நாம் வாழும் இப்புவியின் எதிர்காலம் யார் கையிலிருக்கப் போகிறது? ‘ட்ரான்செண்டென்ஸ்’ என்ற முற்றிய நிலை ஆன்மாவைச் சிந்திக்கும் ஆன்மிகவாதிகள், மனோதத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் அவர்களுடைய அடிப்படை நம்பிக்கையை அசைப்பதாகக்கூட இருக்கலாம். எல்லாவற்றிற்கும்மேல் அபார நுண்ணறிவின் செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பேற்பது? கனவு நினைவாகி, நினைவு நிகழ்வாகிறதா?
உலகில்
1700 விஞ்ஞானிகள் சேர்ந்து AGI (Artificial General intelligence)
சாத்தியப்படுமா?
என்று ஆராய்ந்தனர். அவர்களில் பெரும்பாலோருக்குக் கிடைத்த பதில் ‘ஆம்’ என்பதாகும். ‘ஒருமை தொழில்நுட்பம் எப்போது நிகழும்?’ என்ற கேள்வி பலர் மனத்திலும் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அளவுகோல் இல்லை. அது சீராகவும் அல்லது சூடுபிடித்து, முடுக்கிவிட்ட வேகமாக விரிவடையும் தன்மையும் பெற்றது.
1965-ஆம் ஆண்டு
இன்டெல்லின் இணை நிறுவுநர் கார்டன் மூர் என்பவர், கணினியின் சக்தி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிப்பாகும் என்று கணித்தார். இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்தது. அமெரிக்கக் கணினி விஞ்ஞானியும், தொழில் நிபுணருமான ஏர் கர்ஸ்வெல் ஏ.ஐ.-யில்
ஆதிக்கம் பதித்தவர். 2005-ஆண்டு இவர் ‘ஒருமை அருகாமையிலிருக்கிறது’ என்ற
நூலை எழுதினார். அப்போது ஏ.ஐ. பற்றி
யாருக்கும் அவ்வளவு தெரியாது.
அந்நூலில்,
‘கணினியானது மனித நுண்ணறிவின் தரத்தை 2029-ஆம் ஆண்டுகளுக்குள் அடைந்துவிடும்’ என்றும்,
அது ஒன்றாகி அபார மனிதனாக, ஏறக்குறைய 2045-ஆம் ஆண்டில் உருவெடுப்பதை ‘ஒருமை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் (computers
would reach human level intelligence by 2029 and merge with computers and
become super humans around 2045 is called singularity). ஏ.ஜி.ஐ.
என்பது, நாம் எப்படி வேலை செய்கிறோம்? வாழ்கிறோம்? நினைக்கிறோம்? என்ற மனிதமூளையின் செயலாற்றலைக் கொண்ட தொழில்நுட்பம். இந்த இலக்கை நோக்கிச் செல்லும் ஆராய்ச்சியின் வேகம், நாம் ஏ.ஜி.ஐ.-யின் எல்லைக்குள் நுழைந்து விட்டதையும், ஏ.எஸ்.ஐ.
(Artificial Super Intelligence-ASI) அடைவது எட்டிய
தூரத்திலிருப்பதையும்
காட்டுகிறதாக உள்ளது. ஏ.ஜி.ஐ.
என்பது உடனே வெளிப்படாவிட்டாலும், அது உருவெடுப்பதையும், அதன் அறிகுறிகளையும் காணமுடிகிறது.
• 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆல்ட்மேன், ‘The intelligent
age’ என்ற நூலில், ‘ஏ.ஜி.ஐ.
என்பது மனித வர்க்கத்திற்குக் கிடைக்கும்
கருவியாயில்லாமல், மனித வரலாற்றை உருவாக்கும் புதிய சகாப்தமாயிருக்கும்’ என்று
கூறியிருக்கிறார்.
• ஓர் இயந்திரம் தானே கற்று, புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளும் திறனைப் பெற்றுவிட்டால், அது அதிக ஆற்றலை அடைவதென்பது வெகு தொலைவில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக ஏ.ஜி.ஐ.
பார்க்கப்படுகிறது.
• இதுவரை ஏ.ஐ. அமைப்புகள்
எழுதுவது, நகல் எடுப்பது, நோய்களை அறிவது, போக்குவரத்தை விரிவுபடுத்துவது என்ற செயலாற்றல்களைக் கணினியின் குறுகிய எல்லைத் திறனில் அமைந்திருந்தன. ஆனால், ஏ.ஜி.ஐ.-யின் செயலாற்றல், மாற்றியமைத்துக்கொள்ளுதல், காரணமறிதல், பல்வகைச் சிக்கல்களைத் தீர்த்தல் என்ற திறன்களைப் பெற்றிருக்கும். இதற்கு உதாரணமாக, பேசும் இயந்திரங்களைக் கூறலாம்.
• நுண்ணறிவு என்பது இதுவரை மனிதனுக்கே உரிய தனித்துவப் பண்பாக மதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏ.ஜி.ஐ.
என்ற இயந்திரச் செயலியை நம் வாழ்க்கையின் அங்கமாக அது கருவியாகவோ அல்லது பங்காளியாக அல்லது எதிரியாக எவ்வாறு இணைக்கப்போகிறோமோ அதைப் பொருத்தே நம் கலச்சாரத்தை, அடையாளத்தை, முக்கியத்துவத்தை அது பிரதிபலிக்குமென்பது இப்போது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாயுமிருக்கிறது..
ஏ.ஜி.ஐ.
பின்
ஏன்
செல்லவேண்டும்?
மனிதனின்
திறனைவிட கணினியின் ‘அறிவாற்றல் இயந்திரங்கள்’ இப்போதைக்கு
இல்லை என்றாலும், சில ஆராய்ச்சியாளர்கள் மொழி பேசும் இயந்திரங்கள் அப்படி மேம்பட்ட திறனைப் பெற்று உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிக்காட்டுவதாக நம்புகின்றனர்.
• இன்று வளர்ச்சியடைந்த தொழில்நுட்பங்களான ஏ.ஐ.-யும்
கற்கும் இயந்திரமும் இணைந்து-உதாரணமாக, ஒருவர்
நோபல் பரிசைப் பெற எடுத்துக் கொள்ளும் முயற்சிக்குச் சமமான உழைப்பை ஒரு சில நிமிடங்களில் உருவாக்கிச் சாதிக்கும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுவது இயந்திரச் செயலாற்றலின் வீரியத்தைக் காட்டுகிறது. ஏ.ஜி.ஐ.
பின் செல்வதென்பது ஒரு குருட்டுத்தனமான முயற்சி என்று தோன்றினாலும், இதற்கான சில காரணங்களும் சொல்லப்படுகின்றது.
• மனித அறிவாற்றல் பல ஆயிரம் ஆண்டுகள்
நிலையானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், புரிந்துகொள்ளும் திறனை இயந்திரங்களுடன் இணைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்திசையில் எலான்மஸ்க் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இயந்திரச் செயலாற்றல் என்பது அல்கோரிதம்கள் ஆய்வுத்திறன் மற்றும் நினைவறை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இவற்றில், ஆய்வுத் திறனும் நினைவறையும் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. இயந்திரங்களின் ஆய்வுத் திறனுக்கும் நினைவறைக்கும் ஏற்ற அல்கோரிதம்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது நாம் ஏதோ ஒன்றை நெருங்கிவிட்டோம் என்பதாகத் தெரிகிறது.
மனிதச் செயலாற்றல்
நிலைத்துவிட்டது;
இயந்திரச்
செயலாற்றல்
வளர்ந்து
கொண்டே
போகிறதா?
மனிதனின்
செயலாற்றல் நிலைத்துவிட்ட நிலையில், இயந்திரச் செயலாற்றல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவதால், இயந்திரங்களுக்குத் தகுந்த வரையறைகள் இல்லையென்றால், அவை மனிதனை மிஞ்சும் தருணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதுவரை அந்த எல்லையை நாம் எதிர்கொள்ளவில்லை என்பதுதான் இன்றைய நிலை.
• ஒருவேளை இயந்திரங்கள் இப்போது ஊமையாக இருப்பதாகத் தோன்றலாம்; ஆனால், அவை மிக திறனுடன் மிக விரைவில் வளரும் தன்மையைப் பெறும் நிலை எப்போது என்பதுதான் கேள்வி.
• 2022-ஆம் ஆண்டு இத்துறை சார்ந்த 738 வல்லுநர்கள் நடத்திய ஆய்வில், இது 2059-க்குள் சாத்தியப்பட 50% வாய்ப்புகளிருப்பதாக அறியப்பட்டது.
• டெஸ்லா மற்றும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் என்பவர் இப்போதுள்ள ஆராய்ச்சியின் வேகத்தில் 2030-க்குள் அபார மனிதச் செயலாற்றலை ஏ.ஐ. பெற்றுவிடும்,
இத்தொழில்நுட்பம் மனித இன அழிவிற்கு வழிவகுக்கும்,
அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க இயலாது. இதனால் இருண்ட எதிர்காலம் என்றில்லை; ஆனால், ஏ.ஐ.-யின்
வேகமான வளர்ச்சியை ஒளிமயமான திசையில் எடுத்துச் செல்ல முயல்வதாகவும் கூறுகிறார்.
• ஏ.ஐ.-யின்
பிதா என்றழைக்கப்படும் ஜியாப்ரே ஹின்டன் என்பவர் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் BBC-4 நிறுவனத்திற்குக்
கொடுத்த பேட்டியில், ஏ.ஐ.-யினால்
இன்னும் 30 ஆண்டுகளில் மனித வர்க்கத்தை அழிக்கும் சூழல் உருவாகலாம் என்கிறார். 2024-ஆம் ஆண்டின் பௌதிக நோபெல் பரிசைப் பெற்ற இவர், 10-20% இது நிகழ
வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறார். எலான் மஸ்க், ஹின்டனின் கூற்றுடன் உடன்படுவதாகவும் கூறுகிறார்.
• தேவைப்படுகிறதோ இல்லையோ, தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்தியதாக இதுவரை சரித்திரமில்லை. ஏ.ஐ.-யின்
எதிர்காலம் பாதி எழுதப்பட்டுவிட்டது. மனிதனும் இயந்திரமும சுமூகமாக இணைந்து இயங்குவதும், அப்படியான எதிர்காலம் நம் அனைவரின் முன்னோக்கப் பார்வையிலும் பொறுப்பிலும், உலகளாவிய ஒத்துழைப்பிலும் இருக்கிறது.
பயன்கள்
‘ஒருமை’யின் மனிதரைவிட, வெகுவேகச் செயலாற்றலினால் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறிப்பாக, மருத்துவம், எரிசக்தி, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் பல நன்மைகள் கிடைக்கும்
என்று கூறப்படுகிறது. உலகில் ‘ரோபோடிக்ஸ்’ தொழில்நுட்பம்
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான பொருள்கள் மற்றும் சேவைப் பிரிவில் செலவை வெகுவாகக் குறைத்து மக்களுக்கு உதவும் என்று எலான் மஸ்க் கூறுகிறார். ரே கர்ஸ்வில் என்ற
அமெரிக்க விஞ்ஞானி, “இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டும் கிடைக்குமென்று நினைக்கவேண்டாம்; உதாரணமாக, கைப்பேசி ஆரம்ப நாள்களில் விலையின் காரணமாகச் சிலரிடமேயிருந்தது. இப்போது யாவரும் பயன்பெறும்படியாகக் கிடைப்பது தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களும் நலன் பெற அமைந்திருக்கிறது” என்று
கூறுகிறார். ஒரு சில வல்லுநர்கள் இதனை வணிக நோக்குடன் ஏ.ஐ.-யின்
விளம்பரத்திற்காகவும்
பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
இணையதளம்
செய்தி அனுப்புவதில் செலவினை வெகுவாகக் குறைத்திருப்பதுபோன்று அறிவுத் திறனாய்வதில் செலவினை ஏ.ஐ. குறைக்கும்
என்றும் கூறப்படுகிறது. நன்மை, தீமைகளிருக்க, ஐசக் அசிமோவின் மூன்று ரோபோ விதிகளை நினைவுகூர வேண்டியுள்ளோம். ஒன்று, ரோபோக்கள் மனிதருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; இரண்டு, மனிதரின் கட்டளைக்கு அடங்கவேண்டும், கெடுதல் விளைவிக்கும் கட்டளையைத் தவிர்த்து மூன்று, மேலிரண்டு விதிகளோடு தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.