news-details
சிறப்புக்கட்டுரை
கோவில் மாடு (வலையும் வாழ்வும் – 19)

மேளதாளத்தோடு சவ ஊர்வலம், தார் சாலையெங்கும் காலில் மிதிக்கப்பட்டு ஒப்பாரி வைக்கும் பூக்கள், பாதையில் குறுக்கே செல்லும் மாட்டு மந்தைகளைப்போல சாலையை மறித்துச் செல்லும் பெருங்கூட்டம், கூட்டத்திற்கு நடுவில் மாரடித்து அழுதுகொண்டே ஒப்பாரி ஓலங்களோடு சில பெண்கள்!

யார் இறந்து போனது? அரசியல் தலைவராக இருப்பாரோ? இல்லை... இல்லை...! அப்படியெனில், கட்சிக்கொடிகள் காணப்பட்டிருக்குமே! சினிமா பிரபலம் யாராவது? சீ! இருக்காது. சினிமா பிரபலமெனில், சினிமா முகங்கள் தென்பட்டிருக்குமே!

மதுரையில் சாலையோர டீக்கடையில் ஒரு பேப்பர் கப் டீயோடு நின்றிருந்த என்னை இந்தச் சவ ஊர்வலம் திரும்பிப் பார்க்க வைத்தது. டீ மாஸ்டர் கடைசியில் மிஞ்சும் டீத்தூளைச் சுடுதண்ணீரில் வடித்தெடுப்பதுபோல, ‘இறந்தவர் யார்?’ என்ற கேள்வி என் மனத்தை வடிகட்டியது.

இத்தனை மனிதர்களின் மனத்தையும் சம்பாதித்த இந்தப் பெரிய மனிதர் யார்? ஆணா? இல்லை... பெண்ணா? டீக்கடைக்காரரிடம் கேட்டேன். அவரும்ஒவ்வொரு நாளும் ஒரு சவ ஊர்வலம் போகுது. அதெல்லாம் யாருனு தெரிஞ்சு வச்சுக்கணுமா?”

இம்முறைச் சர்க்கரையோடு கொஞ்சம் கோபத்தையும் கலந்தே டீ ஆத்தினார். ‘தெரியாதுஎன்று ஒற்றை வார்த்தையில் அவர் முடித்திருக்கலாம். பரவாயில்லை. சண்டைபோட நேரமும் இல்லை. டீ குடித்த பேப்பர் கப்பைச் கசக்கி எறிந்துவிட்டு சவ ஊர்வலத்தைப் பேரார்வத்தில் பின்தொடர்ந்தேன். கொஞ்ச தூரம் சென்றபிறகு சவ ஊர்வலம் நின்றது. மணமகன் ஊர்வலத்தில் மணமகனை மணமகள் கண்கள் தேடுவதுபோல சவ ஊர்வலத்திற்குள் இறந்துபோனவரைக் காண ஊடுருவிச் சென்றேன். அருகில் சென்ற எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இறந்துபோனது ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. அது மனிதரே இல்லை! டிராக்டருக்குப் பின்னால் இணைக்கப்பட்ட பெட்டியிலிருந்து ஒரு சிறு ரக கிரேன் கொண்டு பிணத்தை அப்படியே தூக்கியெடுத்தார்கள்.

அது ஒரு கோவில் மாடு. மஞ்சளால் பூசப்பட்டு மாலையிடப்பட்டிருந்தது அந்த மாடு. ஐயோ! மன்னிக்க வேண்டும். மாடு இல்லை, சாமி! அங்குச் சூழ்ந்திருந்தவர்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள். அவர்களின் அழுகையைப் பார்த்து உண்மையைக் கூற வேண்டுமென்றால், என் கண்ணும் கொஞ்சம் கலங்கியது. மாட்டிற்குக் கொடுக்கும் இந்த மரியாதையில் கொஞ்சமேனும் இந்தச் சமூகம் எனக்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

வீட்டிற்குச் செல்ல பேருந்தில் ஏறினேன். அருகில் வந்த நடத்துநரிடம், “அம்பேத்கர் நகருக்கு ஒரு டிக்கெட் கொடுங்கஎன்றேன். டிக்கெட்டை வாங்கிச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு சன்னலோரம் அமர்ந்தேன். சன்னல் காற்று என்னவோ இதமாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அது முகத்தைத் தழுவிச் செல்லும்போது ஊருக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத என் அப்பாவின் சவ ஊர்வலம் என் நினைவிற்கு வந்து என் கண்களை நனைத்தது. ‘அடுத்த சென்மத்தில் கோவில் மாடாகப் பிறந்திட வேண்டும்என்று எண்ணிக்கொண்டிருக்கையில், ‘அம்பேத்கர் நகர் இறங்குஎன்ற கண்டக்டரின் குரல் கேட்டு இறங்கிச் சென்றேன்.

எத்தனை தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வந்தாலும், மனிதர்களைப் பிளவுபடுத்தும் சாதி, சமய வேற்றுமைகள் ஒழிந்தபாடில்லை. மனிதர்களுக்கு அன்று கோவில் மாடுபோல இன்று .. தொழில்நுட்பம் சமயச் சடங்குகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றது. கோவில் மாடுகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை இன்று குறைந்திருப்பதால், அதனை ஈடுசெய்ய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாச் சமயங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாகவே சமயத்தலைவர்கள் அறிவியலின் குறுக்கீட்டையும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தையும் எளிதாக ஆதரித்துவிடமாட்டார்கள். ஆனால், இன்று செயற்கை நுண்ணறிவு எல்லாத் துறைகளிலும் ஊடுருவியிருப்பதுபோல சமயங்களிலும் அதன் வழிபாடுகளிலும் கால்பதித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது.

சமயத்தைப் பொறுத்தவரை முக்கியமாக இரண்டு தளங்களில் செயற்கை நுண்ணறிவின் தேவை இருக்கும்: 1) சமயங்களின் மரபுசார் நம்பிக்கையினைப் (Orthodoxy) பாதுகாக்கவும் ஆழப்படுத்தவும் அதனைப் பரவலாக்கம் செய்யவும் செயற்கை நுண்ணறிவு தேவைப்படலாம். 2) சமயங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையினையும், அதன் கோட்பாட்டினையும் சமூகத்தில் ஈடுபடுத்துவதற்கும், அந்நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கும் (Orthopraxis) செயற்கை நுண்ணறிவு தேவைப்படலாம்.

ஏற்கெனவே உலகில் பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவினால் செறிவூட்டப்பட்ட மனித உருவ ரோபோக்கள் சமயப் பயன்பாட்டிலும், அதன் வழிபாட்டு முறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஈரான் நாட்டைச் சார்ந்த அக்பர் ரெசாய் என்ற 27 வயது இளைஞர் ஒருவர்வெல்டன் (Veldan) என்னும் மனித உருவ ரோபோ ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.

குழந்தைகளுக்குக் குரானையும், இசுலாமியச் செபங்களையும் போதிப்பதற்காக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரோவடோ என்னும் 42 வயதான கணினிப் பொறியாளர்சாண்டோ (Santo) என்னும் கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கான ஒருரோபோ புனிதரைவடிவமைத்திருக்கின்றார். இந்த மனித உருவ ரோபோ, முதியவர்கள் செபிப்பதற்கு உதவுகின்றது. ‘பெப்பர் (Pepper) என்னும் மனித உருவ ரோபோவைசாப்ட்பேங்என்னும் ஜப்பானிய நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. புத்தமத பிட்சுகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் சரியாகப் புத்தமதச் செபங்களைப் புத்த வழிபாடுகளில் பயன்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, அடக்கச்சடங்கு நிகழ்வுகளில் ஓதும் செபங்களை மிகச் சரியாகவும் உச்சரிப்புப் பிழையில்லாமலும் ஒப்புவிக்கிறது. மலேசியாவில் புகழ்பெற்ற கோவிலில் சீனக் கடல்தேவதை என்று கருதப்படுகின்ற மசு மாதாவின் டிஜிட்டல் சிலையை (AiMazu) ‘அய்மாசின்என்ற நிறுவனம் வடித்துள்ளது. .. தொழில்நுட்பத்தால் செறிவூட்டப்பட்ட இக்கடல் தேவதையிடம் பக்தர்கள் என்ன கேள்வி கேட்டாலும், அதற்கு நம்பத்தகுந்த பதிலைச் சமய மற்றும் மனத்தத்துவ அடிப்படையில் தருகின்றது.

சுவிட்சர்லாந்தின் கத்தோலிக்கப் பேராலயம் ஒன்றில்தேயுஸ் இன் மெசீனா (Deus in Machina) என்னும் இயேசுவின் முப்பரிமாண டிஜிட்டல் உருவம் நிறுவப்பட்டுள்ளது. இத்தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் கேள்விகளுக்கு இறையியல் அடிப்படையில் சுமார் நூறு மொழிகளில் பதிலளித்து வருகிறார் .. இயேசு!

சமயங்களில் .. ரோபோக்களின் (Humaniod Robots) பயன்பாடு தொடக்க நிலையில் ஆச்சரியமூட்டக்கூடிய ஒன்றாக இருந்தாலும், அது எத்தகைய இறையியலை அடிப்படையாகக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே, அது எவ்வகையில் சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் கூறமுடியும்.

கடவுளை அடைவதிலும், மனித நேயத்தை வளர்ப்பதிலும் .. ரோபோக்கள் பயன்படுமாயின் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், நம் மக்கள் .. ரோபோக்களையே கடவுளாக்கிவிட்டால் அதை என்னவென்பது?