கடந்த 20 நூற்றாண்டுகளாகப் பிறரன்பைக் குறித்த உண்மைகளை மனித சமுதாயத்தின்மீது ஆழமாகப் பதித்துவரும் ஓர் அற்புதமான உவமை ‘நல்ல சமாரியர்’ உவமை. இவ்வுவமைக் கிறித்தவம் என்ற வட்டத்தையும் தாண்டி, ஏனைய சமயத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறான இன்று உலகப் புகழ்பெற்ற ‘நல்ல சமாரியர்’ உவமை வழியாக இயேசு நம் உள்ளங்களில் பதிய வைக்கும் சில பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.
“நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” (லூக் 10:25) என்ற திருச்சட்ட அறிஞரின் கேள்வியோடு இன்றைய நற்செய்திப் பகுதி துவங்குகிறது. இவரின் கேள்வி ஓர் அறிவுத்தேடலால் எழுந்த கேள்வி அல்ல; மாறாக, பதிலைத் தெரிந்து வைத்துக்கொண்டு ‘இயேசுவுக்குத் தெரியுமா?’ எனச் சோதிக்கும் நோக்குடன் கேட்கப்பட்ட கேள்வி. திருச்சட்ட அறிஞரின் எண்ண ஓட்டங்களை ஆய்ந்தறிந்த இயேசு, “திருச்சட்ட நூலில் நீர் என்ன வாசிக்கிறீர்?” (10:26) என்ற மறு கேள்வியை முன்வைக்கிறார். எவ்விதத் தயக்கமும் இன்றித் திருச்சட்ட அறிஞர், மனித வாழ்வின் ஆணிவேராக அமையும் இறையன்பு, பிறரன்பு ஆகிய இருபெரும் கட்டளைகளை இணைச்சட்டம் (6:5) மற்றும் லேவியர் நூல் (19:18) என்ற இருவேறு இடங்களிலிருந்து எடுத்து ஒரே மூச்சில் இணைத்துக் கூறுகிறார். இயேசுவோ அறிஞரிடம், “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும், அப்பொழுது வாழ்வீர்”
(10:28) என்றதும், திருச்சட்ட
அறிஞர் தன்னை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” (10:29) என்று இயேசுவிடம் கேட்கிறார். திருச்சட்டங்களை எல்லாம் அறிந்த அவருக்கு அடுத்திருப்பவர் யார் என்பது தெரியாமலா இருக்கும்?
திருச்சட்ட
அறிஞர் மேற்கோள்காட்டிய ‘அடுத்திருப்பவர்’ (லேவி
19:18) என்ற சொல் தன் சொந்த இஸ்ரயேல் இனத்தவரைக் குறிக்கும் சொல். ஒவ்வோர் இஸ்ரயேலரும் சக இஸ்ரயேலரைச் சகோதரராகப்
பார்க்க வேண்டும் என்ற சட்டமிருந்தது. இதனை அதிகமான வேளைகளில் இஸ்ரயேலர் கடைப்பிடித்தனர். மோசே கூறிய அதே அதிகாரத்தின் 34-ஆம் சொற்றொடரில் கூறப்பட் டுள்ள ‘அடுத்திருப்பவர்’ என்ற
சொல் அந்நியரைக் குறிக்கும். திருச்சட்ட அறிஞர் மோசே கட்டளைகளின் முதல் பகுதியை மட்டும் மேற்கோளாக இயேசுவிடம் கூறிவிட்டு, அந்நியரைப்பற்றிக் குறிப்பிடும் இரண்டாம் பகுதியைப்பற்றிக் குறிப்பிடவில்லை. தன் வசதிக்காக அவர் அதை மறைத்துவிட்டார் போலும்! நிலைவாழ்வைப் பெறுவதற்கு நான் அன்பு செலுத்தவேண்டிய ‘அடுத்திருப்பவர்’ இஸ்ரயேல்
இனத்தவரா? அல்லது அந்நியரா? என்பதைத் தெளிவுபடுத்துங்கள் என்று இயேசுவிடம் கேட்பது போன்று அமைகிறது திருச்சட்ட அறிஞரின் கேள்வி.
‘எனக்கு அடுத்திருப்பவர் யார்?’ அடுத்திருப்பவர் என் உறவினரா? என் இனத்தைச் சார்ந்தவரா? அல்லது எல்லாருமா? யாருக்கெல்லாம் உங்கள் உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் அனைவரும் ‘அடுத்திருப்பவர்’ என்று
இயேசு பதில் கூறுகிறார். அதாவது, நான் யாருக்கெல்லாம் அன்பு செய்யக் கடமைப்பட்டுள்ளேனோ அவர்கள் அனைவரும் அடுத்திருப்பவர்கள் அல்லது அயலார்கள் (லூக் 10:27). நம்மைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் வசிப்போர், அனாதை இல்லங்கள், குழந்தைக் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், தொழுநோயாளர் அகங்கள், மாற்றுத்திறனாளிகளின் உறைவிடங்கள், திருநர்களின் வாழ்விடங்கள், புலம்பெயர்ந்தோர் முகாம்கள் போன்ற இடங்களிலெல்லாம் வாழ்வோர் அனைவரும் நம் அடுத்திருப்பவர்களே. இவர்கள் யாவரும் நம் சொந்தங்களே. இத்தகையோருக்குச் செய்யும் உதவி அவர்களின் தேவையில் மலர்வதாகும். ‘உதவி என்பது தேவையில் மலர்வதே அன்றி, காரணத்தால் வருவது அல்ல’ என்கிறது ஜெர்மன் பழமொழி. இயேசு கூறிய இவ்வுவமையில், குற்றுயிராய் அடிபட்டுக் கிடப்பவர் யார்? ஏன்? எவ்வாறு? யாரால் அடிபட்டார்? என்று கண்டுபிடிப்பதில் அவ்வழியே வந்த சமாரியர் தன் சக்தியையும் நேரத்தையும் வீணாக்காமல், அடிபட்டுக் கிடப்பவரை எவ்விதம் காப்பாற்ற முடியும் என்பதில் கவனத்தைத் திருப்பினார் என்பது இவ்விடம் எண்ணிப் பார்க்கத்தக்கதே.
எருசலேமிலிருந்து
எரிகோவுக்குச் செல்லும் வழியில் ஆடைகள் களையப்பட்டு, அடிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரை ஒரு குரு, ஒரு லேவியர், ஒரு சமாரியர் ஆகிய மூவருமே பார்க்கின்றனர். குரு போகிற போக்கில் அவரைக் கண்டார், விலகிச் சென்றார். லேவியரோ அவ்விடத்துக்கு வந்தார், கண்டார், பின்னர் விலகிச் சென்றார். ஆனால், அடுத்து வந்த சமாரியரோ, அருகில் வந்தார், கண்டார், பரிவு கொண்டார். இம்மூவரின் விழிகளிலும் பதிந்த காட்சி ஒன்றுதான். ஆனால், செயல்களில் மாற்றத்தை உருவாக்கியது எது? கண்கள் அல்ல, இதயம்! இதயத்தில் உருவான பரிவு சமாரியரைச் செயலில் ஈடுபட வைத்தது.
“பரிவு என்பது சமயம் சார்ந்தது என்பதற்கு முன்னதாக அது, மனிதகுலத்திற்கான ஒன்று. நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க அழைக்கப்படுவதற்கு முன்பாக மனிதர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்” என்ற
திருத்தந்தை லியோ அவர்களின் கூற்றும் (மே 28, 2025, புதன் மறைக்கல்வி உரை), “தேவையிலிருப்போருக்குப் பரிவு காட்டுவதே அன்பின் உண்மை முகம்” என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றும் சாலச் சிறந்ததே! (ஜூலை 24, 2019, மூவேளைச் செப உரை).
இந்த
மூவரின் மனங்களில் ஓடிய எண்ணங்களைப் பற்றி மார்ட்டின் லூதர் கிங் இளையவர் இவ்வாறு தன் உரையில் குறிப்பிடும்போது, அடிபட்டுக் கிடந்தவரைக் கண்ட குருவுக்கும் லேவியருக்கும் மனத்தில் எழுந்த கேள்வி: “இந்த மனிதருக்கு நான் உதவி செய்தால், எனக்கு என்ன ஆகும்?” இந்தக் கேள்வியே அவர்களை அடிபட்டவரிடமிருந்து விலகிச்செல்ல வைத்தது. இதற்கு நேர்மாறாக, அங்கு வந்த சமாரியரின் மனத்தில் எழுந்த கேள்வி: ‘இந்த மனிதருக்கு நான் உதவி செய்யாவிட்டால், இவருக்கு என்ன ஆகும்?’ பரிவும் இரக்கமும் அன்பும் நிறைந்த உன்னத உணர்வே சமாரியரைச் செயலுக்கும் இட்டுச்சென்றன.
இன்றைய
உவமையில் சமாரியர் செய்த செயல் நமக்கு விடுக்கப்படும் ஒரு சவால். சமாரியர் ஆற்றியுள்ள செயலை இயேசு பட்டியலிடும்போது, சமாரியர் அடிபட்டவரைக் காண்கிறார், பரிவு கொள்கிறார், அணுகி வருகிறார், காயங்களைக் கட்டுகிறார், சுமந்து செல்கிறார் (விலங்கின்மீது), அவரோடு தங்குகிறார், பொறுப்பாளரிடம் ஒப்படைக்கிறார், செலவுகளை ஏற்கிறார் (10:33-35).
அருகில்
வருவதும், பரிவு கொள்வதும், காயங் களைஆற்றுவதும் தங்குவதும் சுமத்தலும் கொடுத்தலும் இயேசுவின் பரிவுமிக்க செயல்பாடுகள். சமாரியரின் அத்தனை செயல்களும் இயேசுவின் முழு இரக்கக்குணத்தையும் வெளிக்காட்டக்
கூடியவையாக இருந்தன. தன்னலத்தோடு மற்றவரைப் புறக்கணிக்கும் நடத்தையிலிருந்து விடுபட்டு, நம் பாதையில் சந்திப்பவர்கள் மீது, குறிப்பாக, துன்புறுவோர் மற்றும் தேவையில் இருப்போர் மீது பரிவு காட்டும்போதும், அவர்கள் அருகில் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றும்போதும் நாம் இயேசுவின் ‘வழியோரச் சீடர்களாக’
மாறுகின்றோம்.
கடவுளின்
கட்டளை நமக்குப் புரியாததும் இல்லை, அது தொலைவிலும் இல்லை. அதைத் தேடி வானத்திற்கும் செல்லவேண்டாம், கடல்களைக் கடக்கவும் வேண்டாம். கடவுளுடைய கட்டளை ‘உனக்கு மிக அருகில்’,
‘உன் வாயில்’,
‘உன் இதயத்தில்’
இருக்கிறது என்கிறது இன்றைய முதல் வாசகம். கைக்கெட்டும் தூரத்தில் அடிபட்டுக் கிடக்கும் பெயரில்லா மனிதர்களைக் கைதூக்கி விடுவதில் கடவுளின் கட்டளை அடங்கியிருக்கிறது; ‘அடுத்தவர்மீது அக்கறையின்மை’ என்ற
நோயை நலமாக்குவதில் அடங்கியுள்ளது. பார்க்கும் தூரத்தில் குற்றுயிராய்க் கிடந்த பெயரில்லா நபரைச் சமாரியர் கைநீட்டித் தழுவிக்கொண்டதில் திருச்சட்டம் நிறைவுகண்டது. “அன்பே திருச்சட்டத்தின் நிறைவு”
(உரோ 13:10).
“நீரும் போய் அப்படியே செய்யும்”
என்ற இயேசுவின் வரிகள் மற்றவர்களைக் கவனிக்காமல் எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திக்கும் நமக்கான வரிகள். சமாரியர் செய்ததுபோல் அன்பு செய்ய வேண்டும். அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல; அது ஒரு செயல். நாம் மேற்கொண்டுள்ள இந்த உலகப் பயணத்தில், தேவைகளில் இருப்பவர்களைக் கண்டதும், அவர்களின் தேவைகள் நிறைவேறும்வரை மீண்டும் மீண்டும் உதவிகள் செய்யவேண்டும். திருத்தந்தை லியோ குறிப்பிட்டுள்ளதுபோல, “ஒருவருக்கு நாம் உதவ வேண்டும் என்று எண்ணினால், அவர்கள் அருகில் நெருங்கிச் சென்று உதவ வேண்டும். அவர்களுக்கு உதவுவதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். நமது கரங்கள் அழுக்காகிட அனுமதிக்க வேண்டும்”
(மே 28, 2025).
எனவே,
இயேசுவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றுவதன் வழியாக நாம் ‘கிறிஸ்துவின் பயணிகளாக’
மாறுவோம். நமது பயணத்தை நிறுத்தி மற்றவர்களிடத்தில் இரக்கம் காட்டுவோம். சாலையில் காயமடைந்து கிடந்த அந்த மனிதர் நம் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்துகின்றார் என்பதை மறவோம். நாமும் போய் அப்படியே செய்வோம்.