புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் பேச்சாளருமான டாடு ஹென்றி (Todd Henry) ஒருமுறை தனது பேச்சைக் கேட்பதற்காக அரங்கத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து, “இந்த உலகிலே மிகவும் செல்வச் செழிப்பான இடம் எது?” என்று கேட்டார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து, “அரபு நாடுகளில் பெட்ரோலியம் இருக்கும் நிலம்தான் மிகவும் செல்வச் செழிப்பான நிலம்” என்றார். மற்றுமொருவர் எழுந்து, “உலகிலேயே அதிக செல்வச் செழிப்பான நிலம் ஆப்பிரிக்கக் காடுகளில் உள்ள வைரச்சுரங்கம்” என்றார். மூன்றாவதாக ஒரு நபர் எழுந்து, “உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்பான நிலம் கல்லறைதான்” என்றார்.
இந்தப்
பதிலைச் சற்றும் எதிர்பார்க்காத ஹென்றி, “உலகிலேயே செல்வச் செழிப்பான நிலம் கல்லறைதான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்குப் பதில் கூறிய மூன்றாமவர், “ஒவ்வொரு மனிதரும், தான் வாழும்போது உயர்ந்த இலட்சியங்களோடும் தனித்துவமான திறமைகளோடும் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பாராத சூழலில் இறக்கும்போது அவர்களது கனவுகளும் சிந்தனைகளும் உயர்ந்த இலட்சியங்களும் திறமைகளும் செயல்வடிவம் பெறாமலேயே அவர்களோடு கல்லறையில் புதைக்கப்பட்டு விடுகின்றன. ஆகவே, கல்லறையில் வெறும் உடல்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக, அவர்களின் நிறைவேறாத இலட்சியங்களும் எண்ணங்களும் திறமைகளும்தான்” என்றார்.
இந்த
வியப்பான பதிலின் அடிப்படையில் ஹென்றி எழுதிய புகழ்பெற்ற நூல்தான் ‘வெறுமையாய் இறப்போம்’
(Die Empty) என்பதாகும்.
ஒருவர் இறப்பதற்கு முன்னர் தன்னிடம் உள்ள நன்மைகளையும் திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்தி விட்டு, வெறுமையாய் இறக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.
கிறிஸ்து
உயிர்த்து விட்டார்! இச்செய்தியை அறிவிப்பதில் எத்துணை மகிழ்ச்சி! கிறித்தவம் கொண்டாடுகின்ற திருவிழாக்களிலெல்லாம் முதன்மையான, தலைசிறந்த விழா கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா! ஏனெனில், அது கிறித்தவ நம்பிக்கையின் திருவிழா! கிறிஸ்துவின் உயிர்ப்பே நமது நம்பிக்கையின் ஆணி வேர், அடித்தளம் மற்றும் நமது வாழ்வின் எதிர்நோக்கு. இறைமகன் மனிதனாகப் பிறந்து, இறுதிவரை தாழ்ச்சி எனும் பாதையைப் பின்பற்றி, நம்மை முற்றிலுமாக அன்பு செய்த இயேசு வெறுமையாய் இறந்தார்; வெற்றியோடு உயிர்த்தார். அவரைப்போல நாமும் வெறுமையாய் இறக்கவும் வெற்றியோடு உயிர்க்கவும் அழைக்கப்படுகின்றோம்.
பழைய
ஏற்பாட்டுக் காலத்திலிருந்தே பெருவாரியான யூத மக்கள் உயிர்த்தெழுதல் உண்டு என்று நம்பி வந்தனர். ஆனால், சதுசேயர் என்ற ஒரு பிரிவினர் மட்டும் இதில் எந்த நம்பிக்கையும் கொள்ளவில்லை (மத் 22:23). இயேசுவின் உயிர்ப்பின் நிகழ்வு அவரை ஆழ்ந்து நம்பினோருக்குப் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. ஆண்டவரின் உயிர்த்தெழுதல், நம்மை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல், நமது நம்பிக்கையை அடிக்கடிச் சிறைபிடிக்கும் கல்லறைகளின் கல்லை அகற்றுவதற்கும், எதிர்காலத்திற்கான முழு நம்பிக்கையுடன் முனைந்து முன்னேறுவதற்கும் உதவுகிறது. அவர் நம்மைக் கைவிடாமல் எப்போதும் நம்முடன் இருக்கிறார். மரணத்தை வென்றவர் நமக்கு ஆற்றலைத் தருகின்றார். இதுவே நம் நம்பிக்கை. இறைவனுக்கு நம் உள்ளத்தைத் திறக்கும்போது, இறைவன் நமக்கு வழங்கும் கொடையே கிறித்தவ நம்பிக்கை. எனவே, கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் உச்ச உண்மையாக உயிர்ப்பு திகழ்கிறது.
இறையியலாளர்
மற்றும் வரலாற்று ஆய்வாளர் மட்டுமன்றி, எந்த ஒரு கிறித்தவரும் இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை உணரவும் நம்பவும் ஏற்றதாக இருக்கக்கூடிய இருபெரும் அனுபவங்கள்: 1. வெறுமையான கல்லறை (மத் 28:6; மாற் 16:6; லூக் 24:5; யோவா 20:2,6,7), 2. திருத்தூதர்களின் வியப்பூட்டும் உயிர்ப்பு அனுபவங்கள்.
உண்மையைப்
பேசியதற்காக, வாழ்வைக் கொடுத்ததற்காக, வாழும் வழியைக் காட்டியதற்காக இயேசு கொல்லப்பட்டார். தீமையின், அநீதியின், பாவத்தின் சக்திகள் அனைத்தும் சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால், இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார்; இறந்த மூன்றாம் நாள் வெற்றி வீரராய்க் கல்லறையிலிருந்து உயிரோடு வெளியே வந்தார். தம்மோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த தம் சீடருக்குத் தோன்றி அவர்களோடு அவர் உரையாடினார்; உணவு உட்கொண்டார். இயேசுவின் உயிர்ப்பிற்கான முதன்மையான அடையாளம் வெறுமையான கல்லறையே.
பெண்கள்
நம்பத்தகுந்த சாட்சிகளாக எதற்கும் கருதப்படாத சூழலில், ‘அவர்கள் வெறுமையான கல்லறையைப் பார்த்தார்கள்’ என்று
நான்கு நற்செய்தியாளர்களும் எழுதுகின்றனர். மத்தேயுவும் மாற்குவும் இன்னும் துல்லியமாக, “அவர் இங்கே இல்லை; இதோ அவரை வைத்த இடம்”
(மாற் 16:6; மத் 28:6) என்று எழுதுகின்றனர். வியப்பூட்டும் வகையில், மரபுக்கு மாறாக, பெண்களின் சாட்சியத்தை நற்செய்தியாளர்கள் வரைந்திருப்பது, உண்மையிலேயே உயிர்ப்பு மறுக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை நமக்கு உணர்த்துகிறது. இயேசுவின் உயிர்ப்பின்போது, பெண்கள் வெறுமையான கல்லறை மற்றும் அவரின் உயிர்த்தெழுதலின் அனுபவத்தால் உடனடியாக மனமாற்றமடைந்தனர். “கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!” என்ற உயிர்ப்புச் செய்தியைச் சீடர்களிடமும் கூறினர். இயேசுவைக் காணச் சென்ற சீடர்களும் மகதலா மரியாவும் இயேசுவைக் கல்லறையில் காணவில்லை; மாறாக, வெறுமையான கல்லறையை மட்டுமே கண்டார்கள். இதுவே இயேசுவின் உயிர்ப்பு பற்றிச் சீடர்களுக்குக் கிடைத்த முதல் அடிப்படை அனுபவம்.
வெறுமையான
கல்லறை இயேசுவின் மண்ணுலக வாழ்வின் உச்சக்கட்டம் எனலாம். வெறுமை என்பது ஒன்றுமில்லாமை என்பதல்ல; மாறாக, இருந்தது அனைத்தையும் முழுமையாகக் கொடுத்ததன் நிறைவே வெறுமை. இயேசுவின் வாழ்வு முழுவதும் இந்த வெறுமை நிரம்பி இருந்தது. பிறப்பில்கூட இயேசு ஒரு வெறுமை நிலையிலேயே பிறந்தார். ஏனெனில், அவர் பிறக்கும்போது அவருக்குச் சொந்தம் என்று சொல்ல உறவோ உறைவிடமோ இல்லை! இருந்தவை வெறும் மாட்டுத்தொழுவமும், ஒரு தீவனத் தொட்டியும், உறவுகளாகச் சில ஆடு மேய்த்தவர்களும்தாம்.
இயேசு
இளைஞரான போதும் அவர் ஓரிடத்திலும் தங்கவில்லை. உண்மையாகவே பல ஊர்கள், கிராமங்கள்
என்று பயணித்தவர். கலிலேயா நாடு முழுவதும் பயணித்தவர். அவரது பயணமே அவரது பணியாகவும் வாழ்வுமுறையாகவும் இருந்தது. தம்மைப் பின்பற்ற விரும்பிய ஒரு மறைநூல் அறிஞரிடம், “நரிகளுக்கு... மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை”
(மத் 8:20) என்றார். இயேசு எங்குத் தங்கினார் என்று கூட தெரியாது. இயேசு வளர்ந்தபோதும் வெறுமை நிலையையே தக்கவைத்துக் கொண்டார். அவர் சிலுவை மரணத்திலும் வெறுமையையே அனுபவித்தார். பிறப்பிலும் தம்மைத் தாங்குவதற்கு உடைமைகளைக் கொண்டிருக்கவில்லை; இறப்பிலும் தம்மைத் தாங்குவதற்கு உடைமைகளைக் கொண்டிருக்கவில்லை. ஒன்றுமே இல்லாத வெறுமை நிலையில்தான் இயேசு இருகரம் விரித்துச் சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்தார். இயேசுவின் சிலுவை மரணமும் ஓர் அழகான வெறுமைதானே!
எனவே,
இயேசு பிறக்கும்போதும் வெறுமை; வாழும்போதும் வெறுமை; இறக்கும்போதும் வெறுமை; கல்லறையில் அடக்கம் செய்தபோதும் வெறுமை. மற்றொருவருக்காக வெட்டப்பட்ட கல்லறையிலே இயேசு அடக்கம் செய்யப்படுகிறார். இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் வெறுமையான கல்லறைதான். யோவானும் லூக்காவும் அக்கல்லறையில் யாரையும் வைத்ததில்லை என்று கூறுகின்றனர் (யோவா 19:41; லூக் 24:53). இது ஒரு புதிய கல்லறை; வெறுமையான கல்லறை; இதுவரை யாரும் அடக்கம் செய்யப்படாத தூய்மையான கல்லறை. வெறுமையின் வடிவம் தூய்மை!
இயேசுவின்
வெறுமை என்பது அவர் உடைமைகள் ஏதுமின்றிப் பிறந்தார், வாழ்ந்தார், இறந்தார் என்பதல்ல; மாறாக, அவர் தமது இறையாட்சிக் கனவின் செயல்பாடுகளை முழுமையாக நிறைவேற்றினார் என்பதுதான் பொருள். இயேசு கல்லறைக்குள் செல்லும்போது ‘எல்லாம் நிறைவேறிய’
மனத்தோடு சென்றார். இனி நிறைவேற்றுவதற்கு எதுவுமில்லை என்பது “எல்லாம் நிறைவேறிற்று” (யோவா
19:30) என்பதிலே அடங்கியிருக்கிறது. தம்மையே வெறுமையாக்கிய இயேசு, தாம் வாழ்ந்த கொஞ்ச காலத்திலேயே தமது அனைத்து உயர்ந்த சிந்தனைகளையும் நன்மைகளையும் நீதியையும் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் வாழ்வுபெற, வளம்பெற முழுமையாகக் கொடுத்து விட்டுச் சென்றார். ஆகவேதான் தமது இலட்சியப் பயணத்தில் அவர் சந்தித்த கொடிய வேதனைகளுக்குப் பரிசாக இறைத்தந்தை உயிர்ப்பு என்னும் உயரியப் பரிசை அவருக்குக் கொடுத்தார். மண்ணுலகில் தோன்றிய மனிதர்களுள் முழுமையாக, வெறுமையாக வாழ்ந்தவர் இயேசுவைத் தவிர வேறு எவருமிலர்.
நிறைவாக,
சில சிந்தனைகள்: இன்று நாம் கல்லறைக்குச் செல்லும்போது, நாம் நிறைவேற்றாத பற்பல கனவுகளோடும் இலட்சியங்களோடும்தான் புதைக்கப்படுகின்றோம். இதனால் நிறைவேற்றப்படாத அழகான இலட்சியங்கள் கல்லறைக்குள்ளே புதைக்கப்படுகின்றன. வாழும்போது நம்மிடம் உள்ள அன்பு, இரக்கம், மன்னிப்பு, நீதி, உண்மை போன்ற கிறித்தவப் பண்புகளையும் இந்தச் சமூகத்திற்கு முழுமையாகக் கொடுத்து விட்டு இறந்தால் ‘வெறுமையாக’
கல்லறைக்குச் செல்லலாம் அன்றோ!
எனவே,
ஆண்டவர் இயேசுவின் சொற்களை, செயல்களை, நன்மைத்தனத்தை எப்போதும் நினைவில் கொள்வோம். நாம் இறை இரக்கத்தால் புதுப்பிக்கப்படவும், இயேசுவால் அன்புகூரப்படவும், அவர் அன்பின் சக்தி கொண்டு நம் வாழ்வை மாற்றியமைக்கவும் உதவுவோம். சாவையே வாழ்வாக மாற்றிய உயிர்த்த கிறிஸ்துவிடம், பகைமையை அன்பாகவும், பழிவாங்குதலை மன்னிப்பாகவும், போரை அமைதியாகவும் மாற்றும்படி வேண்டுவோம். உயிர்த்த ஆண்டவரை அனைவரும் காண்பதற்கு நாம் உதவியாக இருப்போம். அனைத்தையும் கொடுத்துவிட்டு வெறுமையாக இறப்போம். வெற்றியோடு உயிர்ப்போம்!