இந்திய மண்ணில் விடுதலைக் காற்று நம் வீதிகளில் உலா வரும் முன், பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தி மொழியின் வாடை நம் வாசல்களில் வசந்தமாகிட திட்டங்கள் தீட்டப்பட்டன.
1937-இல் ‘பிரீமியர்’ என்று
அழைக்கப்படும் மாகாண முதல்வராக இராஜாஜி பொறுப்பேற்றபோதே, இந்தியாவின் பொதுமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்பது காந்தியின் விருப்பமாக இருந்திருக்கிறது. காந்தியின் விருப்பப்படி தமிழ்நாட்டில் இந்தியைப் பரப்பவும், தன் ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணிக்கவும் தீவிரமாக முற்பட்டவர் மூத்த அறிஞர் இராஜாஜி. இந்தியை இம்மண்ணில் பரவலாக்க ஆசை கொண்ட அவரே, பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, 1962, ஜூன் 16-ஆம் நாள் ‘சுயராஜ்ஜியா’ இதழில்
‘பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாக நீடிப்பது நல்லது’ என்று எழுதினார்.
அவ்வாறே,
சுதந்திரத்திற்குப் பின்பு ஓமந்தூரார் ஆட்சியில் மீண்டும் இந்தித் திணிப்பு நடந்த வேளையில், 1948-இல் பெரியார், இந்தியைத் தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினார். இந்தியை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்ட அவர், “எனது இந்தி எதிர்ப்பு என்பது ‘இந்தி கூடாது’ என்பதற்காகவோ, ‘தமிழ் வேண்டும்’
என்பதற்காகவோ அல்ல; மாறாக, ஆங்கிலம் பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழனின் வீட்டு மொழியாக வேண்டும் என்பதற்காகவே. ஆகவே, வீட்டில் உங்கள் மனைவியுடன், குழந்தைகளுடன், வீட்டுப் பணியாளர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்” என்று
1969, ஜனவரி 27-ஆம் நாள் ‘விடுதலை’ இதழில் எழுதினார்.
இந்திக்கு
எதிராக மாணவர் போராட்டம் 1965-இல் பெருந்தீயாக மாநிலம் முழுவதும் பற்றி எரிந்த போது இராஜாஜி, “English ever, Hindi never” என்று முழங்கினார். “ஆங்கிலம் இந்தியருக்கு சரஸ்வதி வழங்கிய அருள் கொடை” என்று வர்ணித்தவர், “ஆங்கிலம் மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாகவும், மாநிலங்களின் இணைப்பு மொழியாகவும் இருக்க வேண்டும்”
என்றும் முழங்கினார். மேலும், இந்த ஒன்றில்தான் தானும் பெரியாரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
கருத்து
முரண்பட்டு அரசியல் செய்த அன்றைய ஆளுமைகளே, ஆங்கிலம் பொதுமொழியாகவும் அலுவல் மொழியாகவும் நம் வீட்டு மொழியாகவும் வளர வேண்டும் என்று மனதார விரும்பினர். ஆனால், மாநிலங்களை ஒன்றிணைத்து உறவுப் பாலம் அமைக்க வேண்டிய ஒன்றிய உள்துறை அமைச்சர் பிரிவினைவாதியாகவே செயல்படுகிறார். மதத்தையும் மொழியையும் முன்னிறுத்தி அரசியல் செய்யும் பா.ச.க.,
மானுட உலகிற்கே முரண்பட்ட கருத்தியலையே முன் வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியத்தில் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களுக்கும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்ற 343-இன் 2-வது விதி, ஒன்றிய அமைச்சருக்கு ஏனோ தெரியாமல் போனது!
அண்மையில்,
டெல்லியில் நடைபெற்ற அசுதோஷ் அக்னிஹோத்ரி என்னும் ஐ.ஏ.எஸ்.
அதிகாரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்; அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று பேசியிருக்கிறார். அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “ஆங்கிலம் ஓர் அணை அல்ல; அது ஒரு பாலம். ஆங்கிலம் ஓர் அவமானம் அல்ல; அது ஓர் அதிகாரம் அளிப்பதாகும். ஆங்கிலம் ஒரு சங்கிலி அல்ல; அது சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவியாகும்” என்று
எதிர்வினை ஆற்றியுள்ளார்.
மேலும்,
“இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதைப் பா.ச.க.,
ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என்றும் ஏனென்றால், ஏழைக் குழந்தைகள் கேள்விகள் கேட்க, முன்னேற, போட்டியிட அவர்கள் விரும்புவதில்லை என்றும், இன்றைய உலகில் ஆங்கிலம் நம் தாய்மொழியைப் போலவே முக்கியமானது; ஏனெனில், அது வேலைவாய்ப்பை வழங்கும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்றும்
தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பை வழங்கும் இந்தியாவுக்கான வழி இதுதான்” எனவும் தெரிவித்துள்ளார்.
“நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள்”
என்று குறிப்பிட்ட அமித்ஷா, “வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு இந்தியாவை நாம் கற்பனைகூட செய்ய முடியாது”
என்றும், “காலனித்துவ
அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள ஆங்கிலம் உலகம் முழுவதும் வெறுக்கப்படும்” என்றும்,
“அரைகுறையான
அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாது”
என்றும் தெரிவித்துள்ளார்.
மொழிகள்
கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கூறுகள் என்று அவர் கருத்துத் தெரிவித்திருப்பது, பா.ச.க.-வின், ஆர்.எஸ்.எஸ்.-இன் கருத்தியலுக்கு முரண்பட்டிருப்பதை ஏனோ அவர் அறியாமலிருக்கிறார்.
ஒவ்வொரு
மொழியும் அவை பேசப்படும் மாநிலத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கூறுகள் எனப் பேசும் அவர், அந்த மாநிலத்தின் தனிச்சிறப்புக் கொண்ட மொழியை, தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை அங்கீகரிப்பதில்லை. ‘மும்மொழிக் கொள்கை’ என்ற போர்வையில் அதைச் சிதைப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தைக் காலனித்துவத்தின் அடையாளமாகவும், மேலைநாட்டு மொழிகள் அரைகுறையானவைகள் என்று குறிப்பிடுவதும் ஒருபுறம் அவருடைய அறியாமையையும், மறுபுறம் பதவி அதிகாரத்தையும் அடையாளப்படுத்துகிறது.
வரம்புமீறிய
அதிகாரத்தின் ஆபத்துகள் குறித்து ஆங்கில எழுத்தாளரும் அரசியல்வாதியுமான லார்டு ஆக்டன் கூறிய, “அதிகாரம் தவறு செய்ய முனைகிறது; முழுமையான அதிகாரம் முற்றிலும் தவறு செய்கிறது”
என்னும் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.
ஆங்கிலம்
இன்று உலகளாவியப் பொதுமொழியாக மாறிவருகிறது; உலகில் அதிகம் கற்கப்படும் இரண்டாவது மொழியாகவும் தாய்மொழி பேசுபவர்களைவிட இரண்டாவது மொழி பேசுபவர்கள் ஆங்கிலத்தையே அதிகம் கொண்டிருப்பவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. 30 நாடுகளிலும், குடியுரிமைக்கான தனி இறையாண்மை கொண்ட 57 நிர்வாகப் பகுதிகளிலும் ஆங்கிலம் பரவியிருப்பதோடு அறிவியல், அரசியல், தொழில்நுட்பம், உலக வர்த்தகம், சுற்றுலா, விமானப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, இணையம், கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என எல்லாத் தளங்களிலும்
இன்று ஆங்கிலம் அடிப்படை மொழியாகப் பரிணமித்திருக்கிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேசக் கூட்டமைப்புகளின்
அதிகாரப்பூர்வ மொழியாகவும் இருக்கின்றது.
2021- ஆம் ஆண்டு
புள்ளிவிவரப்படி உலக அளவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆங்கிலம் பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புப் பெற்ற மொழியை ‘அடிமைத்தனத்தின் குறியீடு’
என்றும், ‘அரைகுறையான மொழி’ என்றும் குறிப்பிடும் ஒன்றிய உள்துறை அமைச்சரை என்னவென்று கூறுவது?
1959, ஆகஸ்டு 7 அன்று
இந்தியாவின் ஆட்சி மொழி குறித்து நிகழ்ந்த நாடாளுமன்ற விவாதத்தில், “கால வரம்பின்றி ஆங்கிலம் ஒரு கூடுதல் மொழியாக நீடிக்க வேண்டும்; மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஒரு மாற்று மொழியாக இருந்திட வேண்டும். இது தொடர்பாக முடிவு செய்யும் பொறுப்பை இந்தி பேசாத மக்களிடமே விட்டுவிட வேண்டும்”
என்று நேரு வழங்கிய உறுதிமொழியை, இன்றைய ஒன்றிய உள்துறை அமைச்சர் ஏனோ அறியாமலிருக்கிறார்?
இந்தி
மொழி அறியாமல், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கும் இந்தியாவில், இந்தியைக் கட்டாயமாக்கி ஆட்சி மொழியாக்கிடத் துடிக்கிறது பா.ச.க.
அரசு. ஆனால், பல்வேறு மொழி வழி மக்கள் தங்கள் தாய் மொழியோடு ஆங்கிலத்தை அறிந்திருக்கும் சூழலில், அதை இணைப்பு மொழியாக்குவதில் இந்த அரசு எந்த ஒரு முனைப்பும் காட்டுவதில்லை.
‘அகண்ட பாரதத்திற்கு இந்தி அவசியம்’ என்று முழங்கும் இவர், அகண்ட உலகிற்கு ஆங்கிலம் அவசியமானதாகப் பரிணமித்திருப்பதை, ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்