news-details
சிறப்புக்கட்டுரை
அருள்தந்தை ஸ்டேனின் சிறைவாழ்வு குறிப்புகளில் - சமத்துவமும் சாட்சியமும்!

2021, ஜூலை 05 அன்று பழங்குடி மக்களின் அறப்போராளி தந்தை ஸ்டேன் அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பல கண்டனப் போராட்டங்களையும், அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகளின் கண்டனக் குரல்களையும் ஏற்படுத்தியது. மனித உரிமை மீறலான இந்நிகழ்வு நடந்து நான்கு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை ஸ்டேன் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வும், அவரின் எழுத்துகளும் நம்மை வெறுமனே கடந்து செல்லவில்லை என்பதுதான் உண்மை.

அண்மையில் தந்தை ஸ்டேன் அவர்கள் சிறையில் இருக்கும் வேளையில் எழுதிய கடிதங்களையும் கவிதைகளையும், அவர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளையும் அவரின் ஆங்கிலத் தன் வரலாற்று நூலானநான் மௌன சாட்சி அல்லேன் (I am not a Silent Spectator) வழியாக வாசிக்க நேர்ந்தது. என் வாசிப்பில் நேசித்த, பாதித்த உள்ளொளிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

சமத்துவம் பேசும் கவிதை

தந்தை அவர்கள் டஜோலா சிறையில் இருக்கும்போது மூன்று கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றில்நம்மைச் சிறப்பாகச் சமப்படுத்துகிற சிறை வாழ்க்கைஎன்னும் தலைப்பில் எழுதியுள்ள கவிதை வரிகள் சமத்துவத்தையும் பொதுத்தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது...

நீ முதலில் வருகிறாய்!

நான் அடுத்ததாக வருகிறேன்; என்றாலும்

நாம் சுவாசிக்கும் காற்று ஒன்றல்லவா!

என்னுடையது எதுவுமில்லை,

உன்னுடையது எதுவுமில்லை,

எல்லாம் நமதே அவரவர் திறனுக்கும்

அவரவர் தேவைக்கும் தருவது பொதுத்தன்மை

இது நெருக்கடிச் சம்மட்டியால் நொறுக்கப்படாமல்

விருப்போடும் சுதந்திரத்தோடும்

அனைவரையும் அரவணைக்கும்போது

உண்மையில் நாம் எல்லாரும்

பூமித்தாயின் பிள்ளைகளாகிறோம்.’

என்ற கவிதை வரிகள் தந்தை ஸ்டேன் அவர்களின் ஆழமான சமூக மாற்றுச் சிந்தனையையும், அவர் சமூக மாற்றத்தில் கொண்டிருந்த தாகத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

சாட்சியம் பகரும் சிறைக் கடிதங்கள்

சிறையில் மலரும் மனிதம்: தந்தை ஸ்டேன் அவர்கள் சிறையிலிருக்கும்போது தனக்கு நடப்பதைப் பிறருக்குத் தெரியப்படுத்தக் கடிதங்களையும் சிறை நாள்குறிப்புகளையும் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் 12 கடிதங்களும், சில குறிப்புகளும் உள்ளன. அவை தந்தை அவர்கள் ஒரு சாட்சியாக வாழ்ந்ததை எடுத்துக்காட்டுகின்றன.

தந்தை ஸ்டேனைப் போல, அதே சிறையில் அதே காரணத்திற்காகச் சிறையிலிருக்கும் சமூகப் போராளிகளான வரவரராவ், வெர்னன் கொன்சால்வஸ் மற்றும் அருண் ஃபெரைரா அவர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தந்தை அவர்களுக்கு நடுக்கு வாதநோய் இருந்ததால் அருண் என்பவர் தந்தை ஸ்டேனுக்கு மதிய உணவருந்த உதவியதாகவும், வெர்னன் என்பவர் தந்தைக்குக் குளிப்பதற்கு உதவியதாகவும் எழுதுகிறார். மேலும், தந்தை ஸ்டேனுடன் உடனிருக்கும் இரண்டு சிறைவாசிகள் மற்ற நேரங்களில் துணிகளைத் துவைத்துத் தருவதில், மூட்டு வலிக்கு மருந்திடுவதில் உதவியாக இருந்ததை நன்றியோடு நினைத்து அதனைத் தனது கடிதம் ஒன்றில், ‘எல்லா முரண்பாடுகளுக்கும் மத்தியில் டஜோலா சிறையில் மனிதம் மலர்கிறதுஎன்று எழுதுகிறார்.

சிறையிலும் பிறர் நலனில் அக்கறை கொண்டவர்: டஜோலா சிறையில் காரணமின்றிச் சிறையில் வாடும் பலருடன் உரையாடி, அவர்களின் கவலைகளைப் பகிர்ந்து கொண்ட தந்தை ஸ்டேன்சிறைவாசிகளின் புன்னகையிலும் வலிகளிலும் கடவுளைக் காண்கிறேன்என்று எழுதுகிறார். தனது கருத்துகளை எழுதியதோடு நின்றுவிடாது, செயலிலும் வாழ்ந்து காட்டுகிறார். தந்தை ஸ்டேன் அவர்களுக்குமுகுந்தன் மேனன் மனித உரிமை விருதுஅறிவிக்கப்பட்டு அதற்குப் பாராட்டுத் தொகையாக ரூபாய் 25,000 வழங்கப்பட்டது. அதனை ஆதிவாசி மக்களுக்காகச் சிறையில் வாடும் நபர்களின் குழந்தைகளுக்கு வழங்கிட கேட்டுக்கொண்டார். இச் செயல் தந்தை அவர்கள் பிறர்நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.

துன்புறும் மானுடத்தோடு பயணித்தவர்: தந்தை அவர்கள் மக்களோடு தனது கையை மடக்கி முழங்கால்மீது வைத்துக்கொண்டு தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படமானது புலனப் பக்கத்தில் பலரும் பகிர்ந்தனர். இப்படம் தான்நான் மௌன சாட்சி அல்லேன்என்ற புத்தகத்தின் அட்டைப் படமாக உள்ளது. மக்களோடு உடன் பயணிக்கும் பண்பானது, தந்தை அவர்கள் சிறைக்குச் சென்றும் தனது பணியை நிறுத்திவிடவில்லை; மாறாக, சிறையில் வாழும் சிறைவாசிகளின் உண்மை நிலையை அறிய முற்பட்டதோடு, தன்னுடன் இருப்பவர்களுக்காகச் செபிக்கக் கேட்கிறார். மக்களோடு மக்களைப்போல் உடனிருப்பது, மக்களைத் தனதாக்கிக்கொள்ள வழி செய்கிறது என்ற பணிவாழ்வுக்கான வழிகாட்டியாக அமைகிறார் தந்தை ஸ்டேன்.

உண்மைக்காகப் போராடுவதில் ஓய்வு காணாதவர்:  ‘பல இன்னல்கள், இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் தந்தை ஸ்டேன் அவர்களால் எப்படி உடன்பாட்டு எண்ணங்களுடன் சிறை வாழ்வை எதிர்நோக்க முடிந்தது?’ என்ற கேள்விக்குத் தந்தை அவர்கள் சிறைக்குச் செல்லும் முன்னர் காணொளியில் பேசிய வார்த்தைகள் பதிலாக அமைகிறது.  “உண்மை கசப்பாக, கருத்துத் தெரிவிப்பது சகிக்க முடியாததாக, நீதி எட்டாததாக ஏனோ மாறிப் போனது? காரணம், உண்மை அதிகாரத்திற்குக் கசப்பாக, கருத்துத் தெரிவிப்பது ஆளும் வர்க்கத்துக்குச் சுவையற்றதாக, நீதி வலுவிழந்தவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எட்டாக் கனியாக மாறியுள்ளது. இருந்தாலும், உண்மை அறிவிக்கப்பட வேண்டும்; கருத்துத் தெரிவிப்பது உயர்த்தப்பட வேண்டும்; நீதி ஏழைகளின் கதவுகளை அடைய வேண்டும். நான் மௌன சாட்சி அல்லேன். செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை அனுபவிப்பது கடவுளின் விருப்பமென்றால் அவ்வாறே நடக்கட்டும். ஆதிவாசிகளின் உரிமைக்காக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதால் என்னைத் தேசத்துரோகி என்று மரண தண்டனை விதித்தாலும் பரவாயில்லை; அதுவும் நடக்கட்டும்.” 

இயேசுவின் இறப்பைத் தன்னிலே பிரதிபலித்தவர்: தந்தை ஸ்டேன் அவர்களுக்குத் தண்ணீர் குப்பி தராத நிகழ்வு மனித உரிமை பறிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. இயேசு சிலுவையிலிருந்துதாகமாயிருக்கிறேன் (யோவா 19:28) என்று கூறிய நிகழ்வு, இயேசுவைப் பின்பற்றிய தந்தை அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது எனலாம். இயேசுவின் ஏழை எளியோரின் நீதிக்கான வாழ்வை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் அநீதியான தீர்ப்பைப் பழங்குடி மக்களின் வாழ்வுக்காக ஏற்றுக்கொண்டு தன்னுயிர் தந்தார். இவ்வாறு இயேசுவின் இறப்பும், இயேசுவைப் பின்பற்றிய தந்தை ஸ்டேனின் இறப்பும் மனித உரிமை மீறலையே சுட்டிக்காட்டுகிறது.

சவால் விடுக்கும் கேள்விகள்

தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்தேதான் தந்தை ஸ்டேன் அவர்கள் சிறை சென்றதாகக் குறிப்பிடுவது தந்தை அவர்கள், தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது, வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாது, நீதிக்காக, உண்மைக்காக இறுதி வரையும் குரல் கொடுத்து, செயல்வீரராக வாழ்ந்த நிலைப்பாடு நம்மில் எத்தனை பேருக்கு வரும்?

தன்னைச் சுற்றி நடக்கும் அநீதி தனக்கு மட்டும் நடக்கின்ற ஒன்றல்ல என்று சமுதாயத்தின் அவலங்களைக் கண்டுகொண்டு, சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட இயேசுவைப்போல சாட்சிய வாழ்வு வாழ அழைக்கிறார். 2020, ஆகஸ்டு 13 அன்று திருத்தந்தை பிரான்சிஸ், “மனித இனம் தன்னலம் மற்றும் கண்டுகொள்ளாமையில் இருந்து குணம் பெறவேண்டும்என்று செபிக்க அழைப்பு விடுத்தார்சமூகத்தில் நடக்கும் அவலங்களைக் கண்டுகொண்டு, சரியான பதிலிறுப்பைத் தன் சாட்சிய வாழ்வு வழியாகத் தந்த இயேசுவைப்போல சமூக மாற்றத்தையும் சமத்துவத்தையும் உருவாக்கும் சாட்சிகளாக வாழ முயற்சிப்போம்.