1606-இல் இயேசு சபை போர்த்துக்கீசியத் துறவிகளால் அடித்தளமிடப்பட்ட மதுரை மிஷனிலிருந்து உருவான மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஏழாவது பேராயராகப் பொறுப்பேற்கும் மேதகு ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களைப் பேராயராகப் பெறுவதில் மதுரை திரு அவை அகமகிழ்கின்றது.
திருவிவிலியத்தில்
7-ஆம் எண் எப்போதும் நிறைவைக் குறிக்கின்றது. அத்தகைய நிறைவோடு, எழுச்சிமிகு புதிய பேராயர் உள்ளே வரட்டும்! வாயில்கள் திறக்கட்டும்! தொன்மைமிகு கதவுகள் உயர்ந்து நிற்கட்டும்! மாட்சிமிகு பேராயர் உள்ளே நுழையட்டும்! (திபா 24:9).
மாட்சிமிகு
பேராயர்கள் மேதகு லெயோனார்டு, மேதகு ஜஸ்டின் திரவியம், மேதகு கஷ்மிர் ஞானாதிக்கம், மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி, மேதகு பீட்டர் பெர்னாண்டோ மற்றும் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆகிய பேராயர்கள் வழிநடத்திய மதுரைத் திரு அவையின் மந்தையை, இயேசுவின் பெயரால் கரம்பிடித்து வழிநடத்த புதியதொரு பேராயர் மதுரைக்குக்
கிடைத்திருப்பது கடவுளின் திட்டம்!
செயற்கைத்
தொழில்நுட்பம் எல்லா நிலைகளிலும் ஊடுருவும் ஒரு சவாலான காலகட்டத்தில், யூபிலி ஆண்டில் எல்லா நம்பிக்கையாளர்களும்-மறைமாவட்டக் குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் பங்குபெறும் கூட்டொருங்கியக்கத் திரு அவையில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் பேராயரின் மேய்ப்புப்பணிகளுக்கு மாமதுரைக் களம் தன்னையே வழங்குகின்றது.
1960-இல் பாளையங்கோட்டை
மறைமாவட்டம் வண்டானத்தில், அமல அன்னையின் திருவிழா அன்று ஆயர் பிறந்ததே ஓர் அதிசயம்தான்! தன்னுடைய திரு அவைச் சட்ட முனைவர் பட்டப் படிப்பை பாரிஸில் முடித்துவிட்டு, பல்வேறு நிலைகளில் தமிழ்நாடு மற்றும் இந்தியத் திரு அவை அளவில் அருள்பணி புரிந்து, 2025, ஆகஸ்டில் இத்தொன்மை வாய்ந்த மதுரை மண்ணில் ஆயர் பொறுப்பேற்றிருப்பது பெருமைக்குரியதே!
அகில
இந்தியத் திரு அவைச் சட்ட வல்லுநர்கள் குழாமின் செயற்குழு உறுப்பினர்களாக இருமுறை ஆயரும், நானும் தேர்வு செய்யப்பட்டுப் பணியாற்றிய காலத்தில் நான் கண்ட ஆயரின் மேன்மைகளையும், அவருக்கு மதுரைத் திரு அவையின் வாழ்த்துகளையும் பதிவு செய்கின்றேன்.
ஆயர் செபவாழ்வு:
ஆயர் பணியைக் கிறிஸ்துவின் மனநிலையில் புரிய முதலில் ஒரு குரு கிறிஸ்துவோடு எப்போதும் இணைந்திருக்க வேண்டும் (யோவா 15:4). இதை நன்கு உணர்ந்து, அதிகாலை 5 மணிக்கே எழுந்து நடைப்பயிற்சியோடு, ஆண்டவரைப் புகழ்ந்து, ஒரு செபமாலை முழுவதுமாகச் செபித்து, உடலையும் மனத்தையும் ஆன்மாவையும் தூய்மையாகப் பாதுகாத்துக் கொள்ளும் (2திமோ 1:6) ஒரு பேராயர் இவர்.
சீரிய சிந்தனை,
போதனையாளர்:
ஆயர் மேய்ப்புப்பணிப் பளு அதிகமிருந்தாலும், மறைமாவட்டச் செய்திமடலில் ஆயருரையையும் கூட்டங்களில் கருத்துரையையும் மறையுரையையும் தானே எழுதி, போதிக்கும் பணியை ஆற்றுபவர் (மாற் 16:15) இவர். திரு
அவைச் சட்டம் பற்றிய நுணுக்கங்களை எடுத்துக் கூறுவதிலும், அதன்படி பங்கில் குருக்கள் சந்திக்கும் மேய்ப்புப்பணி கேள்விகளுக்குச் சரியான விளக்கம் தருவதிலும் மக்களை ஞானத்துடன் வழிநடத்துவதிலும் (சீராக் 44:4) கூர்மதியுடைய அறிஞர் இவர்.
நட்பு: புதிய பேராயர் அவர்கள் மகிழ்ச்சியான, ஆற்றல் பெற்ற, நட்பை வளர்க்கின்ற ஒரு நல்ல குரு. குருத்துவத் தோழமையின், நட்பின் இலக்கணம். அகில இந்தியத் திரு அவைக் கூட்டமைப்பில் பொறுப்பில்
இருந்தபோது ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்பு மீண்டும் கூட்டத்திற்கு ஆயராக வந்தபோதும் அதே நட்புடன், வாஞ்சையுடன் எல்லாரிடமும் பழகியவர். தன்னிடம் படித்த அருள்பணியாளர்கள் பிற மறைமாவட்டங்களிலிருந்து ஆயரை அழைக்கின்றபோது இசைந்து, அந்த குருக்கள் அன்புறவுக்கு முக்கியத்துவம் தரும் ஆயர் இவர் (யோவா 15:15).
எளிமை: ஆயருக்குரிய எவ்வித அதிகாரத் தோரணையையோ அல்லது தேவையற்ற வசதிகளையோ இவர் விரும்புவதில்லை. பேச்சிலும் உறவிலும் எளிமையானவர் (லூக் 2:7).
நிர்வாக நேர்மை-உற்சாகம்:
தன் குரு குழாமிடம் நேர்மையுடனும் உண்மையுடனும் கண்டிப்புடனும் இருந்து வழிநடத்துபவர் (2திமோ 2:24-25). தொலைநோக்குச் சிந்தனையுடன் எல்லாவற்றையும் ஆராய்ந்து, உண்மையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கக்கூடிய ஒரு கூர்மதி உடைய ஓர் ஆயர் இவர். மேய்ப்புப்பணியில் வரும் சிக்கல்களுக்குத் திரு அவைச் சட்டத்தின் பின்புலத்தில் சரியான முடிவுகள்
தருபவர்.
திரு அவை
அன்பு:
தன் ஆயர் குழாமோடு நட்பையும் நல்லுறவையும் நாளும் வளர்த்து, திரு அவையின் மேல் கொண்டிருக்கின்ற தன்னுடைய பற்றைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துகின்ற ஆயர் இவர்.
கூட்டொருங்கியக்கத்
திரு
அவை
ஆயர்:
அவரவருக்குரிய அருள்பணி
அலுவல்களைப் பகிர்ந்து கொடுத்து, எல்லாரிடமும் கருத்துக் கேட்டு, இறுதியாக நற்செய்தியின் ஒளியில், தீர்க்கமான முடிவெடுக்கின்ற ஓர் ஆயராக இருப்பதை இந்தத் தொடக்கக் காலத்திலேயே நான் பார்க்கிறேன். ஆயர்
மாமன்ற வழிகாட்டுதலின்படி இந்த யூபிலி ஆண்டில், மதுரை உயர்மறைமாவட்டம் முழுவதையும் அறிந்து, அடுத்த பத்தாண்டுகளுக்கான மேய்ப்புப்பணித் திட்டத்தைத் தயாரித்து, எல்லா நம்பிக்கையாளர்களையும் ஒன்றுபடுத்தி, எல்லாரையும்
கிறிஸ்துவின் அன்பில் இணைத்து, மதுரைத் தலத்திரு அவையை வழிநடத்த வாழ்த்துகின்றோம்.
அரிய
பெரிய மறைப்பணியாளர்களும், மூத்த குருக்களும், பெரும் பேராயர்களும் வழிநடத்திய மதுரைத் திரு அவையானது, இன்று மகிழ்ச்சியுடன் ஏழாவது பேராயர் அவர்களை வரவேற்கிறது. பேராயரோடு சேர்ந்து இந்த மதுரைத் திரு அவையை, ஆண்டவர் இயேசுவின் வழியில் கட்டியெழுப்ப மதுரைத் திரு அவை அருள்பணியாளர்கள் குழாம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.