நாளை ஜெபமணி அம்மாவுக்கு ஐம்பத்து ஐந்தாவது பிறந்த நாள். எவ்வளவு வேலையாக இருந்தாலும், அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டுத் தன் அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பெங்களூருவிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் மகனும் மருமகளும்.
அன்றும்
அப்படித்தான்! அப்போதுதான் ஊரிலிருந்து வந்திருந்த மருமகள் ஷர்மிளா, “அத்தை! எப்படி இருக்கீங்க? வயது ஏற ஏற… உங்களுக்கு இளமை திரும்புதே!… உங்கள் இளமையின் இரகசியம் என்னவோ?” என்று கேட்டுக்கொண்டே… உணவு
மேசையில் தயாராக இருந்த காபியைத் தன் கணவரிடம் கொடுத்துவிட்டு, தான் மட்டும் ஃப்ளாஸ்கில் இருந்த சூடான வெந்நீரை ஒரு குவளையில் ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தாள்.
இதைக்
கவனித்த ஜெபமணி அம்மாள், “ஏம்மா ஷர்மி… காபி குடிக்கலையா?” என்றாள்.
“எனக்கு வேண்டாம் அத்தை” என்று கூறிய படியே… மேசையில் இருந்த மற்றப் பாத்திரங்களின் மூடியை ஒவ்வொன்றாகத் திறந்தாள் ஷர்மி.
“அத்தை, காலை டிபனுக்குத் தோசை, சட்னி, கேசரியா?” என்றாள்.
“ஆமாண்டிமா! கேசரி உங்க ரெண்டு பேருக்கும் பிடித்த இனிப்பாச்சேன்னுதான்...”
“சாரி அத்தை, நான் உங்ககிட்ட முதல்லயே சொல்லியிருக்கணும், மறந்துட்டேன்”… என்று
சொன்ன ஷர்மி மேலும் தொடர்ந்தாள்...
“அத்தை,… சென்ற மாதம் என்னைச் சிக்கன்குன்யா கடுமையாகத் தாக்கியது அல்லவா? அதன் பின்விளைவாக எனக்கு ஏற்பட்ட கை, கால், மூட்டு வலி மற்றும் ஜாயின்ட் பெயினுக்கு மருத்துவர் தொடர்ந்து சில மாதங்கள் கறி, மீன், முட்டை, கோழி போன்ற புரதச் சத்துமிக்க உணவுகளைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிட்டார். அதனால இது தவக்காலமாக இருந்தாலும், நான் இத்தகைய உணவுகளை ஒதுக்க முடியாமப் போயிடுச்சு! அதனால அதுக்குப் பதிலா நான் ரொம்ப விரும்பிக் குடிக்கிற காபியை நாற்பது நாள்களுக்குக் குடிக்கக்கூடாது என்றும், இனிப்பு வகைகளைத் தொடவே கூடாதுன்னும் முடிவெடுத்தேன். பிடித்ததைச் சாப்பிடாமல் ஒதுக்குவது மட்டுமல்ல தவம்! பிடிக்காததைச் சாப்பிடுவதும் தவ ஒறுத்தல்தான். அது
மட்டுமல்ல அத்தை, தவக்காலச் சிலுவைப்பாதையையும் நான் முழுக்க முழந்தாள்படியிட்டே செய்து முடிப்பேன். ஆனால், இப்போது கால்மூட்டு வலியால் அமர்ந்துகொண்டே செபிக்க மனம் ஒப்பவில்லை; அதனால வெள்ளிக்கிழமை மட்டுமே செய்யுற சிலுவைப்பாதையைத் தினமும் செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.
அப்புறம்
பொதுவா தவக்காலம் முழுவதும் நான் தவறாம காலைத் திருப்பலியில் கலந்து கொள்வது என்னோட வழக்கம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.… என்னோட உடம்பு பலவீனத்தால அதுவும் முடியல.…சுத்தபோசனம்,… ஒருசந்தி முழுக்க முழுக்க அனுசரிக்க முடியலை. எனவே, இதுக்கெல்லாம் பரிகாரமா…தொலைக்காட்சி, சீரியல், சினிமா, பொழுதுபோக்கு எல்லாவற்றையும் கொஞ்ச நாள் ஒதுக்கி வைக்க முடிவு செஞ்சிருக்கிற காலம்தான் என்னோட தவக்காலம்.
என்னால
காலைத் திருப்பலிக்குப் போக முடியலையே தவிர, தினமும் மாலைத் திருப்பலிகளில் கலந்துகொள்கிறேன். உண்ணாநோன்பு இருக்க முடிவதில்லை; அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசியைக் கருணை இல்லத்திற்குக் கொடுத்துவிட்டேன்.
அப்புறம்
மணிக்கணக்கா… நண்பர்களோட அலைப்பேசியில்
அரட்டை அடிக்க ரொம்பப் பிடிக்கும்;… இப்ப தேவையில்லா அரட்டைகளுக்கு ‘நோ’ சொல்லியாச்சு!
எல்லாத்துக்கும்
மேல குடும்பப் பிரச்சினையால ஐந்து வருடமா பேசாம இருந்த என் தம்பிகிட்ட நானே முன்வந்து பேசி சமாதானம் பண்ணி உறவைப் புதுப்பிச்சுகிட்டேன்” என்றெல்லாம்
அவள் சொல்லச் சொல்ல, எப்பொழுதுமே… தன்
மருமகள் ஷர்மிளாவின் நடை, உடை, பாவனைகளில் இருக்கும் நவீனத்துவத்தைக் கண்டு இரசிக்கும் ஜெபமணி அம்மாள்… இப்போது அவள் ஆன்மிகத்திலிருக்கும் நவீனத்துவத்தைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போனாள்!