news-details
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 06, 2025, தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 43:16-21; பிலி 3:8-14; யோவா 8:1-11 - இரக்கமுள்ள இறையன்பு நமக்காகக் காத்திருக்கிறது!

இறந்துபோன என் தாத்தா கத்தோலிக்கர் அல்லர்; அவர் விண்ணகத்திற்குப் போவாரா?” என்ற கேள்வியைச் சீனாவைச் சேர்ந்த எய்டென் என்ற ஒரு சிறுவன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியிருந்தான். அச்சிறுவனின் கேள்விக்கு, ‘அர்ஸ் நகரின் வழிகாட்டிஎன்று புகழப்பெறும் புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் சுட்டிக் காட்டி திருத்தந்தை பதிலளித்தார்.

ஒருநாள் புனித வியான்னியைத் தேடி வந்த ஒரு பெண், தன் கணவர் பாலத்தின் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறினார். அவர் செய்த பாவத்தால் கட்டாயம் நரகத்திற்குத்தான் சென்றிருப்பார் என்றெண்ணிக் கதறி அழுதார். அப்போது, புனித வியான்னி அப்பெண்ணிடம், “மகளே, அந்தப் பாலத்திற்கும் ஓடுகின்ற ஆற்றுக்கும் இடையே இறைவனின் இரக்கம் நிறைந்திருக்கிறது. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்என்று கூறி அவரை அமைதிப்படுத்தி அனுப்பினார்.

எங்கும் நிறைந்திருப்பது இறை இரக்கம்; எச்சூழலிலும் எவ்வேளையிலும் எல்லாரையும் காக்கக்கூடியது, இறைவனின் இரக்கம். எங்கே இரக்கம் உள்ளதோ அங்கே இறைவன் இருப்பார். இரக்கம் இல்லாத இடத்தில், இறைவனுக்கும் இடமில்லை. இறைவனின் பெயர் இரக்கம்; அவரது அடையாள அட்டை இரக்கம். இரக்கம் என்பது தன்னிலேயே ஒருவரை முழுமை அடையச் செய்வதில்லை; மாறாக, அடுத்தவரைத் தேடிச்சென்று, அவரை வரவேற்று அரவணைப்பதில்தான் இரக்கம் முழுமைகொள்கிறது.

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வாசகங்கள், ஒரு குழந்தையை அரவணைத்துப் பாதுகாக்கும் பெற்றோரைப்போல, இறைவனின் இரக்கம் நம்மை அரவணைத்துப் பாதுகாக்கிறது எனும் சிந்தனையைச் சுமந்து வருகிறது.

இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேலின் புதிய விடுதலைப் பயணத்தைப் பற்றி உரைக்கிறது. இஸ்ரயேலைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்தவர் கடவுள். ஆனால், அவர்கள் கடவுளைப் புறக்கணித்ததால் பல நாடுகளுக்குக் கடத்தப்பட்டார்கள். கீழ்ப்படியாத தம் மக்களை ஆண்டவர் தண்டித்தார். “துன்பமெனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்தார் (எசா 30:20). ஆனாலும், ஆண்டவர் அவர்களை முழுமையாக அழியவிடவில்லை. இக்கட்டான நேரங்களிலும் அவர்களுக்குக் கற்பித்து அவர்களை வழிநடத்தினார். தாம் முன்னின்று நடத்த இருக்கும் இந்தப் புதிய விடுதலைப் பயணம் அருங்குறிகளால் எகிப்திலிருந்து இஸ்ரயேலரை மீட்டுவந்த முதல் விடுதலைப் பயணத்தைப் போலவே (விப 14) சிறப்பானதாக இருக்கும் என்கிறார். கடவுள் இஸ்ரயேலைத் தேர்ந்தெடுத்து அன்பு செய்தபோதும் அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தவில்லை; மாறாக, அவருக்கெதிராகப் பாவம் செய்தனர். அந்த நிலையிலும் கடவுள் அவர்களைக் கைவிடவில்லை; காரணம், அவர் அவர்கள்மேல் கொண்டிருந்த இரக்கம்!

இன்றைய இரண்டாம் வாசகம், பவுல் வாழ்வில் நடந்த மிகப்பெரிய மாற்றத்தைப் பற்றிக் கூறுகிறது. பவுல் தனக்குள் நிகழ்ந்த மனமாற்றம் என்பது தனது உயர்வான வளர்ப்பு, குடும்பப் பின்னணி, நாடு, மரபுவழி உடைமை, பாரம்பரிய நம்பிக்கை, செயல்பாடு, அறநெறி வாழ்வு ஆகிய சிறப்புப் பண்புகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இறைவனின் அளப்பரிய இரக்கத்தை முன்வைத்தே நிகழ்ந்தது என்கிறார் (பிலி 3:4-7). எனவேதான், ‘கிறிஸ்துவைப் பற்றிய அறிவே இவ்வுலக அனைத்துச் சிறப்புகளைவிட மேலான ஒன்றுஎன்று அவரால் உறுதிபடக் கூற முடிந்தது.

இன்றைய நற்செய்திப் பகுதியில், தம் அன்புத் திட்டத்தில் யாரையும் ஒதுக்குவதற்கு விரும்பாத இயேசுவின் இரக்கம் மிகுந்த இதயத்தை நம்மால் உணர முடிகிறது. ஒலிவ மலையில் இரவு முழுவதும் தாம் அனுபவித்த இறையனுபவத்தை (8:1) அதிகாலையில் தம் மக்களுக்குக் கொடுக்க கோவிலுக்கு வருகிறார். காலையிலேயே விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்து ஒரு வழக்கை ஆரம்பிக்கின்றனர் மறைநூல் அறிஞரும் பரிசேயரும். இயேசுவை எப்படிச் சிக்க வைக்கலாம் என இவர்கள் தூங்காமல் இரவெல்லாம் சதித்திட்டம் தீட்டியிருப்பார்கள் போலும். இவர்களுடைய நோக்கம் மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுவது அல்ல; மாறாக, இயேசுவின்மீது குற்றம் காண்பதே (8:6). இயேசு இரக்கம் கொண்டு அப்பெண்மீது கல் எறிய வேண்டாம் என்று சொன்னால், அவர் மோசேயின் சட்டத்தை மீறுகிறார் எனக் குற்றம் சுமத்தலாம். ஒரு வேளை கல்லால் எறிந்துகொல்ல அனுமதித்தால் அவர் உரோமைச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் எனப் பழி சுமத்தலாம். காரணம், இயேசுவின் காலத்தில் மரண தண்டனை அளிக்கும் அதிகாரம் உரோமை அரசைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. எனவே, எப்படியேனும் இயேசுவைச் சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெண்ணைப் பகடைக்காயாய் அழைத்து வருகின்றனர்.

இறைமகனின் இரக்கத்திற்கும் பரிசேயரின் வன் முறை நிலைகளுக்கும் இடையே நிறுத்தப்பட்ட அந்த அபலைப் பெண்ணைக் கனிந்த இதயத்தோடு இயேசு பார்க்கிறார். பொதுவெளியில் ஒரு பெண்ணை நிறுத்தி அவரது அறநெறியை விவாதிக்க விரும்பாத இயேசு அமைதியோடுகுனிந்து விரலால் தரையில் எழுதிக் கொண்டிருக்கிறார் (8:6). இது இயேசு, பரிசேயர் தொடுத்த வழக்கில் ஈடுபாடு காட்டவில்லை எனப் புரிந்துகொள்ளலாம் அல்லது மாசுபட்ட ஆண் வர்க்கத்தை உற்றுநோக்க விரும்பவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், ஆணாதிக்கக் கோர முகம்கையும் மெய்யுமாகப் பிடிபட்ட (8:4) இவளை மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் (லேவி 10:10; இச 22:22); ‘நீர் என்ன சொல்கிறீர்?” (8:5) என்று இயேசுவிடம் தொடர்ந்து கேட்கவே, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்என்று இயேசு பதில் கூறுகிறார்.

இயேசுவின் இந்தப் பதில் பரிசேயருக்கும் மறைநூல் அறிஞருக்கும் பேரிடியாக விழுந்தது. இந்த ஒற்றை வாக்கியம் குற்றம் சுமத்த வந்த பரிசேயரையும் மறை நூல் அறிஞரையும் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றியது. தண்டிக்கத் துடித்தவர்கள் இப்போது தண்டிக்கப்பட வேண்டியவர்களாயினர். குற்றம் சுமத்தியவர்கள் இப்போது குற்றவாளியாகிப் போயினர். “உங்களில் யார் தான் குறையின்றி வாழ்கிறீர்கள்? நீங்கள் அனைவருமே குறையுள்ளவர்கள்தாம். எனவே, குறைகளில் உங்கள் கவனத்தைச் செலுத்தாமல், நல்லது செய்வதில், வீழ்ந்து கிடப்போரைத் தூக்கி எழுப்புவதில் கவனம் செலுத்துங்கள்எனச் சொல்லாமல் சொல்கிறார் இயேசு.

முதியோர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அனைவரும் சென்றுவிடவே, இறுதியில், அங்கு நின்றது இயேசுவும் அப்பெண்ணுமே! அதாவது, இரக்கமும் துன்பமும் மட்டுமே தனியாக நின்றன. இந்நிகழ்வு பற்றி புனித அகுஸ்தின் விளக்கும்போது, இறுதியில்இரக்கத்தின் இயேசுவும் இரங்கத்தக்க அந்தப் பெண்ணும்தனியாக (இலத்தீனில்  Misecordia et misera) இருந்தனர் என்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு எந்த ஒரு கடுமையான சொல்லையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, இரக்கமும் அன்பும் மட்டுமே அவரிடமிருந்து வெளிப்பட்டன. இயேசு அந்தப் பெண்ணிடம், “அம்மா, நானும் தீர்ப்பு அளிக்கவில்லை; நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர் (8:11) என்று கூறி அப்பெண்ணை அனுப்பிவிடுகிறார். ஒரு பாவியின் உள்ளத்தைத் தொடும் பேருண்மை இறைவனின் இரக்கமாகத்தான் இருக்கமுடியும். “கிறித்தவ இறைநம்பிக்கையின் பேருண்மை, இறை இரக்கம்; இறை இரக்கத்தை இறைஞ்சும் எல்லாருக்கும் அது இலவசமாக வழங்கப்படுகிறதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இறை இரக்கத்தை இறைஞ்சிய விபசாரத்தில் பிடிபட்ட பெண், நம்பிக்கையோடு தனது எதிர்காலத்தை நோக்கவும், புதிய வாழ்வைத் தொடங்கவும் இயேசு உதவுகிறார். இனி இப்பெண்ணிற்குப் பாவம் செய்வதற்கான விருப்பம் ஏற்பட்டாலும்கூட, இவர் ஒருமுறை இரக்கத்தை அணிந்துகொண்ட பின்னர், அந்த விருப்பம் இறையன்பால் வேறு திசையில் மாற்றப்பட்டு, இவர் தனது வாழ்வைப் புதுவிதமாக நோக்கவும் வாழவும் ஆரம்பிப்பார் என்பதில் ஐயமில்லை.

அன்பிற்குரியவர்களே, இறைவனின் இரக்கத்தை நம் வாழ்வில் எத்தனையோ முறை அனுபவித்திருக்கிறோம். அவரின் அன்பிரக்கமின்றி நம்மால் வாழ முடியாது. பிறர் குறைகளையே பெரிதுபடுத்தும் நம் இயல்பை, விரைவாகத் தீர்ப்பு வழங்கும் நம் இயல்பை எண்ணிப் பார்ப்போம். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன், நாம் எவ்வாறு காணப்படுகிறோம் எனக் கண்ணாடியில் முதலில் பார்ப்போம். நாம் தீர்ப்பிடப்பட விரும்பவில்லையெனில், நாம் பிறரையும் தீர்ப்பிடக்கூடாது. நாம் தொடர்ந்து மற்றவரைத் தீர்ப்பிட்டுக் கொண்டே இருந்தால், அதே அளவையுடனே நாமும் தீர்ப்பிடப்படுவோம். எனவே, மற்றவரைத் தீர்ப்பிடுவதற்குப் பதிலாக அவர்களுக்காக மன்றாடுவோம். தீர்ப்பு கடவுளுக்கு மட்டுமே உரியது. நம் தீர்ப்பு ஒருபோதும் ஆண்டவரின் தீர்ப்புபோல உண்மையாக இருக்காது, இருக்கவும் முடியாது; ஏனென்றால், நம் தீர்ப்பில் இரக்கம் குறைவுபடுகின்றது.

நிறைவாக, இரக்கத்தின் தூதுவர்களாக அழைக்கப்பட்டுள்ள நாம் தெளிவான அன்புச் செயல்கள் வழியாக, இறைவனின் இரக்கத்திற்குச் சான்றுகளாக மாறுவோம். நமது நிழல்கூட நன்மை செய்யட்டும்! நாம் செய்யும் இரக்கச் செயல்களால் இரக்கமிக்க கடவுளை முகம் முகமாய், இதயத்துக்கு நெருக்கமாய்ச் சந்தித்து உரையாடுவோம். நிபந்தனையற்ற இறைவனின் இரக்கம் நம் வாழ்வில் ஆற்றக்கூடிய செயல்களை எண்ணிப் பார்ப்போம். எதிர்நோக்கின் யூபிலி ஆண்டில் இறைவனின் இரக்கத்தை நோக்கித் திரும்பி வருவோம் (யோவே 2:12). நம் வாழ்வில் மாபெரும் செயல் புரிய இரக்கமுள்ள இறையன்பு நமக்காகக் காத்திருக்கிறது (திபா 126:2).