news-details
ஆன்மிகம்
மனம் என்னும் மரம் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 13)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அகஸ்டின்:தந்தையே! இதுவரை அருளடையாளங்கள் குறித்த பொதுவான சிந்தனைகளை உளவியல் ஆன்மிகப் பின்னணியில் விளக்கினீர்கள். இனி நீங்கள் ஒவ்வோர் அருளடையாளமாக எடுத்துத் தனித்தனியாக விளக்கினீர்கள் என்றால், அவற்றை இன்னும் அர்த்தமுள்ள வகையில் அணுக முடியும் என்று எண்ணுகின்றேன்.”

அருள்பணி:முதலாவதாக, நாம் திருமுழுக்குக் குறித்துச் சிந்திக்கலாம். ‘பாவத்தின் கழுவாய், ‘புதுப் பிறப்பின் தொடக்கம், ‘கிறித்தவ வாழ்வின் நுழைவாயில், ‘ஆதிப்பெற்றோரின் பாவத்தைப் போக்கும் அருளடையாளம்என்றெல்லாம் அழைக்கப்படுகிறது திருமுழுக்கு. கடந்த கட்டுரையில் நாம் பார்த்ததுபோல, திரு அவையின் தொடக்கம் முதலே கொண்டாடப்படும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற அருளடையாளம் திருமுழுக்கு!”

மார்த்தா:ஆனால், பெரும்பாலான கிறித்தவர்களைப் பொறுத்தமட்டில் திருமுழுக்கு என்பது பெயர் வைக்கின்ற ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது தந்தையே! அதன் வழியாகப் பொழியப்படும் அருள்வரங்கள் அற்புதமானவை என்பது குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இருப்பதுபோல தெரியவில்லையே!”

அருள்பணி:உண்மைதான்! நம் மக்கள் அருளடையாளங்களைச் சடங்காச்சாரமாக அணுகப் பழகிவிட்டார்களேயொழிய, அவற்றின் ஆழத்தில் நிகழ்கின்ற அருள் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே, பெரும்பாலான கிறித்தவர்களின் வாழ்வு குறுகிய வட்டத்தில் முடங்கிப்போனதாக இருக்கிறது.”

கிறிஸ்டினா:தந்தையே, திருமுழுக்கு நம் பிறப்புநிலைப் பாவத்தைக் (சென்மப் பாவத்தை) கழுவுகிறது என்று சொல்லப்படுகிறதே! இதைப் பற்றிய உங்களது பார்வை என்ன?”

அருள்பணி:முதலில் பிறப்புநிலைப் பாவம் என்றால் என்ன? என்பதை உளவியல்-ஆன்மிகப் பின்னணியில் புரிந்துகொள்ள முயற்சி எடுப்போம்.”

மார்த்தா:ஆதாமும் ஏவாளும் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டனர். அதுதானே  பிறப்பு நிலைப் பாவம் என்பது!”

அருள்பணி: ஆம்! எனினும், இதை நாம் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம். என்றோ வாழ்ந்த ஆதாமும்-ஏவாளும் விலக்கப்பட்ட கனியை உண்டதாகவும், அதனுடைய பாதிப்பு நம்மைத் தாக்குவதாகவும் புரிந்துகொள்வது முழுமையான புரிதலாக இருக்க முடியாது.”

கிறிஸ்டினா: அப்படியானால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ட நிகழ்வைச் சரியாகப் புரிந்துகொள்வது எப்படித் தந்தையே?”

அருள்பணி:ஆதாம் என்றால்மனிதன்என்று பொருள்; ஏவாள் என்றால்பெண்என்று பொருள். எனவே, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணும் நிகழ்வு ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நிகழ்கிறது.”

அகஸ்டின்:ஆச்சரியமாக இருக்கிறது! கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் தந்தையே!”

அருள்பணி:விலக்கப்பட்ட மரம் என்பதுநன்மை-தீமை அறிகின்ற மரம் (The tree of the knowledge of Good and Evil) என்று திருவிவிலியத்தில் (தொநூ 2:16,17) குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குநன்மை-தீமை அறிகின்ற மரம்என்பது ஒரு குறியீடு (Symbol). அது நம் மனத்தைச் சுட்டிக்காட்டும் குறியீடு. அதாவது, நம் வாழ்வில் நன்மை என்றும், தீமை என்றும் நிகழ்வுகளையும் மனிதர்களையும் பகுத்துப் பார்ப்பதற்கான காரணம் நம் மனமே! எனவேதான் இதுபகுத்தறிவு (பகுத்து அறிவது) என்று அழைக்கப்படுகிறது. அதேபோல நாம் உலகைஅறிந்துகொள்வதற்கான காரணமாக இருப்பதும் நம் மனமே. நாம் உலகை அறிய முற்படுவதால் நமக்குக் கிடைப்பதே அறிவு (Knowledge) என்பது!”

அன்புச்செல்வன்:தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்த்தால்நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனிஎன்று திருவிவிலியம் கூறுவதுமனத்தின் கனிஎன்று அர்த்தம் தருகிறது. அப்படியானால் நம் மனம் மனித வாழ்விற்குச் சாபத்தைக் கொண்டு வருகிறதா?”

அருள்பணி:மனம் முழுக்க முழுக்கக் கெட்டது அல்ல; அதனால் பல நன்மைகள் விளைகின்றன. முதலாவதாக, ஏதேன் தோட்ட நிகழ்வை நாம் முழுக்க முழுக்க எதிர்மறையாகவே பார்த்துப் பழகிவிட்டோம். அதில் சில நேர்மறைத்தன்மைகள் இருப்பதை நாம் மறந்துவிடுகின்றோம். ஆதாமும், ஏவாளும் விலக்கப்பட்ட கனியை உண்ட பின்பு அவர்களது கண்கள் திறக்கப்பட்டதாகவும் (தொநூ 3:7), அவர்கள் கடவுளைப் போல ஆனதாகவும் (தொநூ 3:22) திருவிவிலியம் கூறுகின்றது. ‘கண்கள் திறக்கப்படுவதுஎன்பது சுய அறிவு உள்ளவர்களாகவும், தமக்கெனச் சிந்திக்கும் திறமை வாய்ந்தவர்களாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ‘கடவுளைப்போல ஆவதுஎன்பது படைப்புத் திறன் உள்ளவர்களாக இருப்பது. கடவுளது முதல் வேலையே படைப்பதுதானே! எனவே, படைப்புத் திறன், சிந்தனை, அறிவு முதலியவை மனத்திலிருந்து உருவாகும் சில நன்மைகள்.”

கிறிஸ்டினா:தந்தையே, இக்கருத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா?”

அருள்பணி:ஒவ்வொரு மனிதருமே தம் குழந்தைப் பருவத்தில் கண்கள் மூடிய நிலையில்தான் இருக்கின்றனர். அதாவது, தமக்கெனச் சுய சிந்தனைகள் இல்லாதவர்களாகப் பெற்றோரும் மற்றோரும் கூறுவதை உள்வாங்கி, அதற்கேற்ப நடந்துகொள்கின்றனர். பதின் பருவத்தில்நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனியைஉண்ண ஆரம்பிக்கின்ற பொழுது, அதாவது ஒரு மனிதர் தன் மனத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றபோது, தனக்கெனச் சுயசிந்தனைகளை வளர்த்துக்கொள்கின்றார். இதுவே கண்கள் திறக்கப்படும் நிலை என்பது! எனவே, நன்மை, தீமை அறிகின்ற மரத்தின் கனியை உண்பதும், கண்கள் திறக்கப்படுவதும் ஒவ்வொரு மனிதரது வாழ்விலும் நடந்தேறுகிறது. அதேபோல, அறிவானது நம்மைப் படைப்புத்திறன் வாய்ந்தவர்களாக மாற்றுகிறது. மனிதர்களுக்கென்று கடவுள் கொடுத்துள்ள ஒரு மாபெரும் கொடை படைப்புத் திறன்! மனிதர்கள் தங்களது படைப்புத் திறனால் பூமியைத் தொடர்ந்து அழகாக்கிக் கொண்டு இருக்கின்றனர். கடவுள் காட்டைப் படைத்தார் என்றால், மனிதர்கள் தோட்டத்தைப் படைக்கின்றனர். கடவுள் நிழலைப் படைத்தார் என்றால், மனிதர்கள் குளிர்சாதனப் பெட்டியைப் படைக்கின்றனர். கடவுள் பறவைகளைப் படைக்கிறார் என்றால், மனிதர்கள் விமானத்தைப் படைக்கின்றனர். கடவுள் மின்னலைப் படைக்கிறார் என்றால், மனிதர்கள் மின்சாரத்தைப் படைக்கின்றனர். கடவுள் மனிதர்களைப் படைக்கின்றார் என்றால், மனிதர்கள் இயந்திர மனிதர்களைப் படைக்கின்றனர். மனிதர்களது தொடர் படைப்பால் இந்தப் பூமி அழகும் பொலிவும் பெறுகின்றது.”

அன்புச்செல்வன்:தந்தையே, கடவுள் ஆறு நாள்கள் உலகத்தையும், அதன் உச்சமாக மனிதர்களையும் படைத்துவிட்டு, ஏழாவது நாள் ஓய்வு எடுத்தார் என்று திருவிவிலியம் கூறுகின்றது. தமது படைக்கின்ற வேலையை மனிதர்களிடம் கொடுத்துவிட்டதால், கடவுள் ஓய்வு எடுத்தார் என்று பொருள் கொள்ளலாமா?”

அருள்பணி:நல்ல சிந்தனை! தனக்குப் பிறந்த மகன், தன் குடும்பப் பொறுப்பை எடுத்துக்கொண்ட பின்பு, தந்தை ஓய்வு பெறுவதுபோல, தம் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர், படைப்புத் தொழிலைத் தொடரும் பொருட்டுக் கடவுள் ஓய்வெடுத்தார் என்று பொருள் கொள்வது சரியானதே! மனம் இத்தகைய நற்செயல்பாடுகளைச் செய்தாலும், அது நம் வாழ்விற்குள் பல பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது என்ற உண்மையை நம்மில் பலர் புரிந்துகொள்வது இல்லை.”

(தொடரும்)