திருப்பலி முன்னுரை
ஆண்டின்
பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறான இன்று அன்னையாம் திரு அவை நல்ல சமாரியனாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆலயத்தில் மட்டுமல்ல, அடுத்தவரிலும் ஆண்டவரைக் கண்டு உதவி செய்து வாழும் நல்லோர்களால்தான் இன்றும் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எருசலேமிலிருந்து எரிகோ செல்லும் பாதையில் ஒருவர் கள்வர் கையில் அகப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கிறார். குருவும் லேவியரும் அந்த நபரைக் கண்டும் காணாமல் செல்கின்றனர். மனிதன் கடவுளின் சாயல். உடன் வாழும் அனைத்து மனிதரிலும் கடவுளைக் கண்டு எதையும் எதிர்பார்க்காது, தேவையறிந்து உடனே உதவி செய்பவரே கடவுளைப் பிரதிபலிக்கும் நல்ல சமாரியர். உடன் வாழும் சகோதரர்கள் துன்பப்படும்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பாவம். நல்ல சமாரியராக வாழ வீதிகளுக்குச் சென்று உதவத் தேவையில்லை; நம்முடைய வீடுகளில் உள்ள நோயுற்றோரை, முதியோரை நாம் கவனிக்கிறோமா? நம்முடைய தாத்தா-பாட்டி, மாமனார்-மாமியார், தாய் மற்றும் தகப்பனை முதியோர் இல்லத்தில் தவிக்கவிடாமல் இருப்பதே நல்ல சமாரியர்களாக வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் சான்று. அன்புக்காக, உறவுக்காக, உடனிருப்பிற்காக, உள்ளத்துச் சுமைகளை இறக்கி வைப்பதற்காக, மனம்விட்டுப் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நல்ல சமாரியனாக இருந்து உதவிடுவோம். இயேசுவைப்
போன்று நம்முடைய சிந்தனையால், சொல்லால், செயல்களால் நல்ல சமாரியனாக வாழ்ந்திட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
ஆண்டவரின்
கட்டளைகள் அனைத்தும் அன்பை அடித்தளமாகக் கொண்டவை. நம் வாழ்வுக்கு அகவொளியைத் தருபவை. ஒளியின் பாதையில் பயணிக்க உதவுபவை. எனவே, ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் இருளின் செயல்களான பகை, கோபம், வெறுப்பு, மன்னிக்காமை போன்றவற்றை விடுத்து, நாளும் ஆண்டவரின் அன்புக் கட்டளையில் வளரவும், இறைவார்த்தையைப் படித்து அதை வாழ்க்கையால் அறிவிக்கவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இவ்வுலகில்
உள்ள அனைத்தையும் தமது சாயலில் படைத்த இறைவன், தமது மகனை இவ்வுலகிற்கு அனுப்பி மானுட வாழ்வுக்கு மீட்பைக் கொடுத்தார். வேற்றுமைகளைக் களைந்து இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தையும்- அனைவரையும் ஒப்புரவாக்கினார். கடவுளின் மீட்பைப் பெற்றுள்ள நாம் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் இறைமையைக் காணவும், நம் வாழ்க்கையின் வழியாக இறைசாயலை வெளிப்படுத்தவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! உமது அன்புப் பணியைச் செய்வதற்கு நீர் தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும் உமது அளவில்லாத அன்பைச் சுவைத்து, காலத்திற்கேற்ப கருத்தாய்ப் பணிபுரிந்திட தேவையான ஞானத்தைக் கொடுத்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நல்ல
சமாரியராக இருந்து எம்மைக் காக்கும் ஆண்டவரே! நாங்கள் உடன்வாழும் சகோதர - சகோதரிகளின் தேவையறிந்து உதவி செய்திடவும், மற்றவர்களின் காயத்திற்கு மருந்தாகிடவும் தேவையான நல்ல மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நல்ல
ஆயனே! எம் நாட்டுத் தலைவர்கள் மக்களின் தேவையறிந்து கொடுக்கும் நல்ல ஆயர்களாக வாழ்ந்திடத் தேவையான நல்மனத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின்
ஆண்டவரே! அனைத்துக் குழந்தைகளும் பகிர்ந்து வாழ்வதிலும், குறிப்பறிந்து உதவி செய்வதிலும், அன்பாகப் பழகுவதிலும் வளரத் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.