news-details
ஆன்மிகம்
“எதிர்நோக்கை வலுப்படுத்தும் செய்திகளைக் கூறுங்கள்!” (திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 59-வது சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தி)

உங்கள் உள்ளங்களில் உள்ள எதிர்நோக்கைப் பணிவோடும் மரியாதையோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் (1பேதுரு 3:15-16).

அன்புமிக்க சகோதரர்களே, சகோதரிகளே,

தவறானவையும் துருவப்படுத்தும் தன்மை கொண்டவையுமான சில மையங்கள் இதற்கு முன் இல்லாத அளவுக்குத் தகவல்களையும் தரவுகளையும் இன்று தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளன. நமது இந்தக் காலத்தில் இவற்றின் விளைவுகளை நன்கு அறிந்தவன் என்ற முறையில் இதழியலாளரே, தொடர்பாடல் பணியில் ஈடுபட்டிருப்போரே உங்களுடன் உங்கள் தொடர்பாடல் பணிகளைக் குறித்துப் பேசுவது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.

அருளின் காலமாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் 2025-ஆம் ஆண்டு யூபிலியைக் கொண்டாடும் இவ்வேளையில், பலவிதமான சிக்கல்களுக்கு மத்தியில் எதிர்நோக்கின் தொடர்பாளர்களாக நீங்கள் செயல்பட இச்செய்தியின் வழியாக அழைப்பு விடுக்கிறேன். இது நற்செய்தியின் ஒளியில் உங்கள் தொடர்பாடல் பணிகளையும் நற்செய்தி அறிவிப்புப் பணியையும் புதுப்பித்துக்கொள்ள வழிவகுக்கும் என நம்புகிறேன்.

தொடர்பாடலை நிராயுதபாணியாக்குதல்

இன்றைய உலகில் தொடர்பாடல் செயல்பாடுகள் எதிர்நோக்கைத் தோன்றச் செய்வதற்குப் பதிலாக அச்சம், விரக்தி, முன்சார்பு எண்ணங்கள், எதிர்ப்பு, மத, இனவெறி போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றன. உண்மையை உள்ளபடி எடுத்துரைப்பதற்குப் பதிலாக மனிதரின் இயல்பு ஊக்கச் செயல்பாடுகளைத் தூண்டி எழுப்புவதாகவே, பல தொடர்பாடல் செயல்பாடுகள் பலவேளைகளில் அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாகசவரக்கத்திபோன்ற கூர்மையான சொற்கள் தொடர்பாடலில் எதிர்வினையைத் தூண்டுபவைகளாக அமைந்து விடுகின்றன. குழப்பத்தையும் காயப்படுத்துதலையும் உருவாக்கும் நோக்கத்தோடு இன்று தவறான, செயற்கையான, சிதைக்கப்பட்ட தகவல்கள் பிறருக்கு ஊடகங்கள் வழியாக வழங்கப்படுகின்றன. இதைக் குறித்தே தொடர்பாடலை நிராயுதபாணியாக்க வேண்டும் எனவும், பிறரைத் தாக்கும் போக்கிலிருந்து தொடர்பாடலை மீட்டெடுக்க வேண்டும் எனவும் நான் பலமுறை கூறியுள்ளேன்.

எதார்த்தமான ஓர் உண்மையை ஒரு வெற்று முழக்கமாகக் குறைத்துவிடுவது பயனற்றது. இன்று பல்வேறு தொலைக்காட்சிகளில்டாக்ஷோஎனப்படும் தன்னிச்சையான உரையாடல் நிகழ்ச்சிகளிலும், சமூக ஊடகப் பகிர்வுகளிலும் போட்டிகள், பிறரை எதிர்த்தல், பிறரைச் சிறுமைப்படுத்துதல் போன்ற சிந்தனைச் சட்டக நிகழ்வமைப்புகள் இடம் பெறுகின்றன. இவற்றில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் பிறரது கருத்துகள் மீது ஆதிக்கம் செலுத்தி, தகவல்களைக் கையாடல் செய்து, தம் கருத்தே சிறந்தது என நிலைநாட்ட முயல்வதால் தாம் விரும்பியபடியே மேற்கொள்ளப்படுகின்றன. பொதுக்கருத்தை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மற்றொரு பிரச்சினைக்குரிய செயல்பாடும் உள்ளது. மேற் கூறியவற்றை எண்ணிம அமைப்புகள் வழியாகத் திட்டமிடப்பட்ட கவனச்சிதறலைத் தோற்றுவிப்பது. நம்மையும், எதார்த்த உண்மையையும் பொருளாதாரச் சந்தைக் குறியீடுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக நம்மை அறியாமலேயே ஒரு தானியங்கி செயல்பாட்டு முறையை நமது உலகிலும், நம் வாழ்விலும் காண்கிறோம். இதனால் நமது இருப்புத்தன்மையின் அடித்தளமும், மனிதரின் சமூக வாழ்வும் ஒருசிலரின் விருப்பங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவதால் பொதுநன்மையைத் தேடி அதை நிலைப்பெறச் செய்தல், ஒருவர் மற்றவருக்குத் திறந்த மனத்துடன் செவிசாய்த்தல், பிறரது கருத்துகளை அறிந்து புரிந்துகொள்ளுதல் போன்றவை இயலாதவையாகின்றன. இதனால் நம்மை இவ்வுலகில் நிலைநிறுத்த வேண்டுமெனில், ஒரு பகைவனை உருவாக்கம் செய்து, அவனுக்கு எதிராக வசைபாடி அவனைத் தூற்றுதல் மிகவும் அவசியமாகத் தோன்றுகின்றது. இவ்வாறு மற்றவர்கள் நமது பகைவர்களாகக் கருதப்படும்போது, அவர்களது தனித்தன்மையும் மாண்பும் போற்றப்படாதபோது எதிர்நோக்கை உருவாக்கும் வாய்ப்பை நாம் இழந்துவிடுகிறோம். தொன்பெல்லோ என்பவர் குறிப்பிட்டுள்ளபடிதனிமனிதர்களின் முகங்கள் கரைந்து காணாமற்போகும்போது எதிர்ப்புகளும் மோதல்களும் உருவாகின்றன.’ இந்த மனநிலைக்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.

எதிர்நோக்கு என்பது எளிதானது அல்ல; ஜார்ஜ் பெர்னானோஸ் என்பவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளதுபோல, ‘எதிர்நோக்கிற்குக் காரணிகளாகத் தாங்கள் ஏற்கெனவே தவறாகக் கருதியவை வெறும் மாயையேயன்றி உண்மையல்ல என்று உணர்ந்து வெட்கப்படவும், தைரியம் உள்ளவர்களே உண்மையான எதிர்நோக்கும் திறன் கொண்டவர்களாவர். எதிர்நோக்கு என்பது சவாலானது. இதைச் சவால்களுக்கெல்லாம் சவால் என்றும் கூறலாம். எதிர்நோக்கு என்பது ஒரு மறைவான நற்பண்பு. இது உறுதியானது. பொறுமையுள்ளது. கிறித்தவர்களுக்கு இது ஒரு விருப்ப நற்பண்பு அல்ல; மாறாக, இது மிகவும் அவசியமானது. ‘ஸபே சால்விஎன்ற ஏட்டில் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் குறிப்பிட்டுள்ளதுபோல, “எதிர்நோக்கு ஏதோ நல்லது நடக்கும், நடக்கட்டும் என்ற செயலற்ற காத்திருத்தல் அல்ல; மாறாக, இது நம் வாழ்வை மாற்றக்கூடிய செயலாக்கம் கொண்டது. எதிர்நோக்கு கொண்டுள்ள ஒருவர் வித்தியாசமாக வாழ்கிறார். இவ்வாறு எதிர்நோக்குபவருக்குபுதுவாழ்வுஎன்னும் கொடை கொடுக்கப்படுகிறது(எண் 2).

பணிவோடும் மரியாதையோடும் உங்கள் எதிர்நோக்கிற்கு விளக்கம் கூறுங்கள்

எதிர்நோக்கிற்கும், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்தலுக்கும் தொடர்பாடலுக்குமுள்ள போற்றத்தக்கத் தொடர்பை புனித பேதுருவின் முதல் கடிதத்தில் (3:15-16) காண்கிறோம். “உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாரேனும் விளக்கம் கேட்டால் விடையளிக்க, நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடையளியுங்கள்.” இப்பகுதியிலிருந்து நாம் சேகரிக்கக்கூடிய மூன்று செய்திகளை இங்குக் காண்போம்.

முதலில்உங்கள் / உங்களில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்.” கிறித்தவர்களின் எதிர்நோக்கிற்கு ஒரு முகம் இருக்கிறது. உயிர்த்த ஆண்டரின் முகமே அது. தூய ஆவியாரின் வழியாக அவர் நம்மோடு இருப்பதாக அவர் கொடுத்த வாக்குறுதி நம்மை எதிர்நோக்க இயலாத சூழ்நிலைகளிலும் நாம் எதிர்நோக்கி இருக்க நமக்கு வலுவூட்டுகிறது. ‘எல்லாம் இழப்பேஎன்று தோன்றும் குழலிலும் அங்கே மறைந்திருக்கும் நன்மைகளைக் கண்டறிய இந்த எதிர்நோக்கு நமக்கு வழிவகுக்கிறது.

இரண்டாவது செய்தி நம்முள் இருக்கும் எதிர்நோக்கைப் பற்றி விளக்கிக் கூற நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே. நமது எதிர்நோக்கைப் பற்றி நம்மிடம் கேட்போருக்கு, விளக்கம் கூறத் தயாராக இருக்க வேண்டும். கிறித்தவர்களின் முதன்மைப் பண்பு கடவுளைப் பற்றிப் பேசுவது மட்டுமன்று; அவர்கள் கடவுளின் அன்பின் அழகை தம் வாழ்வில் எதிரொலித்து, எல்லாவற்றிலும் புதிய அனுபவத்துடன் வாழ்பவர்கள் என்பது முக்கியமானது. இவ்வாறு இவர்கள் அன்பை வாழ்வதாலேயே பிறர் இதைக்குறித்துநீங்கள் ஏன் இவ்வாறு வாழ்கிறீர்கள்?’, ‘நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று வினா எழுப்புகின்றனர்.

புனித பேதுருவின் சொற்களில் இறுதியாக மூன்றாவது செய்தியையும் காண்கிறோம். இந்த வினாக்களுக்கான நமது விடைபணிவோடும், மரியாதையோடும்வழங்கப்படவேண்டும். பொதுவாகத் தொடர்பாடல் சிறப்பாக, கிறித்தவர்களின் தொடர்பாடல் இந்தப் பதிலைத் தரவேண்டும். அவ்வாறு பதில் கூறும்போது சாலையில் நடந்து செல்லும் உடன் பயணிகளிடையே நிகழ்வது போன்று நமது பதில் மரியாதையோடும் நெருக்கமானதாகவும் இருக்க வேண்டும். சிறந்த தொடர்பாளராகிய நாசரேத்தூர் இயேசுவின் தொடர்பாடல் இவ்வாறே இருந்தது. அவர் எம்மாவு சாலையில் நடந்து சென்ற இரு சீடர்களோடு சேர்ந்து நடந்தார். அவர்கள் இதயம் பற்றி எரியும்படி அவர்களோடு பேசி, நடைபெற்ற நிகழ்வுகளை இறைவார்த்தையின் ஒளியில் விளக்கிக் கூறினார்.

(தொடரும்)