போர் ஒரு முற்றுப்புள்ளியா? பாதிக்கப்படுவது யார்? ஆயுதம் நீதியை நிலைநாட்டுகிறதா? பரமன் பதவியைத் தக்கவைக்க, பாமரன் மாண்டு அழிவது இன்று விழிகளுக்கு வெந்நீர் பாய்ச்சுவதுபோல் இன்றைய போர் நிரூபித்து கொண்டு இருக்கிறது. புதிய நவீன ஆயுதங்கள், பெரிய மன்னர்களின் ஆணைகள், சிலர் வெற்றியைக் கூறித் தங்களைப் பெருமைப்படுத்துகிறார்கள். ஆனால், யாராவது ஒருவராவது அந்த வெற்றியின் பின்னால் மண்ணில் கிடக்கும் மனித உடல்களையும், அழிந்த வீடுகளையும், தாயை இழந்த பிள்ளைகளையும் எண்ணுகிறார்களா?
மனித குலத்திற்குள் உருவான பிணைப்பு இன்று சிதைந்து வருகிறது. சகோதரத்துவம் ஒரு கொள்கையாய் மட்டும் விடப்பட்டது. இது உண்மையில் ஒரு மனித உரிமையின் மறுப்பாகும்.
கிழக்கு காசா போரின் பின்னணியில் ஒரு சிறு ஊர். 12 வயதான ஒரு சிறுமி கண்ணீர் மல்கிய கண்களுடன் கண்ணில் பதிந்த காட்சியைக் கூறுகிறாள்: “அம்மா இரத்தக் குளத்தில் கிடந்தாள். நான் ஓடினேன்.… மீண்டும் யாரும் இல்லை.”
இது யாருடைய தவறு? ஒரு நாட்டின் தலைவரின் தவறா? அல்லது உலகினர் நம்முடைய மௌனத்தின் பரிசா?
உலகளாவிய போர் நிலைமை
இஸ்ரேல்-ஈரான் மோதல்: ஒரு புனித நிலத்தில் குண்டுகள் சிதற, பசுமைக் காடுகளும், பள்ளிக்கூடங்களும் இருண்டுவிட்டன.
இரஷ்யா-உக்ரைன்: மக்களுக்குத் தினசரி உயிர் பிழைக்கும் போராட்டம். தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளைப் புதைக்கும் நிலைமை.
உலக நாடுகள் ‘போர் முடியவில்லையெனில், நாங்கள் தேவைப்பட்டால் உதவி செய்கிறோம்’ எனக் கூறுகின்றன. ஆனால், அந்தச் செய்கைகளும் புதிய போர்களுக்குத் தொடக்கமே ஆகின்றன.
திருத்தந்தையரின் வரிகள்
திருத்தந்தை 23-ஆம் யோவான் (‘உலகில் அமைதி’): “நீதி, நேர்மை, மற்றும் பிறர்நலம் போன்றவற்றைக் கட்டி அமைப்பதே உண்மையான அமைதி.”
திருத்தந்தை 6-ஆம் பவுல் (‘நற்செய்தியை அறிவித்தல்) (சர். 37): “திரு அவை ஒருபோதும் ஆயுதங்களையும் போர்களையும் ஊக்குவிக்காது.”
திருத்தந்தை பிரான்சிஸ் (‘அனைவரும் உடன் பிறந்தோர்’): “போர் என்பது - சகோதரத்துவத்தின் தோல்வி”, “போர் என்பது - மனித உரிமையின் முழுமையான மறுப்பு.\"
திருத்தந்தை 14-ஆம் லியோ: “பசி ஒருபோதும் போரின் ஆயுதமாக இருக்கக் கூடாது.”
அறம், அமைதி, மனிதம்
இன்று நமக்குள் எவ்வளவு அமைதி இருக்கிறது? என்பதை நாம் கேட்க வேண்டும். “என்னைத் தொடாத வரை எனக்கு எதுவும் இல்லை” எனும் மனநிலை உலகத்தின் அழிவுக்கு வழிவகுக்கிறது.
அமைதி என்பது அரசியல் தீர்வாக மட்டும் இல்லாமல், இது ஓர் உள்ளுணர்வு நிலை - இது ஒவ்வொருவரிடமும் தொடங்க வேண்டியது.
கேள்விகளாக முடிவுறும் சில சிந்தனைகள்
• பிள்ளைகளைக் கையில் வைத்திருக்கும் தாயின் மரணம் நியாயமா?
• ஒரே வீட்டில் இரு சகோதரர்கள் இரு எதிர்பார்ப்புகளுக்காகப் போரிடுகின்ற னர். இதுவே, நம்முடைய நிலைமை.
• மக்கள் அமைதிக்காகக் கதறுகின்றனர். ஆனால், அதைக் கேட்பது யார்?
ஏன் இன்றும் போர்? போரை வெற்றியாகக் கொண்டாடும் உலகத்தில் நாம் தோல்வியடைந்த மனிதர்கள். ‘இனி போர் இல்லை’ என்று சொல்ல முடியாத அளவிற்கு நம்மில் சிலர் இன்னும் மனிதர்களாகவே இல்லை. ஆனாலும், நம்மில் சிலர் எழுந்து, அமைதி பேசும்வரை இந்தக் கேள்வி எதிரொலித்துக்கொண்டே இருக்கும்: ‘ஏன் இன்றும்?’