news-details
சிறப்புக்கட்டுரை
ஈமோஜி முகங்கள்! (வலையும் வாழ்வும் – 23)

வெள்ளையடிக்கப்படாத சுவற்றில் ஒற்றைக் கீறலோடிருந்த அந்த முகக் கண்ணாடியில், தன் முகம் பார்த்துத் தலைவாரிக் கொண்டு அவசரம் அவசரமாக வெளியே கிளம்பினான் சத்யா. ‘டேய்! கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போகலாம்லஎன்ற தன் தாயின் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், ‘வந்து சாப்பிடுறேன்மாஎன்று மட்டும் சொல்லிக்கொண்டு போனான்.

அந்த வீட்டில் என்னவோ எல்லாருடைய முகமும் ஏதோ சோகத்தைப் பிரதிபலித்துக்கொண்டே இருந்தன. சத்யாவுக்குச் சிறுவயதிலிருந்தே பைக் ஓட்டப் பிடிக்கும். வீட்டுச்சுவர் முழுவதும் ரேஸ் பைக்குகளின் கதாநாயகர்கள் சிரித்த முகத்தோடு இருப்பது போன்றே புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். சிறு வயது முதலே சிறுகச் சிறுக பைக் வாங்க வேண்டுமென்பதற்காகவே உண்டியலில் சேமித்தும் வந்தான். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் பைக் வாங்கித் தரவேண்டும் என்று முன்கூட்டியே வீட்டில் சொல்லி வைத்திருந்தான்.

சத்யாவின் குடும்பம் அப்போது பைக் வாங்கிக் கொடுக்கும் நிலையில் இல்லை. ஆம்னி பஸ் ஓட்டுநராக இருந்த அவனுடைய அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கோர விபத்துக்குப் பிறகு வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போனார். கால்களில் முறிவு ஏற்பட்டது. அவருடைய முகம் சிதைந்திருந்தது. எனவே, எப்போதும்மாஸ்க்அணிந்திருப்பார். வெளியில் முகம் காட்டவே வெட்கப்பட்டார். அதன் பிறகு வீட்டிலேயே பெட்டிக்கடை ஒன்றை வைத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வந்தார். அவர் அழுவதையும் சிரிப்பதையும் யாரும் கண்டதில்லை. அந்த விபத்திற்குப் பிறகு சத்யாவின் பைக் கனவும் தடைபட்டது. அதன் பிறகுபைக் வாங்கித் தாங்கஎன்று அவன் தன் பெற்றோரிடம் கேட்டதே இல்லை. ஆனாலும், அவனுக்குப் புதிய பைக் வாங்கணும் என்ற ஏக்கம் இருந்தது. மதுரை அருளானந்தர் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசிக்கல் சயின்ஸ் படித்து வருகிறான்.

சத்யாவின் குடும்பத்திலிருந்த ஒரே நம்பிக்கை சாந்தி அக்காதான். ‘கவலைப்படாத உனக்கு நான் ஒருநாள் பைக் வாங்கித்தரேன். கொஞ்சம் பொறுத்துக்கோஎன்று தன் தம்பியை அவ்வப்போது தேற்றுவாள் சாந்தி. கல்லூரிப்படிப்பை முடித்திருந்த சாந்திக்கு நிறைய படிக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால், வறுமையின் காரணத்தினால் அவளால் மேற்படிப்பிற்குச் செல்ல முடியவில்லை. அருகிலிருந்த டோல்கேட் ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக ஆபிஸ் கிளர்க்காகப் பணிசெய்து வருகிறாள்.

உனக்குப் பிடித்த பைக்க வாங்கிக்கோ. மீதி காச மாதந்தோறும் கொஞ்சம் கொஞ்சமா கட்டலாம்என்று ஒருநாள் தான் சொன்னபடியே தன் தம்பி சத்யாவை அழைத்து அவன் கையில் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைத் திணித்தாள் சாந்தி. ‘எதுக்குமா பைக்கெல்லாம்? அவனுக்குப் பிறகு வாங்கிக் கொடுக்கலாம். உன் கல்யாணத்துக்குக் கொஞ்சம் சேர்த்துவைச்சா நகை நட்டு வாங்க உதவுமுல?’ தாய் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தாலும் சாந்தி கேட்கவில்லை.

அந்தப் பணத்தைத் தன் கையில் பெற்றுக்கொண்ட சத்யா அப்படியே தன் அக்காவை இறுக அணைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.  ‘வீடு இருக்குற நிலையில் இவனுக்கு இது தேவையா?’ தன் மனைவியிடம் சொல்லிக் கவலைப்பட்டார் சத்யாவின் அப்பா. இருவரின் முகமும் வேதனையில் ஆழ்ந்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா காலையிலேயே சாப்பிடாம போனவன இன்னும் காணலியே. உன் தம்பிக்கு ஒரு போன் போட்டுக் கேளு சாந்திஎன்று சொல்லிக்கொண்டு சோறு வடிக்கத் தயாரானாள் சத்யாவின் தாய். வீட்டிற்கு வெளியே பட்டாசு சத்தம்; பெருங்கூட்டம். சத்யாவின் நண்பர்கள் புடைசூழ புதிய வண்டி வாசலிலேயே வந்து நின்றது. தன் பெற்றோரிடம் முதலில் காட்டவேண்டும் என்பதனால் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது அது.

அக்கம் பக்கத்து வீட்டார் கண்கள் அனைத்தும் வண்டி மேலேயே வேரூன்றிருந்தன. ‘டேய்! சத்யா வண்டி வாங்கிட்ட? கலக்கு மச்சான்பக்கத்து வீட்டு நண்பன் வாழ்த்து சொன்னான்.

சத்யாவின் முகத்தில் பிரமிப்பு இருந்தது. தான் எதையோ சாதித்ததாக நினைத்தான். தன் பெற்றோரையும், தன் அக்கா சாந்தியையும் அருகில் வரவழைத்து மூடப்பட்டிருந்த துணியைத் தூக்கியெறிந்து வண்டியை அவர்களிடம் காட்டினான். நண்பர்கள் கைதட்ட, பட்டாசு காகித மலர் சொரிய, அந்த நிகழ்வே தடாலடி கொண்டாட்டமாக இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம் என்னவென்றால், அது அவனுக்கான உயர்ரக பைக் இல்லை. தன் தந்தைக்காக அவன் பிரத்யேகமாகச் செய்துபெற்ற நான்கு சக்கர பைக்.

அப்பா! இந்தப் பைக்கை அக்காவின் பணத்தை வைத்தும், என் சேமிப்பையும் போட்டு வாங்கினேன். என்னைவிட உங்களுக்குத்தான் இப்போ இது தேவைப்படுகிறதுஎன்று சொல்லி கண்ணீர் வடித்தான் சத்யா. தன் தம்பியின் செயலை நினைத்து சாந்தி அவன் தோளைத்தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

கண்களைத் துடைத்துக்கொண்டுஅப்பா! ஒரு ரவுண்டு ஓட்டிப்பாருங்க. வாங்கஎன்று சொல்லி தன் அப்பாவை அழைத்தான் சத்யா. தன் மாஸ்கை கழற்றியெறிந்து விட்டு தன் முகச்சிரிப்பைத் தன் மகனுக்கு அன்று அவர் பரிசளித்தார். இதற்காகவே இத்தனை ஆண்டுகள் தவமிருந்ததாக உணர்ந்தது அக்குடும்பம். முகம் ஆயிரம் பேசும் என்றாலும், அன்று மட்டும் அங்கிருந்தவர்களின் ஒவ்வொரு முகமும் ஒன்றையே பேசியது. அது மகிழ்ச்சி!

தொடர்பாடல் (communication) என்பதே உணர்வுகளை, எண்ணங்களை, தகவல்களைப் பகிர்ந்துகொள்வதுதான். ஆயினும், நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் நூறு விழுக்காடு நம்மால் பிறருக்குக் கடத்தமுடிகிறதா என்றால், அது இல்லை. எனவேதான் தகவல் தொடர்புக்கு, சொல் தொடர்பாடலும் (verbal communication), சொல்லில்லாத் தொடர்பாடலும் (non verbal communi cation) மிக முக்கியம்.

வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகிலே பிறரோடு பேசுவதற்குப் பதிலாக, குறுஞ்செய்திகளைப் புலனம் (whats app) வழியாகவோ, எஸ்.எம்.எஸ். வழியாகவோ அனுப்புகிறோம். ஆனால், இது நாம் நினைப்பதை அல்லது உணர்வதைச் சரியாக எடுத்துரைப்பதில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இன்று பலரும் பயன்படுத்துகின்ற ஒன்றுதான்ஈமோஜிகள் (Emojis). தமிழில் இதனைஉணர் சின்னங்கள்என்றும் சொல்லலாம் (இது என் கண்டுபிடிப்பு). எனினும், இங்கு நமது புரிதலுக்கு வேண்டிஈமோஜிகள்என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறேன்.

பொன்னிற முகம், சிவந்த கன்னங்கள், முகம் முழுக்க இதயம், அதோடு ஓர் அழகிய சிரிப்பு. காதலைத் தெரிவிக்க, சோகத்தைக் காண்பிக்க, அதிருப்தியை வெளிப்படுத்த என்று ஏராளமான ஈமோஜிகளை நாம் பயன்படுத்துகிறோம். இப்போதெல்லாம் ஈமோஜிகளைப் பிசினஸ் உலகிலும் பலர் மார்கெட்டிங்காகப் பயன்படுத்துகின்றனர்.

ஸ்காட் . பால்மேன் என்பவர் எண்பதுகளில் முதன் முதலில்ஈமோடிகான்ஸ் (Emotiocons – Emotions+icon) என்ற பெயரில் ஈமோஜிகளை வடிவமைத்துத் தன் மின்னணுத் தகவல் தொடர்பிற்குப் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது நாம் பயன்படுத்துகின்ற ஈமோஜிகள்ஷிகேடகா குரிட்டாஎன்னும் ஜப்பானைச் சேர்ந்தவரால் முதன்முதலில் 2001-ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது.

Emojiஎன்பதற்கு ஜப்பானிய மொழியில்Eஎன்றால் படங்கள், ‘mojiஎன்றால் எழுத்துருக்கள் என்று பொருள். ஓர் ஆய்வின் அடிப்படையில் இன்று 74 விழுக்காடு அமெரிக்கர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளில் ஈமோஜிகளைப் பயன்படுத்துகின்றார்கள். இன்று சமூக ஊடகங்களிலும், அன்றாட மெசேஜ்களிலும் ஈமோஜிகள் பயன்படுத்தப்படாத குறுஞ்செய்திகள் இல்லை என்றே கூறவேண்டும்.  

எல்லாவற்றையும் வேகமாகவும் சுருக்கமாகவும் கூறவிரும்பும் இத்தலைமுறையினர் குறுஞ்செய்திகளிலும் ஈமோஜிகளிலும் மட்டுமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இதனால் சொல்ல விரும்பும் செய்தி சரியாகப் புரிந்துகொள்ளப்படாத சூழல், மொழிவளம் குன்றுகின்ற நிலை, செய்தியின் தீவிரத்தன்மையை அறிந்திராது கடந்துபோகின்ற போக்கு என்று ஏராளமான தகவல் தொடர்பு இரைச்சல்களை உருவாக்கக்கூடும்.

சக மனிதர்களிடம் முகமுகமாகப் பேசி, சிரித்து, அழுது, கோபித்து, வெட்கி, உறவாடி மகிழ்வது தொடர்பாடலின் உன்னத நிலையே. இவ்வுணர்வினை எந்த ஈமோஜிக்களாலோ ஸ்டிக்கர்களாலோ கொடுக்கமுடியாது என்பதே உண்மை. (தொடரும்)