சிம்லா-சண்டிகர் மறைமாவட்டத்தின் ஆயராகக் கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி. சகாய ததேயுஸ் தாமஸ் (54) அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 12 அன்று நியமனம் செய்துள்ளார்.
அருள்தந்தை சகாய ததேயுஸ் தாமஸ் 1971-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் நாள் தமிழ்நாட்டின் கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள சின்னவிளையில் பிறந்தவர். இலக்னோ புனித பவுல் இளங்குருமடத்தில் கல்வி பயின்று, ஜலந்தரில் உள்ள தமத்திரித்துவக் குருமடத்தில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றார். 2001, மே 13 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்றார். பாட்டியாலா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் முதுகலைப் பட்டத்தையும் (2006-2008), டெல்லியில் உள்ள இந்திய மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைக் கல்வியில் முதுகலைப் பட்டத்தையும் (2007-2009) பெற்றுள்ளார். ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப் பட்டமும் (2010-2013), திருவிவிலியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் (2013-2016).
பங்குப் பணியாளர், குருமட உதவி அதிபர், மறைமாவட்டச் சமூகத் தொடர்பு மற்றும் திருவிவிலிய ஆணையங்களின் இயக்குநர் எனப் பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர்.