கத்தோலிக்கத் திரு அவைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் இறைவனிடம் மீண்டார் எனும் செய்தி அறிந்து வருந்துகிறோம். கத்தோலிக்கக் கிறித்தவத்திற்கு மட்டுமின்றி, இந்த இழப்பு ஆன்மிக உலகிற்கும் ஏற்பட்ட இழப்பாகும்.
அர்ஜென்டினாவைச்
சேர்ந்த போப் பிரான்சிஸ் 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் நாள் 266-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் இலத்தீன் அமெரிக்கத் திருத்தந்தை எனும் வரலாற்றுத் தடத்தைப் பதித்தார். இறைப்பணி, தேவாலயங்களின் சேவை, மக்கள் நலனுக்காக அயராது பாடுபட்டவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
அன்பு,
நம்பிக்கையுடன் கூடிய துணிவையும் தனது செயல்பாடாகக் கொண்டு இயங்கியவர். பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.
பருவநிலை
மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டியவர் அவர். அதனாலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தனது பணிகளில் ஒரு பகுதியாகவே கொண்டிருந்தார்.
சமூக
நீதிக்கொள்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தவர். அதனாலேயே எளிய மக்களின் குரலாகவே அவரது குரல் ஒலித்தது. அடிமைத்தனத்தை அறுத்தெறிய வேண்டும் என்பதைத் தொடர்ந்து முழங்கியவர். பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமின்றி, வத்திக்கானில் பெண்களுக்குப் பதவிகளையும் வழங்கினார்.
‘போரிடும் கெட்ட உலகத்தை வேரோடு சாய்ப்போம்’என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். போர் இல்லாத அமைதியான உலகைச் சமைப்பதைப் பெரிதும் விரும்பியவர். அதனாலேயே பாலஸ்தீனம் மீதான இஸ்ரயேலின் கொடூரத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துப் போர் நிறுத்தத்தை வேண்டினார்.
உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறித்தவச் சகோதரர்களின் இழப்பின் வருத்தத்தில் நாங்களும் பங்கெடுக்கின்றோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பிய போர்களற்ற அமைதியான உலகம் சமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.
- மௌலவி முஹம்மது ஹனீஃபா
மன்பயீ, மாநிலத் தலைவர்,
ஜமாஅத்தே
இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு, புதுச்சேரி