உலக இயக்கத்தின் இன்றியமையாத ஒரு மூலப்பொருளாக இருப்பது நீர். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருப்பதும் அதுவே! மானுடப் பயன்பாட்டிற்குப் பயன்தரும் நீர் உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும் உணவுத் தேவைக்கும் ஆதாரமானதாக அமைகிறது. அனைத்து உயிர்களுக்கும் உணவினை விளைவிக்கப் பயன்படுவது மட்டுமின்றி, தானும் உணவாக மாறும் தன்மை நீருக்கு மட்டுமே உண்டு! ஆகவே, மானுட வாழ்வியல் தேவைகளைக் குறிப்பாக, உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மூலக் காரணியாக நீர் அமைவதால், அதன் மேன்மையை அறிந்து, வள்ளுவப் பெருந்தகை நீரினை முதன்மைப் பொருளாக எண்ணி, ‘நீரின்றி அமையாது உலகு’ என்னும் குறளில், ‘நீர் மட்டும் இல்லையெனில் இந்த உலகில் எந்த உயிர்களும் வாழ முடியாது; இந்த உலகமும் மனித வாழ்க்கையும் நிலைபெறாது’ என்று பதிவு செய்கிறார். வான் நீர், நில நீர் என இரு பெரும் பிரிவுகளாக நீரின் ஆதாரத்தை, அதன் தன்மையை வகுத்துக் கொடுக்கும் வள்ளுவர் அந்நீரினை ‘அமிழ்து’ எனப் பெருமைபட வர்ணித்துப் பாடுகிறார். அத்தகைய நீர் தன்னிலே தூய்மையும் புனிதமும் கொண்டதாக இருக்கிறது என்கிறார்.
மானிடருக்குப்
புறத்தூய்மை மட்டுமல்ல, அகத்தூய்மையும் தருவது இத்தண்ணீரே! தண்ணீர் தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல், நம் உடலுக்கும் உறுப்புகளுக்கும் ஏராளமான, நலமான, வளமான நன்மைகளை வழங்குகிறது. நமது ஒட்டுமொத்த உடல்நலனில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பல வேளைகளில் நாம்
உணர்வதில்லை. தண்ணீர் இல்லை என்றால் ஒரே நாளில் வாடிவிடும் செடியைப்போல மனித உடலும் வாடிவிடுகிறது.
உடல்
வெப்பத்தைச் சீர்படுத்துவதும், செல்களுக்கு ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்வதும், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நிகழத் துணைபுரிவதும், உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிப்பதும், உடலில் நச்சுகளையும் கழிவுகளையும் அகற்றுவதும் தனது அடிப்படைப் பணியாக மேற்கொள்ளும் நீர், நமது உடலில் சீரான அளவில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நமது
மூளையில் இருக்கும் நீரின் அளவு 80 விழுக்காடு எனவும், இரத்தத்தில் உள்ள நீரின் அளவு 90 விழுக்காடு எனவும், தசைகளில் உள்ள நீரின் அளவு 75 விழுக்காடு எனவும் நீரின் இன்றியமையாதத் தேவையை மருத்துவம் பட்டியலிடுகிறது. உடல்நலனைப் பேண, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதேபோல போதிய அளவிற்குத் தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியமானதாகிறது.
ஆகவே,
சீரான நீர் நுகர்வுப் பழக்கங்களால் பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை பெற முடியும் என மருத்துவம் நம்பிக்கை
தெரிவிக்கும் சூழலில், 20 கிலோ எடைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் நாள் ஒன்றுக்கு நாம் தண்ணீர் குடிக்கவேண்டும் எனவும், குறிப்பாக, 60 கிலோ எடை உடையவர்கள் நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் எனவும் மருத்துவம் அறிவுறுத்துகிறது.
இத்தகைய
சூழலில், தமிழ்நாடு அரசு மாணவர் நலன் கருதி முன்னெடுத்திருக்கும் ‘வாட்டர் பெல்’
(Water bell)
திட்டம் மிகவும் பாராட்டத்தக்கது. உடலுக்கு நீர்ச்சத்து இன்றியமையாதது என்பதால் குறிப்பாக, படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் அது அவர்களது அறிவாற்றல், கல்விச் செயல்திறனை வெகுவாகப் பாதிக்கும் என்ற மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, கேரள மாநில அரசு பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் தொடரப்பட்டு, இன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கடந்த ஜூன் இறுதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளி செல்லும்போது கொடுத்து அனுப்பும் தண்ணீரை அப்படியே வீட்டுக்குக் குழந்தைகள் எடுத்து வருகிறார்கள் எனப் பெற்றோர் புலம்புவதுண்டு. ஆசிரியர்களும் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தொடர்ந்து வலியுறுத்திய போதும், தண்ணீர் குடிப்பதன் அவசியமும், அது பற்றிய புரிதலும் பள்ளிக் குழந்தைகளுக்கு எட்டாத சூழலில், அரசு மேற்கொண்டிருக்கும் இப்புதிய திட்டம், பெற்றோர்களிடம் மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வகுப்புகளுக்கு
மத்தியில் இடைவேளை நேரங்கள் கொடுக்கப்பட்டாலும், பல குழந்தைகள் தண்ணீர்
குடித்தும் குடிக்காமலும் வகுப்புக்கு வருவது கண்டறியப்பட்டு, இந்தத் திட்டம் அன்பான, அதேவேளையில் கண்டிப்பு நிறைந்த அறிவுறுத்தலாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி, காலை 11:00 மணி, மதியம் 1:00 மணி, பிற்பகல் 3:00 மணி என மூன்று முறை
தனியாக ஒலி எழுப்பி மாணவர்களைத் தண்ணீர் குடிக்க வைக்கலாம் என தமிழ்நாடு பள்ளிக்
கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தகைய
ஒலி எழுப்பப்பட்டவுடன், ஒருவிதமான விளையாட்டுச் செயல்பாடுபோல
மாணவர்கள் ஆர்வமாகத் தண்ணீர் குடிப்பதைத் தற்போது காணமுடிவதாகவும் ஆசிரியர்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
மாணவச்
சமுதாயத்தை உடல்நலம் மிக்கதாக வளர்த்தெடுக்க அரசும் சமூகமும் முன்னெடுக்கும் முயற்சிகள் வரவேற்கப்படும் சூழலில், இச்சமூகத்தில் சிலர் முரண்பட்டிருப்பது, அதன் அவல நிலையையே எடுத்துக்கூறுகிறது. மக்கள் பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த இழிச்செயலைக் கண்ட இச்சமூகம், இன்று அதன் உச்சமான அவலநிலையைக் கண்டிருப்பது வேதனையிலும் வேதனை!
திருவாரூர்
அடுத்த காரியாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட செயலைச் செய்த மூடர்களை என்னவென்று கூறுவது? காரியாங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயிலும் இப்பள்ளியில், காலை உணவுத் திட்டத்திற்குச் சமைப்பதற்காகச் சமையல் பணியாளர்கள் பள்ளிக்குச் சென்றபோது சமையல் அறையில் இருந்த பொருள்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததும்,
உணவுப் பொருள்கள் சிதறிக்கிடந்ததும், பள்ளி வளாகத்திலிருந்த வாழை மரங்கள் வெட்டப்பட்டிருந்ததும், தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கப்பட்டிருந்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக, குடிநீர் தொட்டியின் மூடி உடைக்கப்பட்டு அந்தத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்ததும், இந்தச் சமூகம் எங்கே போகிறது? என்ற கேள்வியையே முன்வைக்கிறது.
காவல்துறை
அதிகாரிகளின் விசாரணையில் “மூவர் மதுபோதையில் இந்த இழிசெயலில் ஈடுபட்டுள்ளனர்” என்ற
பதில் மிகுந்த வேதனை அளிப்பதோடு, தமிழ்நாட்டின் மதுபானக் கொள்கையும் சற்று மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற உண்மையையும் எடுத்துக்கூறுகிறது. ‘குடி குடியைக் கெடுக்கும்!’, ‘குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்ற எச்சரிக்கைகள் உண்மையாகிப் போயின என்பதற்கு, மற்றொரு நிகழ்வு இங்கு அரங்கேறியிருக்கிறது. ஒருமுனையில் ஒரு பருவத்தினருக்குக் குடிதண்ணீர் பருகுவதை உற்சாகப்படுத்தும் இந்த அரசு, மறுமுனையில் மற்றொரு பருவத்தினருக்குக் ‘குடி’யையும் உற்சாகப்படுத்தி வருவது வேதனைக்குரியது.
மதுநுகர்வின்
உச்ச நிலையில் ஒவ்வொரு மனிதனும் இம்மானுட மாண்பைச் சிதைப்பதோடு, மனித நேயமற்ற, வாழ்வியல் அறநெறி இல்லாத, கொடிய மிருகத்தனமான செயல்களை மேற்கொள்வதன் மூலம் சமூகத்தின் மாண்பையும் சிதைப்பது அவலத்தின் உச்ச நிலையே! ஆங்காங்கே நிகழும் இத்தகைய அவல நிலைகளில் மனிதனின் அடிப்படைத் தன்மையும், இயல்பு நிலையும் பெரும் கேள்விக்குள்ளாகிறது.
சுயநலத்தில்,
ஆணவத்தில், அகங்காரத்தில் சிக்குண்ட மனித இனம், சக மனிதர்களைப் பற்றிச்
சிறிதேனும் சிந்திக்க மனமில்லாமல் போனதை என்னவென்று கூறுவது? சக மனிதனைப் பற்றிச்
சிந்திக்க மனம் இல்லாதவன் எப்படிச் சமூக மனிதனாவான்? அறநெறி சிதைந்த வாழ்க்கையால் இன்று மக்களிடையே ‘மனிதம்’ முற்றுமாக மறைந்து போனது வேதனைக்குரியது.
“சக மனிதர்களின் நலனில்
நாட்டம் உள்ளவர்களால்தான் சமூகம் சிறப்புறும்” என்றனர்
நம் முன்னோர்கள். அவ்வாறே, கைம்மாறு கருதாத உண்மையான அன்பு, அடுத்தவர் நலன், பிறர் துன்பம் தீர்க்கத் துடிக்கும் அருள்கருணை, பகைவரிடத்திலும் வெறுப்பின் நிழல் படியாத பாசம், தன்னுயிர்போல் எல்லா உயிர்களையும் பாவிக்கும் பண்பு நலம் ஆகியவற்றின் கூட்டுறவில் பிறப்பதுதான் மனிதநேயம் என ஞானிகளும் சிந்தனையாளர்களும்
வரையறுத்துத் தந்தவை யாவும் இன்று இச்சமூகத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.
பள்ளிப்
பாலகர்களின், பச்சிளம் குழந்தைகளின் வாழ்வில் நிகழ்ந்த இந்த இழிவானச் செயலால் இக் குழந்தைகள் இச்சமூகத்தை நோக்கும் மனநிலையைச் சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும். தந்தை நிலையில், சகோதர உறவில் இக்குழந்தைகளைப் பேணவேண்டிய இச்சமூகத்தின் ஆண் ‘குடி’ மக்களின் இத்தகைய இழிவான செயலால் இன்று ஒட்டுமொத்தச் சமூகமே வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. அன்றே இத்தகைய செயல்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்திருந்தால், இத்தகைய செயல்கள் ஒருபோதும் தொடர்ந்திருக்காது.
ஆகவே,
இனியும் தாமதமின்றித் தமிழ்நாடு அரசு இத்தகைய செயல்களுக்கு விரைந்து தீர்வு காணவும், குற்றம் இழைத்தோருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கவும் ஆவன செய்யவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்