இன்று உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எங்கே, எதிலே சிக்கித் தவிக்கிறீர்கள்?
நம்
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி கருத்துரையில், யோவான் நற்செய்தியில் வருகின்ற பெத்சதா குளத்தில் நடந்த ஒரு நிகழ்வை, ஒரு மருத்துவமனைக்குள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் காத்திருக்கும் நோயாளிகளைக் காண்கின்ற உணர்வாகப் பார்க்கின்ற நமக்கு, “அங்கே பலர் - நோயாளிகள், கண் குருடானவர்கள், காது கேளாதவர்கள், கால் ஊனமுற்றோர் போன்ற பலர் படுத்திருந்தனர்” (யோவா
5:1-9) என்றும், நம் வாழ்வில் பல நேரங்களில் இன்னல்களுக்கும்
இடையூறுகளுக்கும் நாம் உள்ளாகும்போது பிரச்சினைகளைச் சோர்வில்லாமல் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய துணிவை, நோயுற்ற மனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பதை ‘இயேசுவின் குணப்படுத்துதல்’ குறித்துச்
சிந்திக்கும் நாம் குறிப்பாக, முடக்கப்படுதல், ஒரு சூழலுக்குள் சிக்கிக்கொள்ளுதல் பற்றியும், தொடர்ந்து போரிட விரும்பாமல் விட்டுக்கொடுத்துச் செல்லும் நிலையிலிருக்கும் ஒரு மனிதராக ‘உடல் நலமற்ற மனிதர் நலமடைதல்’
என்ற பகுதியைக் கொண்டு விவரிக்கின்றார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
குணப்படுத்தும்
குளம்
இயேசு
யூதர்களின் திரு விழாவில் பங்கேற்பதற்காக எருசலேமுக்குச் செல்கின்றார். நேரடியாக ஆலயத்திற்குள் செல்லாமல், ஆடுகளைக் குளிப்பாட்டித் தூய்மைப்படுத்தி, அதன்பின் காணிக்கையாக்கும் இடத்திற்கு வந்து அதன் வாயிலருகில் நிற்கின்றார். இந்த ஆட்டுவாயிலின் அருகே தீட்டானவர்கள், தூய்மையற்றவர்கள் என்று கருதப்பட்ட, கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நோயாளிகள் இருந்தனர்.
இம்மக்கள்
தங்களது வாழ்க்கை விதியை மாற்றக்கூடிய ஓர் அதிசயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வாயிலின் அருகே இருந்த குளத்தில் இருந்த நீரானது அதிசய நீராக, குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட நீராகக் கருதப்பட்டது. அந்த நீர் கலங்கும்போது, யார் முதலில் இறங்குகின்றார்களோ அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தது.
இரக்கத்தின் வீடு,
ஏழைகளின்
போர்
இக்குளமானது
‘ஏழைகளிடையே போராட்டம்’
இருந்ததால் ஒரு விரும்பத்தகாத காட்சியை உருவாக்கியது. அங்கிருந்த நோயாளிகள் குளத்திற்குள் நுழைய சிரமப்பட்டுத் தங்களது உடலை இழுத்துச் செல்லும் சோகமான காட்சியை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். பெத்சதா என்றால் ‘இரக்கத்தின் வீடு’ என்று திருத்தந்தை லியோ சுட்டிக்காட்டும் அக்குளமானது, இறைவன் வாழும் திரு அவையின் உருவகமாகக் கூட இருக்கலாம்.
சாக்குப்போக்குத்
தன்மை
38 ஆண்டுகளாக
உடல்நலமற்று, பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடம் இயேசுவின் கேள்வி இதுதான்: ‘நீர் குணமடைய விரும்புகிறீரா?’
1. ‘என்னை குளத்தில்
இறக்கிவிட யாரும் இல்லை’ என்று அவர் கூறுகிறார். எனவே, தவறு அவருடையது அல்ல; ஆனால், அவரைக் கவனித்துக்கொள்ளாத மற்றவர்களின் தவறு என்பதாகக் கூறுகின்றார். இந்த அணுகுமுறையானது பொறுப்பேற்றலைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக மாறுகிறது.
2. ‘நான் போவதற்குமுன்
வேறு ஒருவர் இறங்கி விடுகிறார்’ என்று
உடல்நலமற்றவர் இயேசுவிடம் கூறிய வார்த்தைகளானது; அம்மனிதர் தனது வாழ்வை ஒரு விவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது. நாம் அதிர்ஷ்டமற்றவர்களாக இருப்பதால், விதி நமக்கு எதிராக இருப்பதால் நமக்கு எல்லாம் மாறாக நடக்கின்றன என்று நாம் எண்ணுகின்றோம். இம்மனிதரும் அதைப்போலவே உற்சாகமிழந்தவராக, வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்டவராகவே தன்னை உணர்கின்றார்.
வாழ்க்கையில்
‘அடுத்து என்ன செய்வது?’ என்ற உறுதியான தீர்மானம் செய்யாமல் இருப்பதற்கான ஓர் ஏமாற்றுவழியாக இதனைக் கையாள்கின்றார். நற்செய்தியில் முடங்கிப்போன மனிதனைப் போலவே, நாமும் சிக்கிக்கொள்ளலாம். மேலும், குணமடைய வேண்டும் என்ற ஆசை நமக்கும் மங்கிப்போகலாம்.
உன் வாழ்க்கை
உன்
கையில்
“எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்”
என்ற வார்த்தைகளின் வழியாக அம்மனிதர் எழுந்து நடக்கவும், பல ஆண்டு களாக
இருந்த அவரது சூழலை மாற்றவும், படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கக் கட்டளையிடுகின்றார். அவரது படுக்கையானது அப்படியே அங்கேயே விட்டுவிடக்கூடாது, தூக்கி எறியப்படவும் கூடாது. அது அவரின் நோயினை, வாழ்க்கை வரலாற்றை அடையாளப்படுத்துகின்றது.
அதுவரை
கடந்த காலத்தினால் தடுக்கப்பட்டு, இறந்த மனிதனைப்போல அங்கேயே படுத்துக் கிடந்த அவர், இப்போது தனது படுக்கையை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவரது வாழ்க்கை வரலாற்றில் என்ன செய்யலாம்? என்பதை அவரே தீர்மானிக்கலாம். எந்தப் பாதையில் நடப்பது என்பதை அவரே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார்.
‘அவருக்கு உதவ யாரும் இல்லை’ என்பது உண்மையா? புனித அகுஸ்தினார் கூறுகையில், “முடக்குவாதத்திற்கு ஓர் உதவிக்கரம் மட்டுமல்ல; கடவுளாகவும் இருக்க ஒரு மனிதர் தேவை” என்கிறார்.
நீங்கள் குணமடைய
விரும்புகிறீர்களா?
ஒரு
மருத்துவமனையில் இது என்ன கேள்வி? உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், இதயநோய், மனநோய், முடக்குவாதமுற்றோர் இவர்கள் கூடியிருக்கும் இடத்தில் இது என்ன கேள்வி? எல்லா மனிதனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தக் கேள்வி தேவைப்படுகிறது. இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் மண்டபத்தில் படுத்துக் கிடப்பவர்கள்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு நோய். அவ்வளவுதான் வேறுபாடு. ஏதோ ஒரு வரிசையில், எதற்கோ காத்திருக்கிறோம்.
சில
சமயங்களில் ஆண்டாண்டாகத் துன்பம் நம்மைத் தொடர்ந்து வரலாம். ஆம், முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கும் மேலாகவும் இருக்கலாம். அடுத்தவரோடு போட்டிபோடவும் நமக்குத் துணிவு, திறமை, வசதி இல்லாமல் இருக்கலாம். நல்லவர்கள் நாலுபேர் நமக்கு உதவி செய்ய முன்வராமலிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். மனம் சோர்ந்து போக வேண்டாம். கடவுள் நம்மைத் தேடிவரும் நேரத்தில் தயாராக இருப்போம். கடவுள் உன்னிடம் ‘நலம்பெற விரும்புகிறீரா?’ என்று கேட்கும்போது, உன் உடலும் உள்ளமும் தயாராக இருக்கட்டும். எத்தகைய நோயோடு, குறையோடு, தேவையோடு இருந்தாலும், நம் இயேசு நமக்குத் தருவார் என்ற நம்பிக்கை கொள்வோம்.
நாம் எவ்வளவு
விடாமுயற்சி
கொண்டவர்கள்?
இரண்டு
தவளைகள் தவறுதலாக ஒரு வெண்ணெய் பாட்டிலில் விழுந்தன. சுமார் ஒரு மணி நேரம் அவை தப்பிக்க முயன்றன. சோர்வடைந்த ஒரு தவளை, “இதற்குமேல் பயனில்லை!” என்று கூறி விட்டது, அது வெண்ணெயில் மூழ்கியது. மற்றொரு தவளை தொடர்ந்து முயற்சி செய்தது. அடிக்கடி அசைந்தது, போராடியது. திடீரென்று அது ஒரு வெண்ணெய் உருண்டையின்மீது பாதுகாப்பாக அமர்ந்திருந்தது.
“பெரிய மனிதர்கள் எட்டிய உச்சிகளை, திடீரென அவர்கள் அடையவில்லை; அவர்கள் உறங்கும் நேரத்திலும் கூட அவர்கள் உழைத்துக்கொண்டே உயரம் சென்றார்கள்.”
இயேசு
எப்போதும் பிரச்சினைகளின் மத்தியில் இருக்கிறார். எங்கு விடுதலை தேவைப்படுகிறது? எங்கு மகிழ்ச்சி கொண்டுவர வேண்டும்? அங்கேயே அவர் இருக்கிறார். 38 ஆண்டுகளாகக் குணமடைய விரும்பி, நம்பிக்கையோடு காத்திருந்த மனிதனுடைய நம்பிக்கையும் விடாமுயற்சியும் வீணாகவில்லை.
நாம் குணமடைய விரும்புகிறோமா? இயேசுவால் குணமாக்க முடியும் என நம்புகிறோமா? இயேசு
நம்மைக் குணமாக்க விரும்புகிறோமா? நம்மைச் சுற்றி தினமும் ஏராளமான ‘நடக்க முடியாதவர்கள்’ இருப்பதை
நம்மால் பார்க்க முடிகிறதா?
நம்பிக்கைத் தளர்ச்சியைப்
போக்குவோம்
நமது
வாழ்வில் நமக்கு எப்போதும் அடிப்படை ஆதாரமாக இருக்க வேண்டியது நம்பிக்கை. அந்தச் சிறுதுளி நம்பிக்கைதான் நமது வாழ்வில் பல அற்புதங்கள் நடப்பதற்குத்
தூண்டுகோலாய் இருக்கப்போகிறது. எனவே, நாம் எப்போதும் இறைவனில் நம்பிக்கையாளர்களாய் வாழ்வோம்.