்தவம் உள்ளிட்ட மதங்கள் அமைதியாகவும் பல்லாயிரம் மக்கள்
ஒற்றுமையுடன் திரளும் கள்ளழகர் திருவிழா சமண, புத்த, குலத்தெய்வ வழிபாட்டையும், தொன்மை வரலாற்றை, மதநல்லிணக்கத்தை அடையாளம் கொண்ட மாமதுரையின் சமத்துவச் சகோதரத்துவ மரபை மதுரை மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கவேண்டும். தமிழ்நாட்டின் மரபை, மாண்பைச் சீர்குலைக்க முயலும் மதவெறிச் சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.”
அரசு,
மதவாதத்தை முளையிலே கிள்ள வேண்டும் என்பதே சிறுபான்மை மக்களின் கனிவான வேண்டுகோள்.