news-details
சிறப்புக்கட்டுரை
கல்விக்கண் திறந்த காமராசர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுப்பட்டி என்னும் கிராமத்தில் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம்  நாள் பிறந்தவர் காமராசர். அவரது பிறந்த நாளான ஜூலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அவர் 6-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அரசியலிலும் கல்வியிலும் நிகழ்த்திய சாதனைகள் இன்றும் நினைவுகூரத்தக்கன.

கல்வி என்பது மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்த கருவி. அது ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்த காலத்தில், ஏழை எளியவருக்கும் கல்வி வாய்ப்புக் கிடைக்கச் செய்த மறக்க முடியாத பெருந்தலைவர் காமராசர். இவ்வாறு கல்விக்காகப் போராடிய உன்னத நாயகன், தமிழர் என எண்ணி வியக்கும் வண்ணம் இன்றும் நம் நினைவில் வாழ்கின்றார்.

கல்வியும் காமராசரும்

காமராசரின் முக்கியமான இலட்சியம்ஏழைகளும் கல்விபெற வேண்டும்என்பதுதான். அறிவுச் சுடர் என்பதையே அறியாது, வாழ்வும் மனமும் வறுமையில் வாடிக்கிடந்து, செய்வதறியாது தவித்த மக்களுக்கு ஒளிவிளக்காக விளங்கும் கல்வியைத் தருவதையே முதற்கடமையாகக் கொண்டிருந்தவர். கல்வி செல்வந்தருக்கே உரியது என்ற நிலையை மாற்றிட அரசுப் பள்ளிகளை அதிகரித்து, கட்டாயக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்.

ஒரு நாட்டின் உண்மையான சொத்து கல்வி பெற்ற மக்களேஎன்பார் காமராசர். தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காலத்தில் அவர் தொடங்கிய கல்வித்திட்டங்கள் பலரது வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றது. தனது முதல் ஐந்தாண்டு ஆட்சியில் 4,267 தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினார். அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இலவசமாய்த் தொடக்கக் கல்வி கற்கும் சட்டத்தைக் கொண்டு வந்ததால்கல்விக்கண் திறந்த காமராசர்என அழைக்கப்பட்டார். பள்ளி மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். கல்வித் துறையில் காமராசரின் சீரிய திட்டத்தால், 1957-இல் இருந்த 15,800 தொடக்கப் பள்ளிகள், 1962-இல் 29,000 ஆக உயர்ந்தன. 1955 -இல் 814 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962-இல் 1,996 ஆக உயர்ந்தன.

மதிய உணவுத் திட்டம்

பசியுடன் வாடும் ஏழைக் குழந்தைகள் வயிறு நிறைந்திட மதிய உணவுத் திட்டம் தொடங்கி மதிகூர்மையுடன் செயல்பட்டார் காமராசர். இதனால் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாய் உயர்ந்தது. இதனால், காமராசர் பதவி ஏற்றபோது தமிழ்நாட்டில் 7% மட்டுமே கல்வி பெற்றிருந்தனர் என்ற நிலை மாறி 37%- ஆக உயர்ந்தது.

காமராசரின் முயற்சியால் பழங்குடியினருக்கும், கிராமப்புறத்தில் இருக்கும் மற்றும் மலைவாழ் மக்களுக்கும் கல்வி கிடைத்தது. ‘ஒரு பள்ளி உருவானால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும்என்ற நம்பிக்கையில் அவர் செயல்பட்டார். ‘அடிப்படைக் கல்வியே இந்தியாவின் வளர்ச்சி மையம்எனக் கூறினார். ‘எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி மட்டுமே ஒரே சொத்து. கல்வி என்ற சொத்தைப் பெற்றுவிட்டாலே வறுமை தானாகவே ஒழிந்து விடும்என்று கூறினார்.

ஒருமுறை ஒரு நிபுணர் அவரிடம், “உங்களது முக்கியமான சாதனை எது?” என்று கேட்டார். அதற்கு அவர்ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்லும் நாள்தான் என் வாழ்க்கையின் சாதனைஎன்றார்.

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக (குறள் 391)

என்ற வள்ளுவரின் வாக்கு காமராசரின் கல்விக்கொள்கையின் வெளிப்பாடே. மேலும் இவரது சிறப்புகள் பற்பல...

காமராசரின் அறப்பணிகள்

அடிப்படைக் கல்வி மட்டுமன்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தையும் நிறுவினார். பல பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளை உருவாக்கினார். சிறப்புக் கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி நிலையங்களையும் தொடங்கினார். பட்டி தொட்டி எல்லாம் நூலகம் அமைத்து, வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தினார். சிறந்த நீர்வளப்பாசனத் திட்டங்களைத் தீட்டி வெற்றி கண்டார். பெரியாறு திட்டம், பாபநாசம் திட்டம், மணிமுத்தாறு திட்டம் உள்ளிட்ட பல நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தினார். இதனால் நெல் மற்றும் விவசாய உற்பத்தி அதிகரித்தது. இவ்வாறு தமிழ் நாட்டில் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டார்.

அவரது ஆட்சியில் அறிவியல் மற்றும் தொழில்துறை வளர்ச்சி பெற்றது. நெய்வேலி லிக்னைட் கழகம், பொதுநிலைத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதனால் சேவை வாய்ப்புகள் உருவானது. மேலும், மாநிலத்தின் பொருளாதாரம் மேம்பட்டது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், மதுரை போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கினார். தொலைதூரக் கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பேருந்து வசதிகளை மேம்படுத்தினார். தமிழ்நாடு அரசுப் பேருந்து சேவையை விரிவுபடுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளி, சாலை, குடிநீர் தொட்டி அமைத்துக் கிராமப்புற வளர்ச்சியில் பங்கெடுத்தார்.

கிங் மேக்கர்என இந்தியா போற்றும் வகையில் செயல்பட்டார். 1963-67 காலகட்டங்களில் இந்தியத் தேசியக் காங்கிரசின் தலைவர் பதவியை வகித்தார். அப்போது லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திராகாந்தி ஆகியோரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்த முக்கியத் தலைவர் காமராசர். ஊழலுக்கு இடமில்லாத அரசியலையும் நேர்மையான நிர்வாகத்தையும் தந்தவர் காமராசர். ‘யுனெஸ்கோஉள்ளிட்ட பல கல்வி அமைப்புகள் காமராசரின் கல்வி வளர்ச்சியைப் பாராட்டியுள்ளன.

இவரைப்போல இனி எவர் உளர்?

காலமெல்லாம் கதர் அணிந்து மக்கள் பணியாற்றிய மாபெரும் தலைவர் காந்தி பிறந்த அக்டோபர் 2-ஆம் நாளையே தனது நினைவு நாளாக்கிச் சென்றார். ‘கல்வி கற்பதும் அறிவு பெறுவதும் அன்பு செய்யவே; அன்பு செய்வதும் பண்பு காப்பதும் அறம் வளர்க்கவேஎன்பதை மாணவர்கள் இதயத்தில் பதியவைத்துச் சென்ற காமராசர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனத்தில் என்றும் நிலைத்து நிற்கிறார் என்பதே நிதர்சனம். காலங்கள் கடந்தாலும் அவரது திட்டங்கள் மறையவில்லை. காவியத் தலைவன் பிறந்த நாளை காலம் முழுதும் நினைத்துப் போற்றுவோம்; அவரின் வழி நடப்போம்.