news-details
தலையங்கம்
இன்று நீ! நாளை நான்... குறிவைக்கப்படும் சிறுபான்மையினர்!

இசுலாமியர்களின் சமூகப் பணிகளுக்குக் கொடையாக வழங்கப்படும்வக்புசொத்துகளை நாடு முழுவதும், மாநிலங்களில் உள்ளவக்பு வாரியங்கள்நிர்வகிக்கின்றன. இந்தவக்புசொத்துகளின் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின்வக்புசட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா, ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரம் அளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு மசோதா-2025’ என மறுபெயரிடப்பட்டு ஒன்றிய பா... அரசால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய, மாநிலவக்புவாரியங்களில் இசுலாமியர் அல்லாத உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும்; குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இசுலாத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே சொத்துகளைவக்புவாரியத்திற்குக் கொடையாக வழங்க முடியும்; ‘வக்புநன்கொடைக்கு முன்பாக நன்கொடையாளரின் பெண்  வாரிசுதாரர்களுக்குச் சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்; ரூபாய் ஓர் இலட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டும்வக்புஅமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட  புதிய ஆய்வறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக்குழு சமர்ப்பித்திருந்தது. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஒன்றிய அரசுவக்புசட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 2-ஆம் நாள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே, ஏறக்குறைய 12 மணி நேர விவாதங்களுக்குப் பின்னர் மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. அவ்வாறே, ஏப்ரல் 4-ஆம் நாள் அதிகாலை அந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இம்மசோதாவை இசுலாமிய அமைப்புகள் மட்டுமின்றி காங்கிரஸ், தி.மு.. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து  எதிர்த்து வருகின்றன. இம்மசோதா இசுலாமியர்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்றும், இது இசுலாமியர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; வரும் காலங்களில் மற்றச் சமூகத்தினர் மீதும் இதுபோன்ற தாக்குதலைத் தொடுக்க இந்த மசோதா முன்னுதாரணமாக அமையும் என்றும்ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கவனம் கிறித்தவர்களின் பக்கம் திரும்ப நீண்டகாலம் ஆகாது என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு. இராகுல் காந்தி, “இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் ஒரே கவசம் அரசமைப்புச் சட்டம் மட்டும் தான்; அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் ஒருங்கிணைந்த கடமைஎன்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கறுப்புத் தினமாகும்; ‘பெரும்பான்மை, ‘சனநாயகம்என்ற பெயரால் சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக இச்சட்டத்தைப் பா... கொண்டு வந்துள்ளதுஎன்று எதிர் வினையாற்றியுள்ளார் தொல். திருமாவளவன்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14, 25, 26, 300 () ஆகிய பிரிவுகளை மட்டுமல்லாமல், நாட்டின் சனநாயகம், மதச்சார்பற்றக் கட்டமைப்பின் அடித்தளமாக விளங்கும் முகப்புரை மாண்புகளையும் வெளிப்படையாகவே இம்மசோதா மீறுவதாகப் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மாநிலங்களவையில் 128 உறுப்பினர்கள் ஆதரவும், 95 நபர்கள் எதிராகவும், அவ்வாறே மக்களவையில் 288 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232  நபர்கள் எதிராகவும் வாக்களித்துள்ள இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

கிறித்தவ-இசுலாமிய சமூகத்தினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்படும் ஒரு திரைமறைச் செயலாகவே இச்சட்டம் பார்க்கப்படுகிறது. “இச்சட்டத் திருத்தத்தின் மூலம்வக்புசொத்துகளையும், சிறுபான்மையினரின் உடைமைகளையும் அபகரித்துப் பெரு நிறுவனங்களுக்கு வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருக்கிறதுஎன்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

இந்த வெறுப்பு அரசியலையும் அடக்குமுறைச் சட்டத்தையும் நீதி தேடும் அனைத்துச் சக்திகளுடன் இணைந்து அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்புக்குள் வலுவான போராட்டத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறதுஇச்சூழலில்வக்புதிருத்தச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப்பெறும் வரையில் அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்றும், இச்சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும் வரை போராட் டம் தொடரும் என்றும் அகில இந்திய இசுலாமியர் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

ஆயினும், ‘இம்மசோதா, சிறுபான்மைச் சமூகத்திற்குப் பயனளிக்கும் வரலாற்றுச் சீர்திருத்தம்என்றும், ‘வக்பு சொத்துகள் ஒருசில தனிநபர்களுக்காக அல்லாமல், அனைத்துத் தரப்பு இசுலாமியர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே இச்சட்டத்தின் நோக்கம்எனவும் பா..தெரிவிக்கிறது.

வக்பு வாரியங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல; அவை சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம்என்றும், ‘வக்பு சொத்துகளும் நிதியும், இசுலாமியர்களின் கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்; இதற்காகத்தான் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது; அதன்படி வக்பு வாரியம் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறதுஎன்கிறார் பா... தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா.

மத்தியில் பா... அரசு பொறுப்பேற்ற 2014-ஆம் ஆண்டு முதல் இசுலாமிய மக்களுக்கு எதிராகத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீரின் சிறப்புச் சலுகையைப் பறித்தது, பொது சிவில் சட்டம் எனும் வரிசையில் தற்போதுவக்புசட்டத் திருத்தமும் சேர்ந்துள்ளது. இதுபோன்ற அநீதி இசுலாமியர்களுக்கு மட்டும்தான் என்று எண்ணக்கூடாது. இன்று அவர்களுக்குநாளை மற்றச் சிறுபான்மையினருக்கும் என்பதே இதில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி!

நாளை கிறித்தவ, சீக்கிய, புத்த, சைன மதத்தினருக்கும் இந்த அநீதி இழைக்கப்பட மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ‘வக்புவாரிய நிர்வாகத்தில் இசுலாமியர் அல்லாதவரை நியமிக்கலாம் என்ற இச்சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வரும் பா... அரசு, இந்து கோவில்களில் அறங்காவலர்களாக ஓர் இசுலாமியரை நியமிக்க முன்வருமா? அப்படி நியமித்தாலும் இந்துகள் ஏற்பார்களா? என்பதை இவர்கள் அறியாமலா இருப்பார்கள்!

வக்புசட்டத் திருத்த மசோதா, சட்டம் ஆகியுள்ள இச்சூழலில், இச்சட்டம்தான் இசுலாமியர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனக் கருதப்படும் இவ்வேளையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிகழவிருக்கும் பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், குசராத் மற்றும் இமாச்சல் ஆகிய ஏழு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் இது எதிரொலிக்குமா? என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறதுஓரிரு மாநிலங்களில் பா...வுக்கு ஆதரவாக இச்சட்டம் அமைந்தாலும், பெருமளவில் பா...விற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள். இக்கணிப்பு மெய்ப்பட வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள். ஆயினும், வரும் அக்டோபரில் பீகாரில் நடைபெற உள்ள தேர்தலில் அது வெளிப்படும் என்றே  எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் அறவழியிலிருந்து மாறிவிடாமல் இருக்க வேண்டும்; தெளிந்த அறம், செம்மையான மனம், எல்லா உயிர்களுக்கும் அருளும் தன்மை ஆகியவற்றிலிருந்து பிறழ்ந்து நடந்தால் அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை; ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூது போன்ற எந்தத் தீய பழக்கமும் இருக்கக்கூடாது; எவர்மீதும் வன்மம் இல்லாத மனம் வேண்டும்; வன்மமே பிறர்மீது பகை கொள்வதற்குக் காரணமாக அமைகிறது; யாரிடமும் பகை உணர்ச்சி இல்லாமல் இருப்பவருக்கே புகழ் வளரும். அறிவார்ந்த அமைச்சர்களை அருகில் வைத்திருக்க வேண்டும்; அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும்; அதிகாரம் குவிந்திருக்கும் நிலையில் எல்லாரிடமும் சமமான அன்பு கொள்ள வேண்டும்; ஆட்சியில் இருக்கும் மன்னன் உடல் போன்றவன்தான், நாட்டு மக்களே உயிர் போன்றவர்கள்; ஆகவே, அனைவரிடமும் அருள் நிறைந்த மனத்துடன் அறத்திலிருந்து பிறழாமல் செயல்களை அவன் செய்தாக வேண்டும்எனும் கம்பனின் அறிவுரை இராமாயணம் கற்ற இவர்களுக்கு ஏனோ மறந்து போய்விட்டது!

இவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, “நேர்மையும் நீதியும் இருக்க வேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறதுஎன்று சுட்டுரைக்கும் சபை உரையாளரின் (3:16) வார்த்தைகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்