டாக்டர் சேவியர் வீட்டிற்குப் பத்து பேர் மட்டுமே வந்திருந்தார்கள்.
அனைவரும்
வந்தபின், தங்கை அமலி பிஸ்கட்டும், தேநீரும் வழங்கினாள். வந்தவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
டாக்டர்
கீழே உள்ள அவரது வீட்டுக் கிளினிக்கில், வந்திருந்த பேஷண்டுகளை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
யாழினியின்
பெற்றோர் சிரித்தபடி சேவியரின் மகள் விமலாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“என்ன பாப்பா, ஸ்கூல் போறியா?” என்று கேட்டாள் இந்திரா தேவி.
“இல்ல பாட்டி, இனிமேல் தான் போகணும்” என்றாள் குழந்தை.
“இங்கே உன்னை யார் பார்த்துக்கிறாங்க?” என்றாள் யாழினி.
“அப்பா ஆஸ்பத்திரிக்கு போயிருவார். பாட்டியும் அத்தையும் நல்லாப் பார்த்துக்குவாங்க” என்றாள்
விமலா.
“வெரிகுட், என்ன விளையாடுவே?” என்று கேட்டாள் இந்திரா தேவி.
“பக்கத்திலே இருக்கிற பசங்களோட ஓடி பிடிச்சு விளையாடுவேன். இப்பப் போய் விளையாடலாமா?” என்று சிரித்தாள் குழந்தை.
“இன்னைக்கு உனக்குப் பிறந்த நாள் விமலா. அதுக்கு நாங்க வந்திருக்கோம். இப்பப் போய் விளையாட முடியுமா?” என்று சிரித்தாள் யாழினி.
“சேவியர் இப்ப வந்திருவான். டாக்டர் இஸ்மாயில் குடும்பத்தோட வர்றாராம். அவங்க வந்ததும் இந்த பங்க்ஷனை நடத்திறலாம்” என்றாள்
அருளம்மா.
“இந்தப் படத்திலே இருக்கிறதுதான் டாக்டரோட சம்சாரமாங்க. அவங்க ரொம்ப அழகாய் இருக்காங்களே...” என்று கேட்டாள் வந்திருந்த ஒரு பெண்மணி.
“அவங்க எப்படிங்க இறந்தாங்க?” என்று ஆர்வமுடன் கேட்டார் கருணாகரன்.
அருளம்மா
கவலையுடன் “அதை இப்பப் பேச வேணாம், விமலா ஒரேயடியாய் அழத் தொடங்கி விடுவாள்”
என்றபோது டாக்டர் சேவியர் வந்துவிட்டார்.
சிறிது
நேரத்தில் டாக்டர் இஸ்மாயில், மனைவி பாத்திமா, மகன் இப்ராகிமுடன் வந்துவிட்டார்.
“உங்க அனைவருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் விமலாவோட பெர்த் டேக்கு வந்ததில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. இப்ப நிகழ்ச்சியைத் தொடங்கிடலாம்” என்றார்
சேவியர்.
வீட்டில்
அலங்காரமாய் தோரணம் தொங்கியது. பூக்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. மேஜை மேல் இருந்த கேக்கை சேவியர் விமலாவை வைத்து வெட்டினார்.
பிறந்த
நாள் பாடல் போடப்பட்டது. அனைவரும் ‘ஹேப்பி பெர்த் டே விமலா’ என்று கோரசாய் வாழ்த்தினர். கேக்
அனைவருக்கும் வழங்கப்பட்டது.
“அனைவருக்கும் மேல் மாடியில் மதிய விருந்து இப்ப தயாராய் உள்ளது. அங்கே போகலாம்” என்றார் சேவியர்.
“வாங்க, வாங்க” என்று அம்மா அருளம்மாவும் தங்கை அமலியும் மேலே கூட்டிப் போனார்கள்.
டாக்டர்
இஸ்மாயிலும் டாக்டர் யாழினி குடும்பத்தாரும் கீழே பேசிக் கொண்டிருந்தார்கள். டாக்டர் சேவியர் குழந்தைக்குச் சாப்பிடக் கொடுத்தபடி உள்ளே இருந்தார்.
“ஆமா டாக்டர், இந்த சேவியரோட சம்சாரம் எப்படி இறந்தாங்க? எவ்வளவு அழகாய் இருக்காங்க. பாவம், இந்தக் குழந்தையை விட்டுட்டு அந்தம்மா போயிருச்சே, பாவம் டாக்டருக்குப் பெரிய சிரமம்தான்’ என்றார்
கருணாகரன்.
“அதை சேவியர் அம்மா வந்ததும் கேட்டுக்கங்க. நாங்க கிளம்புறோம்” என்று
புறப்பட்டார் டாக்டர் இஸ்மாயில்.