வாழ்க்கை என்பது ஓர் அழகான பரிசு! ஆனால், அது மெல்லியதும் உடைந்துபோகக்கூடியதுமாக இருக்கிறது. நோய் என்பது அவ்வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி. ஆனால், மரணம் தவிர்க்க முடியாத ஓர் உண்மை. நமக்கு வாழ்க்கையைக் கொடுத்த கடவுள்மீது நம்பிக்கையோடு இவற்றை எப்படி இணைக்க முடியும்?
நாம்
எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியாத நேரங்களில் கூட, ஒரு நிகழ்வு நமக்குத் தெளிவாகத் தெரிகிறது; அதாவது, கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததால், மரணம் தோற்கடிக்கப்பட்டது. ஆக, மரணம் ஒரு முடிவல்ல என்பதுதான். இதுவே இயேசுவின் மகத்துவம். இது மாற்கு நற்செய்தி 5-ஆம் அதிகாரத்தில் வரும் உணர்ச்சி
மிகுந்த நிகழ்வில் நாம் காண்கிற இயேசுவின் செயல் என்பதை மையமாகக் கொண்டு திருத்தந்தை லியோ அவர்கள் தனது புதன் மறைக்கல்வி உரையில் எடுத்துரைக்கிறார்.
வாழ்க்கையை
மிகவும் கடினப்பட்டு வாழும் நிலையானது, நமது காலத்தில் ஒரு பரவலான நோயாக இருக்கின்றது. எதார்த்தமான வாழ்வானது மிகவும் சிக்கலானதாகவும் கனமானதாகவும் எதிர்கொள்ள மிகவும் கடினமானதாகவும் நமக்குத் தெரிகிறது. எனவே, நமக்குள் நாமே புதைந்து கொண்டு, நம்மை நாமே ‘சுவிட்ச் ஆஃப்’ செய்கிறோம். விழித்தெழுந்தால் வாழ்க்கையின் விசயங்கள் வித்தியாசமாக இருக்கும் என்ற மாயையின் கீழ் உறங்கிவிடுகின்றோம். சில சமயங்களில் மற்றவர்களை முத்திரை குத்த விரும்புகிறவர்களின் தீர்ப்பால் நாம் தடுக்கப்பட்டதாக உணர்கிறோம்.
மாற்கு
5:21-43 -இல் எடுத்துரைக்கும் இரண்டு நிகழ்வுகளில் இச்சூழல் பின்னிப் பிணைந்துள்ளதை நாம் காணமுடியும். நற்செய்தியில் நாம் வாசிப்பது போல, ஆண்டவர் இயேசு தேவையுள்ள மக்களை எவ்வளவு பரிவுடன் அணுகினார் என்றும், நோயுற்றவர்களையும், இறப்பின் விளிம்பில் சென்றவர்களையும் தேடிப்போய், அவர்களுக்குக் குணமும் வாழ்வும் அளித்தார் என்றும் பார்க்கிறோம். இது வெறும் புற நோய்களுக்கான பதிலல்ல; பாவத்தால் பாதிக்கப்பட்ட நம் உள்ளங்களுக்காகவும், இறைவன் மீது நம்பிக்கை வைக்க மறுக்கும் நம் குருட்டுத்தன்மைக்கு எதிராகவும் இயேசு எடுத்து வைத்த செயல்களே.
யாயிரின் மகள்
& இரத்தப்போக்குடைய
பெண்
யாயிரு
என்கிற தொழுகைக்கூடத் தலைவர், தன் மகள் மிகவும் பாதிக்கப்பட்டு இறப்பின் எல்லையில் இருக்கிறாள் என்று கூறி இயேசுவை அணுகுகிறார். அந்த வழியில் பல ஆண்டுகளாக இரத்தப்
போக்கினால் தவித்த பெண், தன்னைத் தூய்மையற்றவளாகக் கருதும் சமூகத்தில் அமைதியாக இயேசுவின் ஆடையைத் தொடுகிறாள். அவளுடைய நம்பிக்கையின் அடிப்படையில், இயேசு அவளுக்கு முழுமையான குணமாக்குதலை வழங்குகிறார். அவள் தைரியத்தையும் நம்பிக்கையையும் பாராட்டி, “மகளே, உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று” என்று
இயேசு கூறுகிறார். அவள் உளவியல் வாழ்வு மற்றும் சமூகப் பிரிக்கப்படுதலிலிருந்து மீட்கப்படுகிறாள்.
யாயிரு மகளின்
மறு
வாழ்வு
யாயிரின்
மகள் இறந்துவிட்டாள் என்று அனைவரும் கூறும் வேளையில் இயேசு கூறுகிறார்: “அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.”
அதைக் கேட்டவர்கள் இயேசுவை இழிவாகப் பார்த்தனர், சிரித்தனர். ஆனால், யாயிரு தன்னை முழுவதுமாக ஆண்டவரிடம் ஒப்படைத்த நம்பிக்கையில் இயேசுவுடன் தொடர்கிறார். அந்த நம்பிக்கைக்குப் பதிலளிக்க இயேசு, இறந்த சிறுமியின் கையைப் பிடித்து ‘தலித்தா கூம்’ எனக்கூறி அவளைக் கடவுளின் ஆற்றலால் உயிர்த்தெழச் செய்கிறார்.
இயேசுவே உயிரும்
உயிர்த்தெழுதலும்
இந்த
நிகழ்வுகள் மூலம் இயேசு, இறப்பு நமக்கு இறுதி அல்ல; அவர்தாமே உயிர்த்தெழுதல்; நிலை வாழ்வின் ஊற்றாக இருக்கிறார் என்று நிரூபிக்கிறார். இயேசு தமது சிலுவை மரணத்தினால் இறப்பைக் கடந்து நமக்கு நிலைவாழ்வு என்ற உறுதியையும் நம்பிக்கையையும் அளிக்கிறார். இவை நமக்கு இரு நம்பிக்கையின் பாடங்களாக இருக்கின்றன: யாயிரு, இரத்தப்போக்கால் வாடும் பெண் மற்றும் நற்செய்தியில் வரும் பலர். இவர்கள் அனைவரும் நம்பிக்கையின் உறுதியை நமக்குக் கற்பிக்கின்றனர். நாமும் நம்மை அவர்களுடன் இணைத்துக்கொண்டு, மாற்கு 9:24-இல் உள்ள அந்த அழகான செபத்தைக் கூறலாம்: “ஆண்டவரே, நான் நம்புகிறேன்; என் நம்பிக்கையின்மையைக் குணப்படுத்தும்!”.
யார் இந்த
இரண்டு
பெண்கள்?
1. முதல்
பெண் 12 ஆண்டுகளாக இரத்தம் வழிந்து நடமாடி வருகிறாள்; அதனால் நீதியற்றவளாகத் தள்ளப்பட்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையை உருவாக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
2. யாயிரின்
மகள் 12 வயது இளம்பெண்; திருமணத்திற்குத் தகுதியான வயது. ஆனால், அவளின் வாழ்க்கை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது - அவள் இறந்துவிட்டாள்.
•
இந்த இரண்டு பெண்களும் இஸ்ரயேலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
முதலாம் பெண், ஆண்டவரின் மணவாட்டியாக இருந்த இஸ்ரயேல், தனது கணவனை விட்டு விலகி, அசுத்தமாகி, வாழ்வை உருவாக்க இயலாத நிலையில் உள்ளதைக் குறிக்கிறாள். அவள் மீண்டும் குணமடைய வேண்டுமென்றால், கிறிஸ்துவைச் சந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் அவள் பழைய நிலையை விட்டுவிட்டு, புதிதாக வாழ்க்கையை அளிக்கக்கூடியவளாக மாறுவாள்.
• இரண்டாவது பெண்ணான யாயிரின் மகள் இஸ்ரயேலைக் குறிக்கிறாள். இஸ்ரயேல் ஆண்டவரின் மணமகள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், தனது மணமகன் அவளைத் தனது கையால் தூக்கிக்கொள்ளாவிடில், அவள் சாவுக்குள் தற்காலிகமாகவே நிற்கின்றாள். அவள் வயது வாழ்க்கையை உருவாக்கக்கூடியது - ஆனால், இப்போது அவள் சாவை அடைந்திருக்கிறாள். இந்த வாழ்க்கை இழப்பை நிறுத்த முடியாது.
மனிதர்கள்
தங்கள் வாழ்க்கையை இழக்காமல் இருக்க பெரும் பணத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், திருப்பாடல் 49 இதைக் கூறுகிறது: “நீ எவ்வளவு கொடுத்தாலும்,
அது உன் உயிரை மீட்கப் போதுமானதாக இருக்காது. நீ என்றென்றும் வாழ
முடியாது.” ஆனால், இந்தப் பெண் வாழ்க்கை இழப்பை நிறுத்தக்கூடிய ஒருவரைப் பற்றிக் கேட்டிருக்கிறாள். அவள் அவர்மேல் நம்பிக்கை வைத்துக் கூறுகிறாள்: “அவருடைய ஆடையின் விளிம்பையேனும் தொட முடிந்தால், நான் பிழைத்துவிடுவேன்.” அவள் ‘குணமடைவேன்’ என்று
அல்ல; மாறாக, ‘பிழைத்துவிடுவேன்’ என்று
கூறுகிறாள். ‘பிழைத்தல்’
என்பது இனி வாழ்க்கை இழப்பில்லை என்பதைக் குறிக்கிறது.
வாழ்வைக் கொடுத்த
வாழ்க்கைப்
பாடம்
மூன்று
முறை எமி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற நடிகையும் பாடகியுமான அன் ஜில்லியன், அமெரிக்காவில் பிறந்த உரோமன் கத்தோலிக்க லிதுவேனியக் குடிபெயர்ந்தோர் மகளாவார். 1985 முதல் தன்னுடைய தனிப்பட்ட நகைச்சுவையும் ஊக்கமளிக்கும் உரையாடலும் சேர்ந்த ஒவ்வொரு நிகழ்வும், அவரது புகழுக்கு மேலும் ஒளிவளிக்கச் செய்தது.
1985-இல் அவள்
35 வயதாக இருந்தபோது மார்பகப் புற்றுநோயாகக் கண்டறியப்பட்டதிலிருந்து அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். தன் உடலில் கண்ட ஒரு வீக்கத்தின் தன்மை பற்றி தெரிந்துகொள்ள மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், St. Francis de Sales தேவாலயத்தில்
நின்று, கதவிலிருந்த வரிகளை வாசித்தார்: “இன்று உன்னைக் காக்கும் அதே நிலையான கடவுள், நாளையும் உன்னைக் காப்பார். அவர் உன்னைத் துன்பத்திலிருந்து காப்பார் அல்லது அதைச் சுமக்கக்கூடிய வலிமையையும் தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் உனக்கு அளிப்பார். ஆகவே, அமைதியுடன் இரு; கவலை, கலக்கம், கற்பனைகளை ஒதுக்கிவிடு.” அந்தத் தேவாலயத்திற்குள் சென்ற அவர், தன்னுடைய சோதனைகளை ஏற்கும் ஆற்றலுக்காகச் செபித்தார். பின்னர் அவர் மேற்கொண்ட இரட்டை மார்பக அகற்றும் அறுவை சிகிச்சைக்கு முன்பும் பிறகும், அவர் காட்டிய இறைநம்பிக்கையும் உள்ளமைதியும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன. மேலும், பல புற்றுநோயாளிகளுக்கான ஊக்கமாகவும் அமைந்தது.
அவர் நம்பிக்கையுடன் குணமடைந்தார். இயேசு நம்மிடமும் கூறுவது: “அஞ்சாதே, நம்பிக்கையை மட்டும் விடாதே”
(மாற் 5:36).
1. இயேசு
நம்மை நாம் உள்ளபடியே ஏற்கிறார். எனவே, நமக்குத் தகுந்த நம்பிக்கையும் தூய எண்ணங்களும் வந்த பிறகே இயேசுவிடம் வரவேண்டும் என்ற தேவையில்லை. நம் துன்பங்களையும் குழப்பங்களையும் குறைந்த நம்பிக்கையோடும் கூட அவரிடம் கொண்டுவரலாம்.
2. நாம்
இயேசுவின் குணப்படுத்தும் தொடுதலை உணர்ந்து, உடல் மற்றும் மனத்தின் புண்களை அவரிடம் திறந்து சொல்லி, அவர் குணப்படுத்தும் அருளில் நம்பிக்கை கொள்வோம்.