news-details
சிறப்புக்கட்டுரை
வைகைக் கரையின் வளமான மறைச்சான்று...

தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் நலிந்தோர் சேவைக்கும் பெயர் பெற்றுத் திகழும் ஒப்புயர்வற்ற மறைத்தளம் மதுரை உயர்மறைமாவட்டம். ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மறைப்பணி வரலாறு கொண்ட இத்தளம், சேசு சபையின் நிறுவுநர் புனித இலொயோலா இஞ்ஞாசியாரின் அன்புத் தோழர் புனித பிரான்சிஸ் சவேரியார் கோவாவிலும், தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் நற்செய்தி அறிவித்துச் சென்ற சூழலில், தென் தமிழ்நாட்டின் மையப்பகுதிகளில் மதுரையை மையமாகக் கொண்டு தமிழ் வளர்த்த மறைப்பணியாளர்களைக் கண்ட மங்காத மறைத்தளம் இது.

தமிழுக்குத் தொண்டாற்றி தமிழ் முனிவராகவே வாழ்ந்து தேம்பாவணி காப்பியம் படைத்த வீரமாமுனிவர், தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்பட்டதத்துவ போதகர்அருள்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி, இராமநாதபுரம் மறவ நாட்டில் மறைச்சாட்சியாய் மரித்த அருளானந்தர், புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த திரிங்கால் சாமிகள், கழுகேர்கடையில் வேதசாட்சியாக இன்னுயிர் தந்து, ‘வேதபோதகர்என அன்போடு அழைக்கப்படும் அருள்பணி. அகஸ்டின் கப்பலி, பாம்பன்-மண்டபம்-வேதாலை கடற்கரைப் பகுதிகளில் மறை வளர்த்து, சேசு சபையாரின் முதல் மறைச்சாட்சியான அருள்பணி. அந்தோணி கிரிமினாலி, இறைஊழியர் தந்தை லெவே சுவாமிகள்... எனத் தொடர்ந்த சேசு சபையாரின் மறைப்பணித் தொண்டு இன்றும் கல்வி, சமூக, ஆன்மிகத் தளங்களில் ஆழம் கொண்டு மக்களை நம்பிக்கையில் வளர்த்து வருவது நன்றியோடு நினைவுகூரத்தக்கது. இயேசு சபையாரின் மறைப்பணியால் அன்று மதுரை மறைத்தளம் புதிய வடிவம் பெற்றது என்றால் அது மிகையல்ல.

ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட மதுரை உயர்மறைமாவட்டம், இதுவரை ஆறு பேராயர்களைக் கண்டிருக்கிறது. அன்றைய ஒருங்கிணைந்த மதுரை உயர்மறைமாவட்டத்தின் எல்லையானது வடக்கில் மேலூர் முதல், தெற்கில் வள்ளியூர் வரையிலும் கிழக்கில் இராமேஸ்வரம் தீவு முதல் மேற்கில் கொடைக்கானல் மலை வரைக்கும் பரந்து விரிந்திருந்தது.

இந்த உயர்மறைமாவட்டத்தின் முதல் பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் ஜான்பீட்டர் லியோனார்டு அவர்கள், எல்லாப் பங்குத்தளங்களிலும், எல்லாப் பெரிய கிளைப்பங்குகளிலும் ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கி இவ்வுயர் மறைமாவட்டத்தின் கல்வி மேம்பாட்டுக்கு வழிகாட்டினார். அந்நாளில் ஆன்மிகம், கல்வி, சமூக, மருத்துவப் பணிகள் என யாவற்றையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதுவே பின்னாளில் பல்வேறு பணிகளாகக் கிளைபரப்ப, வளர்ச்சி அடைய அடித்தளமாக அமைந்தன.

உயர் கல்வியை மனக்கண்முன் கொண்டு, உயர்நிலைப் பள்ளிகள் முதல் கல்லூரி வரையிலான உயர்கல்வியை உயர்மறைமாவட்டம் முழுமைக்கும் கொண்டு வந்து சேர்த்த பெருமை இரண்டாவது பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களையே சாரும்! இவருடைய காலத்தில் பாளையங்கோட்டை, சிவகங்கை, மதுரை என எல்லாப் பணித்தளங்களிலும் எண்ணற்ற புதிய ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், மாணவர் விடுதிகள் கட்டப்பட்டன. இவ்வளர்ச்சி இன்னும் விரிவுபட பாளையங்கோட்டை, சிவகங்கை மறைமாவட்டங்களைப் பிரித்து அதனுடைய முழுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டியவரும் அவரே!

மூன்றாவது பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் கஸ்மிர் ஞானாதிக்கம் அவர்கள் 20 மாதங்கள் மட்டுமே இங்குப் பணியாற்றி, பிறகு சென்னை - மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணிமாறுதல் பெற்றுச் சென்றார். பேராயரின் பணிக் காலம் மதுரை உயர்மறைமாவட்டத்தில் சிறிது காலமே என்றாலும், மேய்ப்புப்பணியில் பல புதிய தடங்களைப் பதித்துச் சென்ற பெருமைக்குரியவர்.

நான்காவது பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்களின் 17 ஆண்டுகாலப் பணித்திட்டங்கள், செயல்பாடுகள் தமிழ்நாட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை, மற்றொரு தலைநகரம் போலவே சமூக, ஆன்மிக, அரசியல் தளங்களில் பல்சமயத் தலைவர்களின் கூடுகையால், அவர்களின் வீரியமான செயல்பாடுகளால், ‘திருவருட்பேரவைபோன்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் பணிகளால், மதுரை அன்றாடச் செய்தியில் தவிர்க்க முடியாத நகரமாகவே இருந்தது.

அதன் பிறகு பத்து ஆண்டுகள் உளவியல் மேதையாக குருக்களையும் மக்களையும் ஆன்மிகத்திலும் சமய நல்லிணக்கத்திலும் வழிநடத்தியவர் மேதகு பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்கள். பேராயரின் வழிநடத்துதலில் புதிய மறைவட்டங்கள், புதிய பங்குகள், புதிய ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் என எண்ணற்றவை உருவாக்கப்பட்டன. தந்தைக்குரிய கரிசனையும், அதிர்ந்து பேசாத பேராண்மையும், தன்னை எதிர்ப்பவர்களையும் அன்பு செய்யும் பேராற்றலும் பேராயரின் அருள்பணி ஆன்மிகத்திற்கு அழகு சேர்த்தன.

ஆறாவது பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களின் நியமனம் மதுரை உயர்மறைமாவட்ட வரலாற்றில் தனித்துவமானது. துணை ஆயராக நியமிக்கப்பட்ட இவர், இத்தனை ஆண்டுகள் பணிக்குப் பிறகுதிண்டுக்கல் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் முதல் ஆயராகப் பத்து ஆண்டுகள் திறம்படப் பணியாற்றி, மீண்டும் மதுரை உயர்மறைமாவட்டத்திற்குப் பேராயராகப் பணி நியமனம் பெற்றார். ஏறக்குறைய 10 ஆண்டுகள், நான்கு மாதங்கள் மதுரை உயர்மறைமாவட்டத்தைப் பல்வேறு நிலைகளில் வளர்ச்சிக்கான பல திட்டங்களை முன்னெடுத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

ஆழமான ஆன்மிக அடித்தளம் கொண்ட பேராயர் அவர்கள், மேய்ப்புப்பணித் திட்டங்களைக் கூர்மைப்படுத்துவதிலும், எதிர்வரும் சவால்களைத் துணிவோடு சந்திப்பதிலும் தனித்துவமானவர்

பேராயரின் பணி ஓய்விற்குப் பிறகு, இவ்வுயர் மறைமாவட்டத்திற்குக் கிடைத்த மற்றொரு கொடை திருத்தூது நிர்வாகி. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த மேதகு ஆயர் அந்தோனி சவரிமுத்து அவர்கள், கடந்த எட்டு மாதங்களாக இம்மதுரை உயர்மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகப் பொறுப்பேற்று, களச்சூழலை நன்கு அறிந்து, குருக்களுடன் சிறப்பாகக் கலந்து ஆலோசனை கண்டு, தீர்க்கமான முடிவெடுப்பதில் சிறந்ததொரு நிர்வாகியாகத் தன்னை அடையாளப்படுத்தியதுடன், மறைமாவட்டத்தையும் சிறப்புற வழிநடத்தினார்.

இவருடைய மேலான பணிகளைக் கண்டு பூரிப்படைந்த இறைவன், “இவரே என் அன்பார்ந்த மகன்; இவரே நான் தேர்ந்துகொண்டவர்என்ற இறைவாக்கு மெய்ப்படும் வகையில் இவ்வுயர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராகத் தந்திருப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.

சிறந்த ஆசிரியராய், ஆன்மிகத் தந்தையாய், வழிகாட்டியாய், ஆழமான இறைப்பற்றாளராய், இயேசுவின் குருத்துவத்தில் மகிமை கண்டவராய், நல்லாயன் இயேசுவின் வழிகாட்டலில் நல்மேய்ப்பராய் வாழ்ந்து வருவதால் இறைவன் இவரை இன்று இந்த உன்னதப் பணிக்கு உயர்த்தி இருக்கிறார். மதுரை உயர்மறைமாவட்டம் பேருவகையோடு மகிழ்ந்து வரவேற்கிறது!