news-details
சிறப்புக்கட்டுரை
யாருக்கு வெற்றி?

அமெரிக்காவின் இரகசியமாகத் தாக்கும் 13 விமானங்கள், 11,400 கிலோ மீட்டர் பறந்து ஈரானின் அணு உலைகள் உள்ள இடத்தில் குண்டு மழை பொழிந்து தகர்த்துவிட்டன.  அதேபோல நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து குண்டுகள் வீசப்பட்டு மற்றோர் அணு உலையும் தகர்க்கப்பட்டது. இத்தகைய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கருவிகள் பயன்படுத்தப்பட்டு இன்றைய போர் முறையே மாறிவிட்டது. இந்த விமானங்களில் ஆறு குண்டுகள் மட்டும்தான் வீசின. மற்றவை எதிரியை ஏமாற்றுவதற்குப் பயன்பட்டன. இவற்றை இயக்கியவர்கள் முகம், ஒரு பெண் விமானியைத் தவிர, நமக்குத் தெரியாது. இத்தனை குண்டுகள் பொழிந்த விமானங்களில் எத்தனை அமெரிக்கர்கள் இருந்தார்கள் என்பதும் தெரியாது. ஆனால், ஒருசிலர் மட்டுமே சென்று இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தினர்.

உடனடியாக ஈரான் பதிலடி கொடுத்ததுஅமெரிக்காவின் தளத்தைக் குறிவைத்துத் தாக்கியது. அதேசமயம் இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணைகளைத் தொடுத்ததுஇஸ்ரேலும் அதன் பங்குக்கு ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகள் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களைத் தாக்கியதுஇந்த நிலையில் இரஷ்யாவும் இந்தப் போரில் தலையைக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகி, இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்த போர் உலகப் போராக வெடிக்குமோ என்ற அச்சம் உலகை நடுங்க வைத்தது

நல்ல வேளையாக, ட்ரம்பின் அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான 12 நாள் போர் நின்று விட்டதாகத் தெரிவித்தது. அவர் அறிவித்த பிறகும்கூட ஏவுகணைகள் வீசப்படுவது இரு தரப்பிலும் நிற்கவில்லை. ‘நாங்கள் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ளவில்லைஎன்று ஈரான் முழங்கியதுஇஸ்ரேலும் பதில் தாக்குதலை நிறுத்தவில்லைஇறுதியில் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது

இந்த 12 நாள் போர் ஏன் வந்தது? யார் காரணம்? ஒரு சிறு நாட்டைச் சூழ்ந்திருக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட அரபு, இஸ்லாமிய நாடுகள் அவற்றின் வலிமையைக் காட்டுவதற்கா இந்தப் போர்ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டதாக இஸ்ரேலும், உலக நாடுகளும் முடிவுக்கு வந்தது மட்டுமே காரணமா?

இஸ்ரேல் மேல் பல நாடுகளுக்கும் மனத்தாங்கல் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். பாலஸ்தீனம் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பல முறை உள்ளாகியிருக்கிறது. பெண்களும் குழந்தைகளும் குண்டு வீச்சால் இறப்பதும், கட்டடங்கள் தரைமட்டம் ஆவதும் அன்றாட நிகழ்ச்சிகள். பாலஸ்தீன மக்கள் ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக இஸ்ரேல் ஒரு சிறு நாடு என்ற அனுதாபம் இருந்தது போய், மக்கள் மத்தியில் அதன்மேல் வெறுப்பு அதிகமாகியது

இஸ்ரேலுக்கும், அரபு, இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான பகைமை இன்று நேற்று ஏற்பட்டதல்லஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேச நாடுகளால் உருவாக்கப்பட்ட நாடு அது. வேகமாக வளர்ந்த நாடு நமக்கெல்லாம் ஆபத்தைக் கொண்டு வரும் என்று மற்ற நாடுகள் அச்சம் கொண்டனஎண்ணெய் கிணறுகள் அரபு நாடுகளில் தோண்டப்பட்ட பிறகு அவற்றின் வறுமை போய், அங்கு வளம் கொழிக்கத் தொடங்கியதுபணக்கார நாடுகள் அவற்றின் மேல் கண்வைத்தனபாரம்பரியமாக யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருந்த பகையும் வலுப்படத் தொடங்கியது.

இந்தப் பகைமைக்குக் காரணங்கள் பல. வரலாற்று ரீதியாகப் பாலஸ்தீனியர்களை அவர்கள் நாட்டிலிருந்து விரட்டியதும், யூதர்கள் தங்களுடைய தாய்மண்ணைத் தங்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று ஆசைப்பட்டதும் காரணங்கள்இஸ்ரேல், பாலஸ்தீனம், எருசலேம் ஆகிய பகுதிகளுக்கு இசுலாமியர்களும், யூதர்களும், கிறித்தவர்களும்கூட உரிமை கொண்டாடியது மற்றொரு காரணம். இதற்கிடையில் வெளிநாட்டு ஆதிக்கமும் தூண்டுதலும் இந்த முரண்பாடுகள் உரசலாக மாறக் காரணம்

இஸ்ரேல் தனது அண்டை நாடுகளுடன் போர் பகைமை கொண்டது நீண்ட வரலாறு உடையது.  1948-இல்இஸ்ரேல் சுதந்திர நாடுஎன்று அறிவித்தவுடன் அரபு நாடுகள் அதன்மேல் போர் தொடுத்தன. 1956-இல் சூயஸ் கால்வாய்க்கு உரிமை கொண்டாடி இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இஸ்ரேல் எகிப்தைத் தாக்கியது. 1967-இல் நடந்த ஆறு நாள் போரில் இஸ்ரேல் எகிப்து, யோர்தான், சிரியா ஆகிய நாடுகளைத் தாக்கியதுயூதர்களின் புனித நாளானயாம் கப்பூர்அன்று எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலைத் தாக்கினஇதற்கிடையில் லெபனானில் இஸ்புல்லாக்களின் தீவிரவாதத்தை எதிர்த்து இஸ்ரேல் அதன்மேல் 1982-இல் தாக்குதல் நடத்தியது. காசா பிரச்சினையில் அவ்வப்போது பாலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ்களுக்கும் இஸ்ரேலுக்கும் மோதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனஇஸ்ரேல், பாலஸ்தீன முகாம்களைத் தாக்கி குழந்தைகளையும் பெண்களையும் அழிக்கின்றதுதரைவழி தாக்கி தனது அதிகார வரம்பை அதிகரிக்கிறதுபாலஸ்தீனத்துக்கு அனுப்பப்படும் உதவிகள் போகவிடாமல் தடுக்கின்றது. ட்ரோன்களை அனுப்பி வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளைக் கொல்கிறது. பாலஸ்தீனத் தீவிரவாதிகளான ஹமாஸ்களுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த மோதல்களில் 2023-இல் ஹமாஸ்கள் இஸ்ரேல் மேல் நிலம், கடல், ஆகாயம் மூலமாகத் தாக்குதல் நடத்தினர்

இந்நிலையில்தான் சென்ற ஜூன் 13 அன்று இஸ்ரேல், ஈரான்மேல் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் கொண்டு அத்துமீறி ஈரானின் இராணுவம், அணுசக்தி நிலையங்கள் மேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதுஅடுத்த நாளே ஈரான் பதிலடி கொடுத்தது. அதிவேக ஏவுகணைகளைத் தொடுத்து, விடாது இஸ்ரேல்மேல் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல் இரும்புக் குவிகை என்ற பாதுகாப்பு அரணை அமைத்திருந்ததால், அதை ஊடுருவி எந்த ஏவுகணையும் வரமுடியாது என்ற இறுமாப்பில் இருந்தது. ஆனால், இந்த ஒலியைவிட அதிவேகமாகப் பறந்து வரும் விமானங்கள், தொகுப்புக் குண்டுகளை வீசித்தாக்கின. ஒரே நேரத்தில் இரண்டாயிரம் குண்டுகளை எட்டு கிலோ மீட்டர் சுற்றளவிற்குக் குறிபார்த்துத் தாக்கும் திறனுடையவை. இதனால் இஸ்ரேலின் தாக்கும் சக்தி குறைந்தது. இருப்பினும், ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மேல் தாக்குதலைத் தொடர்ந்தது இஸ்ரேல். குறிப்பாக, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. பதிலடியாக ஈரான் டெல் அவிவ், எருசலேம் முதலான நகரங்களைத் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்தியது

லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் அமைப்பு அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கப் போவதாக எச்சரித்தது. அமெரிக்கா இதுவரையில் போரில் தலையிடாமல் இருந்தது. போர் தீவிரம் அடைந்த நிலையில், அமெரிக்கா ஈரானை எச்சரித்தது. அதனுடைய அணுசக்தித் தளங்களைத் தாக்கப் போவதாக எச்சரித்தது. தொடக்கத்தில் பார்த்தது போலB2’ Stealth bombers அனுப்பி ஈரானின் அணுசக்தி நிலையங்களான போர்டோ, நார்டன்ஸ், எஸ்பகாம் ஆகிய இடங்களைத் தாக்கியது. இதற்குப் பதிலடியாக ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானத்தளங்களைத் தாக்கியது. ஏற்கெனவே அது எச்சரித்திருந்ததால் சேதம் அதிகமில்லைஉடனே 24-ஆம் தேதி அன்று இரு நாடுகளுக்கு இடையே உள்ள போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்தார். 24 மணி நேரத்திற்குள் இரு நாடுகளும் அவற்றின் தாக்குதலை நிறுத்திக்கொள்ளும் என்று அறிவித்தார். எனினும், இரு பக்கமும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஈரான் முதலில்எந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படவில்லைஎன்று அறிவித்தது. இன்றைய நிலவரப்படி (25.06.2025) இரு நாடுகளுமே போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டன என்று அறிகிறோம்.

டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போரினாலும், போர் நிறுத்தத்தாலும் தனக்கே வெற்றி கிடைத்தது என்று முழங்குகிறார். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறார். ஆனால், அவருடைய விமானங்கள் தாக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று இப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன

அமெரிக்கக் குண்டுகள் கான்கிரீட் பதுங்குக் குழிகளைத் துளைத்துக் கொண்டு தரைக்குக் கீழே உள்ள ஆயுத உற்பத்தி நிலையங்களை அழிக்கும் ஆற்றல் உடையவை. ஆனால், ஏற்கெனவே ஈரான் தயாரித்து வைத்திருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் அகற்றப்பட்டுவிட்டதால், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறுகிறார்கள். இந்தத் தகவலை அமெரிக்கச் செய்தியாளர்களே தெரிவிக்கிறார்கள். ஆகவே, 17,300 கோடி மதிப்புள்ள விமானங்கள் பொழிந்த குண்டுகள் வீண் என்றால், அவருடைய விமானத் தாக்குதலுக்கு வெற்றி இல்லைசண்டையைத் தூண்டி கடைசியில் அமைதியைக் கொண்டு வந்து விட்டதாகப் பறைசாற்றவே இந்த வெற்றி முழக்கமா

தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேலுக்கு வெற்றியா? என்றால், உறுதியாக இல்லை. டெல் அவிவும், எருசலேமும் அழிவுற்றதே விளைவு. அணு ஆயுத அச்சுறுத்தல் இன்னும் தொடர்கிறதுஅவர்களுடைய இரும்புக் குவியம் தகர்த்தப்படக் கூடியது என்று பாடம் கற்றதே மிச்சம்

ஈரான் பலத்த சேதத்தைச் சந்தித்தது என்பது உண்மை. பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஈரானின் முதன்மை அணுசக்தி விஞ்ஞானிகள் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். டெஹ்ரான் சிதைந்துபோய்விட்டதுபல விமானத் தளங்கள் அழிந்துபோய்விட்டன. அதனுடைய அணு ஆயுதம் தயாரிக்கும் ஆற்றல் வேண்டுமென்றால் மீட்டெடுக்கக்கூடியதாய் இருக்கலாம். ஆனால், ஈரான் தகர்ந்துபோய்விட்டது என்பது உண்மை

இந்த 12 நாள் போரில் உயிரிழப்புகள் மிகக் குறைவு என்பது ஓர் ஆறுதல். இருந்தாலும், மக்கள் பீதியிலும் அச்சத்திலுமே வாழ்ந்தார்கள். உலகமும் இது ஒரு பெரும் போராக வெடிக்கும் என்று பயந்து கொண்டிருந்ததுநல்ல வேளையாகப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது.

கச்சா எண்ணையின் விலை ஓரளவு கூடினாலும், மீண்டும் குறையத் தொடங்கியிருக்கிறது. கச்சா எண்ணைய் கொண்டு செல்லப்படும் கடற்பாதைகள் மூடப்பட்டால் எரிபொருள் கிடைக்காமல் போகும். அப்போது எல்லாருக்குமே பிரச்சினைதான். உலகின் எரிபொருள் தேவையில் ஈரான் மூன்றில் ஒரு பங்கைத் தயாரிக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்

மக்களுக்கு ஓரளவு நிம்மதிதான். ஆனால், டெஹ்ரானும் டெல் அவிவும் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன

எந்தப் போர் நடந்தாலும், யாரும் வெற்றி பெறப் போவதில்லை.