news-details
ஆன்மிகம்
தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை: கூட்டொருங்கியக்கத் திரு அவையில் பெண்கள்

திரு அவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுள் ஒன்று  2023, 2024-ஆம் ஆண்டுகளில் இரு அமர்வுகளாக நடந்து முடிந்த 16-வது  ஆயர் மாமன்றம். மாமன்றத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட  அறிக்கை கூட்டொருங்கியக்கத் திரு அவை-ஒரு தொடர் பயணம். அது வத்திக்கான் கூட்டத்தோடு முடிவடையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாற்றங்களை  பங்கு, மறைமாவட்டம், நிறுவனங்கள் மற்றும் திரு அவையின் பல்வேறு அமைப்புகளில கொண்டுவர தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரு அவையின் நம்பிக்கையாளர்களாக அந்நம்பிக்கையை அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குத் தங்களின் வாழ்வாலும் படிப்பினைகளாலும் கொண்டு சேர்ப்பவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. திரு அவையில்  பெண்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்புக் குறித்து 16-வது  ஆயர் மாமன்றம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை தமிழ்நாடு திரு அவையில் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை இணைந்து திட்டமிடல், செயல்படுத்துதல் நம்பிக்கையாளர்கள் என்ற வகையில் நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.

ஆயர் மாமன்றத்தின்  தனிச்சிறப்பு

வழக்கமாக ஆயர்களின் பிரதிநிதிகள் இணைந்து திரு அவையின் நலன் சார்ந்த ஏதேனும் ஒரு கருப்பொருளில் ஆய்வு செய்து முடிவெடுக்க வத்திக்கானில்  ஆயர் மாமன்றம் கூட்டப்படும். கூட்டத்தினைத் தொடர்ந்து திருத்தந்தை அவர்களால் ஓர் அதிகாரப்பூர்வ ஆவணமாகதிருத்தூது ஊக்க உரைவழங்கப்படும்.

ஆயர் மாமன்றத்தின் நடைமுறையை மாற்றி, ஆயர் மாமன்றத்தின் பொது அமர்வு ஆயர்களின் கூடுகையாக மட்டுமின்றி, அனைத்து நம்பிக்கையாளர்களும் பங்கேற்கும் அமர்வாக இருக்க வேண்டுமெனத் திருத்தந்தை பிரான்சிஸ் விரும்பினார். அதனைச் செயல்படுத்திட அகில உலக ஆயர்களின் மாமன்றத்தின் செயல்பாடுகள்கூட்டொருங்கியக்கத் திரு அவைஎன்ற கருப்பொருளில் 2021-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டன. அக்டோபர் 9-10, 2021-இல் உரோமையிலும், அக்டோபர் 17, 2021-இல் உலகில் உள்ள அனைத்து மறைமாவட்டப் பங்குத்தளங்களிலும் அது தொடங்கப்பட்டது.

கூட்டொருங்கியக்கத் திரு அவையின் நோக்கம்

ஒன்றிப்பு - பங்கேற்பு - நற்செய்தி அறிவிப்பு.

இணைந்த திரு அவையே இணைந்து பயணிக்கும் திரு அவைஎன்ற இலக்கோடு தொடக்கத் திரு அவையில் நிலவிய இணைந்த வாழ்வுஇணைந்த பணி, இணைந்த பயணம் (திப 2:42-47;4:32-36) என்பதை மீட்டெடுக்க முனைந்தது.

ஐந்து கட்டத்  தயாரிப்பு (2021-2023)

1. தயாரிப்பு நிலை: 2021, செப்டம்பர் 7-ஆம் நாள் வத்திக்கானில் தயாரிப்பிற்கான ஆவணம் வெளியிடப்பட்டது.

2. பயிற்சி அளித்தல் நிலை: மறைவட்ட அளவிலும் பங்கு அளவிலும் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

3. கருத்துக்கேட்டல் நிலை: உலகளாவியத் திரு அவையாக ஒன்றிணைந்து, மறைமாவட்ட அளவில் கூட்டொருங்கியக்க வாழ்வியல் அனுபவங்களை ஒருவர் மற்றவருடன் பகிர்ந்திட, செவிமடுக்க, கூட்டொருங்கியக்கப் பயணம் மேலும் தொடர்ந்திட அனைவரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன.

4. தரவுகளைச் சேகரித்தல் நிலை.

5. கருத்துகளை அனுப்பும் நிலை.

மக்களிடம் கேட்டுப் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே ஆயர் மாமன்றம் கூட்டப்பட்டது.

16-வது ஆயர் மாமன்றத்தின் பொது அமர்வுகள் இரு கட்டங்களாக நடைபெற்றன.

முதல் அமர்வு: அக்டோபர் 2023

இரண்டாம் அமர்வு: அக்டோபர் 2024

16-வது அகில உலக ஆயர்கள் மாமன்றம் - பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும்

கத்தோலிக்கத் திரு அவையின் வரலாற்றில் முதல் முறையாகச் சில பெண்கள் முழுமையாகப் பங்கேற்றார்கள்.

கர்தினால்மார்கள், ஆயர்கள் ஆகியோருடன் பெண்களும் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள்.

2023, அக்டோபரில் நடைபெற்ற அமர்வில் 54 பெண்கள் பங்கேற்று வாக்களித்தனர்.

ஆலோசனைக் குழுக்கள், விவாதங்கள் ஆகியவற்றைப் பெண்கள் தலைமையேற்று வழிநடத்தினர்.

திரு அவையின் எதிர்காலம் குறித்த தங்களின் கருத்துகளை அனைத்து நிலைகளிலும் பகிர்ந்து கொண்டார்கள்.

பெண்களில் சிலர் மொழிக்குழுக்களின் அறிக்கையாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.

16-வது ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணம்

ஆயர் மாமன்றத்தின் முடிவில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பரிந்துரைகள், ஆலோசனைகள், தீர்மானங்கள், வழிகாட்டுநெறிகள் ஆகியவற்றைத் திருத்தந்தை பிரான்சிஸ் உடனடியாக அங்கீகரித்து (ratified) அதிகாரப்பூர்வ ஆவணமாக (Ordinary Magisterium) வெளியிட்டார். இந்த ஆவணம் திரு அவையைப் புதுப்பிக்க ஐந்து வகையான மாற்றங்களை முன்வைத்தது: 1. அருள் வாழ்வு (Spiritual), 2. உறவு (Relational), 3. நடை முறை (Procedural), 4. நிறுவனம் (Institutional), 5. மறைப்பணி (Missionary).

பெண்களின் பங்கேற்பிற்கான கட்டமைப்பு மாற்றங்கள்

சமமான மாண்பு: திருமுழுக்கினால் பெண்களும் ஆண்களும் சமமான மாண்பும் உரிமையும் பெறுகிறார்கள்.       

பெண்களின் தலைமை, முடிவெடுப்பதில் பங்கேற்பு: திரு அவையின் நிர்வாகத்தில் பொதுநிலையினருக்கு குறிப்பாக, பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளித்தல்; திரு அவைச் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளைப் பெண்களுக்கு அளித்தல்.              

அமைப்புசார் சீர்திருத்தங்கள், விரிவான பங்கேற்பு: அருள்பணிப் பேரவை முதலான பங்கேற்பு அமைப்புகளில் பெண்கள் அதிகம் பங்கேற்கும் வகையில் சீர்திருத்தங்கள், முடிவெடுத்தலில் பெண்களுக்கு வாய்ப்பு.    

குருக்கள் உருவாக்கம்: குருக்கள் உருவாக்கத்தில் பெண்கள் பங்கேற்றல்.

பண்பாட்டு மாற்றம்: திரு அவையில் படிநிலை அதிகாரத்தைக் குறைத்தல்; பங்கேற்பை அதிகரித்தல்.

பெண்களுக்கு அதிகாரம் அளித்தலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்மாதிரியான நடவடிக்கைகள்

1. திரு அவைச் சட்டத்தில் சீர்திருத்தம்

திருத்தந்தை அவர்கள் திரு அவைச் சட்டத்தில் பெண்களுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த வாசகர் பணி, பீடப்பணியாளர் பணி ஆகியவற்றைச் சீர்திருத்திப் பெண்களுக்கு நிரந்தர வாசகப் பணியாளர், பீடப்பணியாளர் பணியைச் சட்டமாக்கினார். பெண் திருத்தொண்டர்கள் குறித்த ஆய்வுக் குழுவை நியமித்தார். அது ஆயர் மாமன்றத்திற்குப் பிறகும் தொடர்கிறது என அறிவித்தார்.

2. பெண்களுக்குத் தலைமைப் பொறுப்புகள்

குருத்துவத்தோடு தொடர்புடைய அருள்பணிகள் அல்லாத நிர்வாகப் பொறுப்புகளை குருகுலத்தாரே ஆற்றி வந்தனர். அத்தகைய பணிப்பொறுப்புகளைப் பெண்களுக்கு வழங்குவதில் திரு அவைச் சட்டத்தில் எந்தத் தடையுமில்லை எனப் பல்வேறு பொறுப்புகளைப் பெண்களுக்கு வழங்கினார். இப்பொறுப்புகள் பெண்களின் தலைமைத்துவத்திற்குச் சான்று பகர்வன என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ஆம் ஆண்டு வத்திக்கான் அருங்காட்சியகங்களின் முதல் பெண் இயக்குநராக பார்பரா ஜட்டா நியமிக்கப்பட்டார். இவர் ஒரு பொதுநிலையினர் என்பது சிறப்பு.

பிப்ரவரி 2021-இல் வத்திக்கான் ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலகத்தின் இரண்டு துணைச்செயலர்களில் ஒருவராக அருள்சகோதரி சிவேரியன் நத்தலி பெக்கார்ட்டை நியமித்தார்.

அருள்சகோதரி இரபேல்லா பெட்ரினி வத்திக்கான் நகர மாநில ஆளுநரகத்தின் முதல் பெண் தலைவராக மார்ச் 1, 2025 அன்று பதவியேற்றார். இதற்கு முன் இப்பதவியை வகித்தவர் கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சாகா ஆவார்.

ஜனவரி 6, 2025 அன்று அருள்சகோதரி சிமோனா பிராம்பில்லாவை அர்ப்பண வாழ்வு நிறுவனங்கள் மற்றும் திருத்தூதர்சார் வாழ்வு சங்கங்களுக்கான வத்திக்கான் பேராயத்தின் முதல்வராக நியமித்தார்.

நான் செய்ததுபோல நீங்கள் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் (யோவா  13:15) என நமது ஆண்டவர் இயேசு முன்மாதிரிகை காட்டியதுபோல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் நமக்கு முன்மாதிரிகை காட்டியுள்ளார்.

இந்தியக் கத்தோலிக்க (இலத்தீன்) ஆயர் பேரவையின் 36-வது கூட்டம்-2025

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை 2025, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை புவனேஸ்வரில் கூடியது. அதன் கருப்பொருள்: ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்; கூட்டொருங்கியக்கத் திரு அவையின் பாதையைக் கண்டறிதல்.’ “நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல; நம்பிக்கையின் அடிப்படையிலேயே நடக்கிறோம் (2கொரி 5:7) (‘Pilgrims of Hope: Discerning the Synodal Path’ For we walk by faith, not by sight (2 Cor 5:7).

16-வது ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணத்தின் வழிகாட்டு நெறிகளைச் செயல்படுத்த இந்தியச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து இறுதி ஆவணம் ஒன்றையும் இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது.

2033-ஆம் ஆண்டிற்குள் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய அருள்பணித் திட்டத்தினையும் வழங்கியுள்ளது. அத்திட்டத்தை திரு அவையின் அனைத்து அமைப்புகளிலும் பங்குகளிலும் செயல்படுத்த இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை அழைப்புவிடுத்துள்ளது. இந்திய மண்ணில் பெண்கள் சந்திக்கும் சவால்கள், திரு அவையில் பெண்களின் நிலை, பெண்களை ஆற்றல் ஊட்ட, அதிகாரம் அளிக்க, பாலின நீதியை நிலைநாட்ட, பாலினச் சமத்துவத்தை வாழ்வாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதியான நடவடிக்கைகள், உத்திகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றைச் செவ்வனே வகுத்துத் தந்துள்ளது.

அருள்பணித் திட்டம், கூட்டொருங்கியக்கத் திரு அவைக்காக இணைந்து பயணித்தல்: இலக்கு 2033’ - பெண்கள் மற்றும் பாலின நீதி (5.11. Women and Gender Justice)

பெண்கள் மானுட வாழ்வின் பல்வேறு பகுதிகளில் சிறந்த பங்கேற்பினை நல்கி வருகின்றனர். திரு அவையில் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த பார்வையும் முடிவெடுக்கும் இடங்களில் அவர்களின் பங்கேற்பும் இன்றியமையாதது.

திரு அவையின் அமைப்புகளில் பெண்கள் தலைமையேற்கவும் வழிநடத்தவும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். திருவிவிலியத்தின் படைப்பு நிகழ்வு ஆண்-பெண் இருவரும் சமமான மாண்புடன் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை நமக்கு உறுதி செய்கிறது. ஆனால், நமது இறை நம்பிக்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளன. இந்த வேறுபாடுகள் இறைத்திட்டத்திற்கே எதிரானது. சமுதாயத்திலும் திரு அவையிலும் பெண்களின் இடம், பங்கேற்பு குறித்து ஆழமான புரிதலை உண்டாக்குவது அவசியமாகிறது.

உண்மை நிலையும் சவால்களும்

ஊடகத்தின் தாக்கத்தால் பெண்களின் மாண்பினைச் சிதைக்கும் வகையில் பெண்களை மகிழ்ச்சிக்கான, நுகர்வுக்கான காட்சிப்பொருளாகப் பயன்படுத்துதல்.

பாலினப் பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள்.

சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மை.

பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்.

திரு அவையிலும் சமுதாயத்திலும் பெண்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்படல்.

ஆணாதிக்க மனநிலையைப் பெண்களே உள்வாங்கியிருத்தல்.

கூட்டொருங்கியக்கத் திரு அவையின் பாதை.

உறுதியான நடவடிக்கை

திரு அவையின் அனைத்து அமைப்புகளிலும் நிர்வாகத்திலும் பெண்களின் தலைமைத்துவத்தையும்  சமமான பங்கேற்பையும் உறுதி செய்தல்.

மதித்தல், சமமாக ஏற்றுக்கொள்ளல், அனைவரையும் உள்ளடக்கிய பண்பாட்டை உருவாக்குதல்.

பெண் துறவியரின் சமூக அருள்பணிப் பங்கேற்பை அங்கீகரித்தல். திரு அவையிலும் நற்செய்தி அறிவிப்பிலும் உடன் பணியாளராய் அவர்களை ஏற்றுக்கொள்ளல். திரு அவையின் நிர்வாகம், நிறுவனம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்புகள் வழங்குதல்.

அருள்பணிகள், திரு அவை அலுவல்கள் ஆகியவற்றில் பெண்களின் பங்கேற்பிற்கான வழிகாட்டு நெறிகளை மறைமாவட்ட அளவில் ஏற்படுத்துதல்.

சமுதாய மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி அளித்தல்.

குருக்கள், ஆண் துறவியர், பொதுநிலையினர் ஆகியோருக்குப் பாலினச் சமத்துவம், பாலின நீதி குறித்த கல்வி அளித்தல்.

உத்திகளும் திட்டங்களும்

திரு அவையின் அனைத்துப் பங்கேற்பு அமைப்புகளிலும் 50% பெண்களின் பங்கேற்பை உறுதி செய்தல்.

திரு அவையின் நிர்வாகத்தில் பெண்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்கும் பொருட்டு, தலைமைத்துவத்திற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அவர்களுக்கு அளித்தல்.

பணியிடப் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - 2013 வழிகாட்டு நெறிகளை நடைமுறைப்படுத்துதல்.

மறைமாவட்ட அளவில் பெண்களின் மேம்பாட்டிற்கான அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துதல்.

பெண்மையைக் கொண்டாடுதல்: பங்குகளில் பெண்கள் தினம், பெண் குழந்தைகள் தினம், அரசியல் அமைப்புச் சட்ட நாள், மனித உரிமைகள் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதன் மூலம் இறைவன் விரும்பிய பாலினச் சமத்துவம் குறித்த கல்வியை நம்பிக்கையாளர்களுக்கு அளித்தல்.

மறைமாவட்டப் பிரதிநிதிகளுக்குப் பங்குப் பேரவை, நிதிக்குழு ஆகியவற்றில் அவர்களின் பொறுப்பு, பணி குறித்த பயிற்சிகளை அளித்தல். அரசியல் அமைப்புச் சட்டம், மனித உரிமைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியளித்தல்.

தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் திரு அவை காலத்தின் அறிகுறிகளைக் கண்டுணர்ந்து, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் தான்மை கொண்டது. திருத்தந்தை பிரான்சிஸ்கூட்டொருங்கியக்கத் திரு அவையே மூவாயிரம் ஆண்டிற்கான திரு அவைஎன அறிவித்ததோடு, அதனை ஆயர் மாமன்றத்தின் வழி செயல்படுத்தியும் காட்டியுள்ளார். பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும் இன்றிகூட்டொருங்கியக்கத் திரு அவையின் பயணம்சாத்தியமற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், பெண்களுக்குச் சரிசமமான வாய்ப்புகளை அளிப்பது, அவர்களை மாண்புடன் நடத்துவது, தலைமைப் பொறுப்புகளை அளிப்பது ஆகியவற்றில் திரு அவை இன்னும் ஆற்றலுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ‘சமுதாயத்தில் பெண்கள் என்றுமே பெற்றிராத செல்வாக்கையும் அதிகாரத்தையும் அடையும் நாள் இதோ வந்து விட்டதுஎனும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வாக்கு இன்று உலகின் பல்வேறு துறைகளில் மெய்யாகி வருகிறது. உலகிற்கே ஒளியாக விளங்கும் திரு அவை பெண்களை அதிகாரப்படுத்துவதில் முன்னோடியாய் திகழட்டும்.