மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அளப்பரிய ஆற்றல் அன்று முதல் இன்றுவரை அரசியலுக்கே உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை நம் இருத்தலையும் இயக்கத்தையும் வரையறுப்பவை அரசியல். இதை ஆழமாக உணர்ந்ததால்தான் அன்றே கிரேக்கத் தத்துவமேதை அரிஸ்டாட்டில், அரசியல் சார்ந்த ஆட்சிக் கலையை ‘தலைமை அறிவியல்’ (Master Science) என்று வர்ணித்தார். ஆனால், அதன் பொருள் ஏனோ இன்று மாறிப்போனது; எல்லாம் தலைகீழாகிப் போனது.
‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது முதுமொழி! ‘அரசியலின்றி எதுவும் அசையாது’ என்பது புதுமொழி. அரசியலே அனைத்தையும் ஆட்டி வைக்கிறது. இதில் ஆழ்ந்த பொருள் பொதிந்து கிடப்பது இன்று புரிகிறது.
மக்கள்
மையம் கொண்ட ஒரு சமூகம், மக்களை மையம் கொண்ட ஓர் அரசியல் இவை இரண்டும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்தவை. பிரித்துப் பார்த்தால் பொருள் இல்லை; இவற்றைப் பிரித்துப் பார்க்கவும் இன்று வழியில்லை. ஆகவே, சாமானியனின் வாழ்வியலுக்குச் சதி கொண்டு, விதி எழுதுவது இந்த அரசியலே!
இன்று
அரசியலில் ‘மக்கள் பணி’ என்பது கடந்து, அதிகாரம் என்பதும் ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்பதும் முதன்மை பெறுகிறது. அதை அடைவது ஒன்றே அரசியல்வாதிகளின், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் குறிக்கோளானது. இதற்காக யாவும் சமரசம் செய்யப்படும் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் எதார்த்தம்.
தத்துவங்கள்,
கொள்கைகள், கோட்பாடுகள், முன்னிறுத்தும் செயல்பாடுகள், மதிப்பீடுகள், அதற்கான நிலைப்பாடுகள்... எனக் கட்சிக்குக் கட்சி வேறுபட்டு வெவ்வேறு துருவங்களில் பயணிப்பவர்கள் கூட ‘அதிகாரம்’,
‘ஆட்சி’, ‘பதவி’ என்பதற்காகக்
கைகுலுக்கிக்கொள்ளும்
நகை முரண் கொண்ட செயல்பாடுகளும் இங்கு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் ஒன்றிய, மாநிலத் தேர்தல் சூழலில் அவ்வப்போது ஏற்படும் இத்தகைய ‘கூட்டணிகளை’ நாம்
வரம் என்பதா? இல்லை சாபம் என்பதா?
ஒவ்வொரு
கட்சியும் தனிச் சிந்தனையும், தனிக் கொள்கையும், தனிக்கொடியும் உடைய தனித்த கட்சிகள்தாம்; ஆனால், ஏனோ அனைத்தையும் சுயநலத்திற்காக அடகு வைத்துவிடுகின்றன. அது ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்பது பலருக்கும் தெரியும். மக்களுக்கு மட்டுமல்ல, தனிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் தெரியும். ஆயினும், அவர்களின் சுயநலம் மேலோங்கி இருப்பதால் பொதுநலம் மறைந்து போக, பூபாளம் பாடுகிறார்கள். கொள்கை உடைய கட்சிகள் தங்கள் கொள்கைகளை இழந்தபோது என்னவென்று சொல்வது? ஆட்சி அதிகாரத்துக்காகக் கூட்டணி சேரும் கட்சிகள் சுயகொள்கை இன்றிச் செயல்படுவதைப் பார்க்கும்போது மக்களை ‘முட்டாள்கள்’ என்றே
இவர்கள் நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நாம்
பல வேளைகளில் சூழ்நிலைக் கைதிகளாகிறோம்; எதையும் முறையாகப் பகுப்பாய்வு செய்து பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் இல்லை. எளிதில் எதையும் மறந்து விடுகிறோம். கூட்டணிகளின் சூட்சுமத்தை நுண்ணறிவு கொண்டு கணிக்க வேண்டிய காலம் இது.
“அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இன்று தனித்த கொள்கை, கோட்பாடுகள் என்று எதுவும் கிடையாது. வாக்கு வங்கி, ஆட்சி அதிகாரம், கட்சி மூலம் ஊழல் பணம் சேர்த்தல், சேர்த்த கறுப்புப் பணத்தை வாக்களிக்க மக்களுக்குக் கையூட்டாகக் கொடுத்தல்... போன்ற செயல்களைத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் செய்கின்றன” என்ற
பொது விமர்சனமும் தவிர்க்க இயலாதவை. இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம்.
“பெரும் கட்சிகளோடு ஒட்டிவரும் சிறு கட்சிகள் அதிகாரத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு, இறுதியில் அவர்களின் தொங்கு சதையாகிவிடுகின்றன” என்ற
திரு.பழ.கருப்பையாவின் கூற்றும்
இங்கே நினைவுகூரத்தக்கதே. அநீதிகள் நிகழும் போது உண்மையை உரக்கச் சொல்வதற்குப் பதிலாக, கூட்டணி தர்மம் கண்டு அவர்களுக்குச் சாமரம் வீசும் நிலையே இன்றும் தொடர்கதையாகிறது. இதில் பாரபட்சம் இல்லை; ஒன்றியமோ, மாநிலமோ இதே நிலைதான் கூட்டணிக் கட்சிகள் அனைத்திற்கும்.
ஆட்சியைப்
பிடிக்க ‘கூட்டணி’ என்ற மந்திரத்தை வகுத்துத் தந்தவர் மூதறிஞர் இராஜாஜி. ஆட்சி நல்லாட்சியாக அமையாதபோது
அவரே அதை எதிர்க்கவும் துணிந்தார் என்பதே வரலாறு. தேர்தலுக்கான கூட்டணி என்பதை ஆட்சிக்கான, அநீதிக்கான கூட்டணியாக இன்று மாற்றி விடுகிறார்கள்.
தமிழ்நாட்டின்
2026 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி, தேர்தல் கூட்டணி ‘சடுகுடு ஆட்டம்’ ஆடத் தொடங்கிவிட்டது. 2023-இல் பா.ச.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிய அ.தி.மு.க. இன்று சமரசக்
கூட்டணி மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிய உள்துறை அமைச்சரைச் சந்திக்கும் திடீர் சந்திப்புக்கு ஆயிரம் உள்ளர்த்தங்கள் கணிக்கப்பட்டாலும், இச்சந்திப்பிற்குப் பிறகு ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, “2026-இல் தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று
கூறிய கூற்றில் பொதிந்திருக்கும் உண்மை எவருக்கும் புரியாதது அல்ல!
இச்சந்திப்பின்
எதிரொலி கூட்டணிதான் என உணர்ந்த அ.தி.மு.க.வினர், “சிறுபான்மையினரும் பா.ச.க.
எதிர்ப்பாளர்களும் கடந்த தேர்தலில் நம்மைப் புறக்கணித்தார்கள்; இந்த முறையும் புறக்கணிக்கப் போகிறார்கள்...” எனப் புலம்பி வருவதும் நம் காதுகளில்
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
எது
எப்படியோ, வரும் ஏப்ரல் 18-ஆம் நாள் பெங்களூருவில் தொடங்கவிருக்கின்ற பா.ச.க.வின் தேசியச் செயற்குழுக் கூட்டம் ‘மிஷன் சவுத்’ என்ற ஒற்றைக் கருத்தை மையம் கொண்டதாக இருக்கிறது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே உறுதியான ஒரு கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்பதற்காக நடந்த தீவிரமான ஆலோசனைதான் இச்சந்திப்பு என்றும், இத்துடன் இன்னும் சில தனிக்கட்சிகள் ஒன்றிணையும் என்பதும் அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது. பா.ச.க.
- அ.தி.மு.க.
கூட்டணி கனிந்திருக்கும் இவ்வேளையில், வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மாநிலங்களவை
உறுப்பினர் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைக்கவிருக்கும் சீட்டுகளைப் பற்றியும், இந்தக் கூட்டணியைச் சிறப்பாக முன்னெடுத்தால் யாருக்கு அதில் ஆதாயம் இருக்கிறது என்பதையும் இவர்கள் கணிக்கத் தவறவில்லை.
இரு
பெரும் திராவிடக் கட்சிகள், திராவிடக் கொள்கை கொண்ட கிளைக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் தனித்த கட்சிகள், தமிழ் தேசியக் கூட்டணிக் கட்சிகள், நெடும்பயணம் கண்ட சாதியக் கட்சிகள், நேற்று கண் விழித்த புதிய கட்சிகள்... எனப் பலவும் மதச்சார்பற்ற அரசியல் தளத்தில், பந்தயத்தில் முன்னிருக்கும் சூழலில், பா.ச.க.வின் கணக்கு தனிக் கணக்காகவே அமைகிறது.
மத
அரசியலும், சிறுபான்மையினர் அச்சுறுத்த லும், விவாதத்திற்கு உள்ளாகி வரும் இஸ்லாமியருக்கு எதிரான வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவும், குடியுரிமைச் சட்ட மசோதாவும்... உயிர் நாளமாகக் கொண்ட பாசிச பா.ச.க.
அரசின் கொள்கை கோட்பாடுகளில் மாறுபட்ட கட்சிகளும் மனம் திறந்து தழுவிக்கொள்வது தமிழ்நாட்டின், இந்தியாவின் ஒளிமயமான, சமத்துவச் சகோதரத்துவ, சனநாயக உரிமை கொண்ட எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மக்களின் மத நல்லிணக்கத்திற்கும், நாட்டின் மதச்சார்பின்மைக்கும்
சனநாயகத்திற்கும் நிகழவிருக்கும் பேரழிவு கண் முன்னே தோன்றி பெரும் கவலையளிக்கிறது.
அன்று
ஆதரிப்பார் எவருமின்றி, தனித்து நின்ற அரசியல் கட்சிகளோடு, இன்று ஆதாய அரசியல் அகலப் பாய்ந்து, சூழ்ச்சி கொண்ட ஆழியில் கலந்திடும் சூட்சுமத்தைத் தெளிவுற நாம் உணர்ந்தாக வேண்டும்.
உண்மையும்
பொய்மையும் ஒன்றெனக் கலந்து வரும் இச்சூழலில், நல்லவை - அல்லவை வேறுபாட்டை நாம் அறிந்தாக வேண்டும்.
“நன்மை செய்யக் கற்றுக்கொள்பவர்களும்... நீதியை நாடித் தேடுபவர்களும்... ஒடுக்கப்பட்டுள்ளோருக்கு உதவி செய்பவர்களும்... திக்கற்றோருக்கு நீதி வழங்குபவர்களும்... கைம்பெண்ணுக்காக வழக்காடுபவர்களும்... (எசா 1:17) ஆளப்பிறந்தால் வாழத் தகுதியானது நம் நாடு!
ஆயினும்,
‘எங்கள் மக்களுக்குக் கச்சேரிதான் முக்கியம்
கஞ்சிக்
கலயமல்ல. அதனால்தான் நாங்கள்
வார்த்தை
இலைகளில் வாக்குறுதிச் சோற்றை
வாரி
வழங்கும் வள்ளல்களுக்கே வாக்களிக்கிறோம்...
அவர்கள்
வெற்றி பெறுகிறார்கள்;
நாங்கள்
தோற்றுப் போகிறோம்!
தோற்பதற்கான
காரணம்...
பொய்யான
கவர்ச்சிக்குப் பொன்னாடை போர்த்துகிறோம்...
போலிகளின்
பேச்சுக்குப் புகழாரம் சூட்டுகிறோம்...
கடமைக்கும்
சேவைக்கும் கல்லறையைக் கட்டுகிறோம்...
ஊழலுக்கு
விழா நடத்தி ஊர்வலத்தைக் கூட்டுகிறோம்...’
என்று எங்கோ படித்தது நம் நினைவுக்கு வருகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்