ஜெர்மனி நாட்டவரான இரண்டாம் லூட்விக் (Ludwig II 1845-1886) ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தில் அரசராக இருந்தார். மன்னராக முடிசூட்டப்பட்டபோது அவருக்கு வயது 18. ‘கற்பனைக் கதை மன்னன்’ (Fairy tale King) என்றழைக்கப்படும் அவரின் மற்றொரு பட்டப்பெயர் ‘மதியற்ற மன்னன் லூட்விக்’ (Mad King Ludwig). செல்வம் மிகுந்துவிட்டால் மனிதர்கள் மதியற்ற செயல்களில் ஈடுபடத் துணிகின்றனர் என்பதற்கு மன்னன் இரண்டாம் லூட்விக் ஓர் எடுத்துக்காட்டு. ஜெர்மனி நாட்டில் உள்ள Chiemsee ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறு தீவில், இரண்டாம் லூட்விக் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்ட ஆணையிட்டார். 70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையின் ஒருசில அறைகள் கட்டப்பட்டதும், 1885-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் அங்குத் தங்கியிருந்தபோது, யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கெனத் தயாரிக்கப்பட்ட உணவு, ஓர் இயந்திரத்தின் வழியாக அவரது அறைக்கு அனுப்பப்பட்டது. அவர் அங்குத் தங்கியிருந்த அறைகளில் பிரம்மாண்டமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. தன்னை மட்டுமே நாள் முழுவதும் பார்த்தவண்ணம் அவர் அந்த அரண்மனையில் வாழ்ந்தார். 70 அறைகள் கொண்ட அந்த அரண்மனையில் 30 அறைகளே கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் அவர் மர்மமான முறையிலே இறந்தார். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வினோத மனிதர் மன்னன் லூட்விக். நாம் வாழும் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் இத்தகைய வினோதமான செயல்களில் ஈடுபடும் செல்வந்தர்களைக் காணமுடிகிறது.
இன்று ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு. இன்றைய உலகில் பீடமேற்றி வணங்கப்பட்டு வரும் சுயநலம், பேராசை, பணம், செல்வம் ஆகிய நோய்களிலிருந்து நலம்பெற இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்று செல்வம். வாழ்வின் பெரும்பகுதியை இப்பொருளீட்டலுக்காகவே செலவிடுகிறோம். நாளைக்கு வாழவேண்டும் என்பதற்காக எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறோம். அறம், பொருள், இன்பம் என்ற வழிமுறை வகுத்து, அறவழியில்தான் பொருள் சேர்க்க வேண்டும் என்றும், அந்தப் பொருளைக்கொண்டே இன்பம் துய்க்கவேண்டும் என்றும் முறைவைத்தனர் நம் முன்னோர். நிலையில்லாச் செல்வத்தின்மீது கொள்ளும் பற்று உயிரின் உய்வுக்குத் தடையாகிறது.
அளவுக்கு அதிகமான ஆசை ஒருவரைத் தீய வழிக்கு அழைத்துச்சென்று, துன்பம் என்ற விலையைப் பெற்றுக்கொடுக்கிறது. எனவேதான் புத்தர் “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்றார் போலும். ‘காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடை வழிக்கே’ என்றார் பட்டினத்தார். நாம் இறந்த பிறகு இவ்வுலகில் சேர்க்கும் செல்வங்களோ, பொருள்களோ எவையும் நம்முடன் வருவதில்லை. “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்று பாடினார் நம்மாழ்வார். பற்றுதல் அற்றுவிட்டால் வீடுபேறு கிடைக்கும் அன்றோ! இறைவன்மீது பற்றுக்கொண்டு, நம் துன்பங்களை நீக்கும் வழியறிந்து வாழவேண்டும். ஈட்டியப் பொருள்கள் நேர்மையாக வாழவும், தேவையில் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுகின்றவையாக இருக்கவேண்டும் எனும் அழகிய பாடங்களை ‘அறிவற்றச் செல்வன்’ உவமை வழியாக இயேசு இன்று நமக்குக் கற்றுத் தருகிறார்.
“போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” (லூக் 12:13) என்ற சொற்றொடரோடு இன்றைய நற்செய்தி தொடங்குகிறது. “சமயத் தலைவர்களின் தவறான வழிநடத்துதலைக் குறித்துக் கவனமாக இருங்கள்” என்று இயேசு மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் கூறிய அழகான பாடங்களுக்குச் சற்றும் செவிகொடாமல், தன்னுடைய உலகத்தில் தன்னுடைய பிரச்சினைக்குள் மூழ்கிக்கிடந்த ஒருவர், இயேசுவின் போதனையை இடைமறித்து, தன் பிரச்சினையைக் கூறுகிறார். புகழும் பொருளும் திரட்டி வந்த சமயத் தலைவர்களைப்போல தம்மையும் அந்த மனிதர் கருதியதைக் கண்டிக்கும் இயேசு, சூழ இருந்த மக்கள் அனைவருக்கும் ‘பேராசை பெரும் இழப்பு’ என்ற ஒரு மேலான உண்மையை எடுத்துரைக்கிறார். “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்; மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (12:15) எனும் பேருண்மையைத் தெளிவாக்க, செல்வன் ஒருவனது கதையை உவமையாகத் தருகிறார்.
இந்த உவமையில் இயேசு செல்வனை ‘அறிவற்றச் செல்வன்’ என வருணிக்கிறார். என்ன காரணம்? அறிவற்றச் செல்வனைப்பற்றி இயேசு அறிமுகப்படுத்தும் வரிகளில், “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது” (12:16) என்கிறார். இந்தச் செல்வந்தனின் விளைநிலம், அந்நிலத்தின் விளைபொருள்கள். அவை வழியே வந்து சேர்ந்த செல்வங்கள், இறைவன் இச்செல்வந்தனுக்கு வழங்கிய பரிசுகள் அல்லவா! இவனின் நல்ல விளைச்சலுக்கான காரணங்கள் இறைவனின் இரக்கம், பொய்க்காமல் பெய்த மழை, உழைப்பாளிகளின் வியர்வை. ஆனால், இவை எவையும் இச்செல்வனின் சிந்தையில் எழவில்லையே! அவனது உழைப்புக்கும் உயர்வுக்கும் முதற்காரணரான கடவுளைத் தன் வாழ்வில் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவன் சிந்தனையை நிறைத்ததெல்லாம் அவன் களஞ்சியங்களில் குவிக்கப்பட்டிருந்த விளைபொருள்கள் மட்டுமே. எனவேதான், இச்செல்வனின் மனத்தில் தோன்றிய முதல் எண்ணங்கள், “நான் என்ன செய்வேன்? என் விளைப்பொருள்களைச் சேர்த்துவைக்க இடமில்லையே!” (12:17).
பேராசை சுயநலமானது; அது தன்னை, தன் மகிழ்ச்சியை மட்டுமே முக்கியமாக நினைக்கும். பேராசை ஒருபோதும் ‘போதும்’ என்று சொல்லாது. அது இறையாட்சியின் வாயிலையே நமக்கு அடைத்துவிடும் (மாற் 10:23, 1 திமொ 6:8). “பணம் கடல்நீரைப் போன்றது. அதைப் பருகப்பருக இன்னும் கூடுதலாகத் தாகம் எடுக்கும்” என்பது ஓர் உரோமைப் பழமொழி. அறிவற்றச் செல்வன் உடலளவில் தான் பெற்ற வாழ்வும், தன்னைச் சுற்றிக் குவிந்துள்ள செல்வங்களும் நிரந்தரமாக இருக்கும் என்று எண்ணினான். தனக்கு நல்ல எதிர்காலம் உள்ளதால் மகிழ்வாக இருப்பதாக நம்பினான். தான் சேமித்துவைத்த பொருள்களில் பாதுகாப்பை உணர்ந்தான்; வாழ்வில் கடவுளைப் புறக்கணித்தான். பெரும் களஞ்சியங்களில் தானியத்தைத் தனக்கென மட்டும் குவித்து வைக்காது, மக்களோடு சிறப்பாக, இல்லாதவர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு அவன் செய்யவில்லை. அவன் தனக்குள் சொல்லிக்கொண்டவை எல்லாம் “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு” (12:19) என்ற மிகவும் ஆபத்தான சொற்களே. இவனுடைய எண்ணங்களும் செயல்களுமே இச்செல்வனுக்கு ‘அறிவிலியே’ என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
நாம் செல்வத்தைக் கொண்டிருப்பது பாவமல்ல; செல்வம் தன்னிலே தவறானதும் இல்லை; செல்வம் ஓர் ஆற்றல். ‘செல்வம் செல்லவேண்டும்; அவை கொடுக்கப்படவேண்டும்’. நாம் ஈட்டும் செல்வம் தேக்க நிலையில் இருந்தால், அங்கே பூச்சியும் புழுவும்தான் இருக்கும் (யாக் 5:1-5). உலகப் பொருள்களை அளவுக்கதிகமாகத் தேடுவது கவலை, அச்சம், பகைமை, சுயநலம், பேராசை, போர் போன்றவைக்கே இட்டுச்செல்லும்.
இவ்வுலகில் அனைவரும் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தும், உணவைப் பணமாக மாற்றும் பேராசையினால், உணவைப் பதுக்கும் சுயநலவெறி வளர்ந்துவிட்டதால் பசியும் பட்டினியும் இவ்வுலகில் தாண்டவமாடுகின்றன. இன்றைய அரசியல், சமூகம், கல்வி, மருத்துவம், விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் நிலவும் இலஞ்சம் வேதனைக்குரியது. செல்வத்தின்மேல் பற்றுக்கொள்வது வீண். இதனையே இன்றைய முதல் வாசகத்தில் பொருள்சார்ந்த, பேராசைமிக்க உலகத்தைக் காணும் சபை உரையாளர் “வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்” (1:2) என்று கூறுகிறார்.
உலகப் பொருள்கள் நம் வாழ்வுக்கு அவசியமானவைதான்; ஆனால், அவையே நம் வாழ்வின் இறுதி இலக்கை எட்டுவதற்கான கருவிகளாக இருத்தலாகாது. மாறாக, அப்பொருள்கள் நேர்மையாக வாழவும், மிக அதிகத் தேவையில் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுபவையாக இருக்கவேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் “நம் கரங்கள் கட்டியெழுப்புவதற்கும் சேவையாற்றுவதற்கும் கொடுப்பதற்குமெனப் படைக்கப்பட்டுள்ளன. இதுவே வாழ்வின் இரகசியம்” என்று குறிப்பிடுகிறார் (ஐரோப்பிய சாரணர் இயக்க இளையோர் சந்திப்பு,
03.08.2019).
எனவே, எவற்றிலிருந்து நாம் பற்றறுந்து விலகி நிற்கிறோமோ, அவற்றினால் வரும் துன்பங்களிலிருந்தும் அப்போதே விலகிவிடுகிறோம் என்பதுதான் வாழ்வின் பேருண்மை. வாழ்க்கைப் பயணத்தில் வருவது அனைத்தும் நில்லாது ஒருநாள் நீர்க் குமிழியாக மறைந்துவிடும். உலகப் பற்றுகளிலிருந்து விடுபட, இதயத்தில் இறைவனைப் பற்றி நிற்போம். நமக்கான உண்மையான செல்வக் குவியல் விண்ணகத்தில் உள்ளது!