கர்நாடகப் பிராந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (KRCBC) தலைவரும், பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான பீட்டர் மச்சாடோ, டாக்டர் இசபெல்லா செல்வராஜ் சேவியர் அவர்களை ஏப்ரல் 7 அன்று பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் (SC\\ST\\BC) பணிக்குழுவின் புதிய இணைச் செயலாளராக நியமித்துள்ளார்.
டாக்டர் இசபெல்லா பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக் குழுவில் இந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்பதால், இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதன் செயலராக இருந்த அருள்பணி. யாகப்பா அவர்களுக்குப் பதிலாக இணைச் செயலாளரான திரு. ஆல்பன்ஸ் ஜி. கென்னடி தற்போது இதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இப்பணியில் அமர்த்தப்படும் முதல் பொதுநிலையினர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
டாக்டர் இசபெல்லா செல்வராஜ் சேவியர் மனித உரிமைகளுக்காக எப்போதும் குரல் எழுப்புபவர். தார்வாடில் (Dharwad) இவர் நிறுவியுள்ள ‘சாதனா’ மகளிர் மற்றும் குழந்தைகள் நலச்சங்கம் மற்றும் மனித உரிமைகள் மையம் 2001-ஆம் ஆண்டிலிருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், மனிதக் கடத்தல், குழந்தைத் திருமணம், சுரண்டல் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. திறமைமிக்கக் கல்வியாளரான இவர் உளவியல், இந்தி, சமூகவியல் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டங்களும், வாஷிங்டன், D.C.-இல் ஆன்மிகம் மற்றும் தலைமைப் பணி குறித்து முனைவர் பட்டமும் (Ph.D.) பெற்றவர்.