news-details
ஆன்மிகம்
மிகையான மையப்படுத்தல் தவிர்க்கப்பட வேண்டும்! - மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 07

வழிபாட்டுமுறைகள், அறம், சமூகம் மற்றும் இறையியல், நற்செய்திப் பணிமுறை என்பவை சார்ந்த கருத்து மோதல்கள் இன்று திரு அவையில் நிலவுகின்றன. அவற்றை மேற்கொண்டு ஒன்றிப்புறவை வளர்த்தெடுக்கத் துணிச்சலான முயற்சிகள் தேவை. ‘பன்மையில் ஒருமைஎனும் திரு அவையின் இயல்புப் பண்பைச் சிறப்பாக வெளிப்படுத்துபவை, அதனுடன் ஒன்றிப்புறவில் உள்ள கீழைத் திரு அவைகள். அவற்றை இலத்தீன் மயமாக்கும் அணுகுமுறை கைவிடப்பட்டு, அவற்றின் தனித்தன்மையும் தன்னாட்சியும் அதிகமதிகமாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலை இன்று வந்துள்ளது. அவற்றின் பன்மையில் ஒருமை எனும் அனுபவம் திரு அவையின் கூட்டியக்கத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் உதவ முடியும்.

உண்மையான உலகளாவியத் திரு அவையாகத் திகழ அதற்குப் பல்வகை வெளிப்பாடுகள் இயல்பானவையும் இன்றியமையாதவையும் ஆகும். ஏனெனில், அது வாழும் இடங்களும் பண்பாடுகளும் சூழமைவுகளும் வெவ்வேறானவை. அவற்றின் வேறுபடும் அர்த்தங்களையும் முதன்மைகளையும் பல்வகை வளங்களையும் ஏற்று மதிக்கும் உணர்வைத் திரு அவை இன்னும் அதிகம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையைக் காத்து வளர்க்கும் முனைப்பில் பன்மைத்தன்மையை அழிக்கும் மிகையான மையப்படுத்தலுக்கும் ஒருசீராக்குதலுக்கும் அது ஆளாகி விடக்கூடாது.

நற்கருணையிலிருந்தே நாம் பன்மையில் ஒருமை என்பதை எடுத்துரைக்கக் கற்றுக்கொள்கிறோம்; ஒரே அருளடையாள மறைபொருள், பல்வேறு வழிபாட்டு மரபுகள், கொண்டாட்டத்தில் ஒன்றிப்பு, அழைத்தல்கள், அருள்கொடைகள், பணிகள் என்பனவற்றில் பல்வகை. இதுவே பன்மையில் ஒருமை. ஆவியார் உருவாக்கி வளர்க்கும் இந்த ஒத்திசைவு அனைத்தையும் ஒரு சீராக்குதல் அல்ல; இருப்பினும், திரு அவைசார் கொடை ஒவ்வொன்றும் பொது வளர்ச்சிக்காகவே என்பதை வேறு எதையும்விட நற்கருணை அதிகமாகப் புலப்படுத்துகிறது (முஅ 3f).

கூட்டியக்கத் திரு அவையின் இன்றியமையாத ஒரு பண்பு பல்வேறு பிரிந்த அல்லது சீர்திருத்தத் திரு அவைகளுடன் ஒன்றிப்பிற்கான முயற்சிகள். தம் சீடர்களின் ஒன்றிப்பு என்பது இயேசு விரும்பியதும், தமது இறுதி இரவு விருந்தின்போது தந்தையிடம் இறைவேண்டல் செய்ததும் ஆகும் (யோவா 17:20-26). அவர் விடுக்கும் அழைப்பு, நாம் பெற்றுள்ள பொதுவான திருமுழுக்கு என்பனவற்றின் அடிப்படையில் கிறித்தவ ஒன்றிப்பிற்கான பயணத்தைத் தொடரவும் தீவிரப்படுத்தவும் கத்தோலிக்கத் திரு அவை உறுதிபூண்டுள்ளது.

மேலும், திரு அவை அதிகமதிகமாக இன்று பல பண்பாடு மற்றும் பல்சமயச் சூழமைவுகளில் இயங்குகிறது. இதனால் அந்தப் பல்வேறு பண்பாடுகள் மற்றும் சமயங்களுக்கு இடையே உரையாடல் அவசியமாகிறது. “தூய ஆவியார் எந்தச் சமயத்தையும் நம்பிக்கையையும் பண்பாட்டையும் சார்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் வழியாகப் பேசமுடியும் என்பதைத் திரு அவை அறிந்துள்ளது (முஅ 5f)). இதனால் அது மக்களிடையே ஒன்றிப்பை உருவாக்க பல்சமய உரையாடலை ஊக்குவிக்கிறது. இவ்வுரையாடல் மனிதகுலத்தின் ஒன்றிப்பு, சமூக நீதி, அமைதி, ஒப்புரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பனவற்றையும் நோக்கியதாக இருத்தல் வேண்டும். மேலும், கூட்டியக்கத் திரு அவை எங்கு இருந்தாலும் ஏனைய சமய நம்பிக்கையாளர்களுடன் இணைந்து அப்பாதையில் நடக்க உறுதிகொண்டுள்ளது. அது நற்செய்தியின் மகிழ்ச்சியை அவர்களுடன் தாராளமாகப் பகிர்ந்துகொண்டு, அவர்களது கொடைகளை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. இத்தகைய ஒத்துழைப்பின் வழியாக அனைவரும் சகோதரர், சகோதரிகள் என ஒன்றிணைந்து நீதி, தோழமை, அமைதி என்பனவற்றை வளர்ப்பதே நமது நோக்கம்.

இத்தகைய சூழ்நிலைகளில் அதன் நற்செய்தி அறிவிப்புப் பணியும் உடன் பயணித்து, செவிகொடுத்து, கற்றுக்கொள்வதாக அமைவது அவசியம். எந்த ஒரு சமயத்தை அல்லது பண்பாட்டைச் சந்திப்பது என்றாலும், அது தான் சார்ந்திருப்பதற்குச் சமமான புனித இடத்தில் புகுகின்ற உணர்வுடன் செய்யப்பட வேண்டியது ஆகும். அதற்கு ஒருவர் தன்னுடையகாலணிகளைக் கழற்றி வைத்துக்கொண்டுதாழ்மை மற்றும் மதிப்பு உணர்வோடு செல்வது அவசியம் (முஅ 5c).

மேலும், பிற சமய மரபுகளுடன் உள்ள உறவில் நட்புறவு, நல்லிணக்கம், ஒத்திசைவு என்பனவற்றை வளர்ப்பதும், அருள்வாழ்வு மற்றும் அறம்சார் விழுமியங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதும், அவற்றைச் சந்தித்து அவற்றுடன் உரையாடி, வளங்களைப் பரிமாற்றம் செய்வதும் கூட்டியக்கத் திரு அவைக்கு இயல்பான செயல்பாடுகள்.

நற்செய்தி அறிவிப்புப் பணி சில இடங்களில் குடியேற்ற ஆதிக்கத்தோடும் அந்தந்த மக்களின் பண்பாட்டுக் கலைப்பு, சமய அழிப்பு என்பனவற்றுடன் கைகோர்த்தே நடந்துள்ளது. “செய்துள்ள தவறுகளை ஏற்றல், அவை பற்றிய புதிய புரிதலைக் கற்றுக்கொள்ளுதல், குடியேற்ற ஆதிக்கத்தைக் கடந்த புதிய தான்மையுணர்வைப் புனைய முனையும் தலைமுறையோடு இணைந்து பயணித்தல் என்பன அத்தகைய சூழமைவுகளில் நற்செய்தி அறிவிப்புப் பணியாற்றுவதற்கு அவசியம். நாம் ஒருவரை ஒருவர் நிறைவாக்குகிறோம், வேறுபட்ட பண்பாடுகளைச் சந்திப்பது கிறித்தவக் குழுமங்களின் நம்பிக்கைசார் வாழ்வையும் புரிதலையும் செழுமைப்படுத்த முடியும் என அவற்றை மதிக்கும் மனநிலையும் தாழ்மையுணர்வும் அப்பணிக்கு அவசியமான அடிப்படைப் பண்புகள் (முஅ 5e).

செயல்படுத்தச் சில பரிந்துரைகள்

1. திரு அவையில் அனைத்து நிலைகளிலும் மிகையான மையப்படுத்தலைத் தவிர்க்கும் வழி வகைகளைத் தெளிதேர்வுசெய்து முக்கிய முடிவு எதுவெனினும், அதனுடன் தொடர்புடைய எல்லாருடைய ஒத்திசைவையும் பங்களிப்பையும் கூட்டியக்க முறையில் பெற்று அதை நடைமுறைப்படுத்த வேண்டும் (முஅ 5m).

2. அந்தந்த மண்ணின் மக்களுக்கு எவ்வாறு அருள்பணி ஆற்றுவது என அவர்களுக்கு ஏற்ற புது வழிமுறைகள் கண்டறியப்படவேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி அவை பற்றி முடிவெடுப்பது அருள்பணி சிறப்புற உதவும் (முஅ 5n).

3. திரு அவையின் வாழ்விற்கு முக்கியமான திருவழிபாடு, அறவியல், சமூக நிலைப்பாடுகள், இறையியல் என்பனவற்றில் முரண்படும் பல புரிதல்களும் விளக்கங்களும், நற்செய்தி அறிவிப்புப் பணிமுறை, பண்பாட்டுமயமாதல் என்பவை பற்றிய கருத்து வேறுபாடுகளும் இன்று பரவலாக உள்ளன. உரையாடல் வழியாக இவை பற்றிய கருத்து ஒற்றுமையை உருவாக்கி, ஒற்றுமைக்கான துணிச்சலான முயற்சிகளில் இறங்குவதுடன் அவற்றை மேற்கொள்ள ஒப்புரவுக்கான செயல்பாடுகளையும் முன்னெடுக்கவும் வேண்டும் (முஅ 5i).

4. இன்றைய உலகில் பல்வேறு சமூகங்களுக்கு இடையில் வணிகத்தை மட்டுமல்ல; கொடிய ஆயுதங்களைக்கூடக் கையாளும் அளவிற்கு மோதல்களும் போட்டிகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கு வன்முறை இல்லாத தீர்வு காண்பது எவ்வாறு என்பது பற்றி அதிகம் சிந்திப்பதும், உரிய பயிற்சிகள் கொடுப்பதும் அவசியம். பல்வேறு சமயங்களுடன் உரையாடி, ஒத்துழைத்து இத்துறையில் கிறித்தவர்கள் பெரும் பங்களிப்பு செய்யமுடியும் (முஅ 5k).