பிப்ரவரி 11, 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பணி ஓய்வு அறிவிப்பில் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான 130 கோடி கத்தோலிக்கர்களில் நானும் ஒருவன். ஆயினும், அந்த அதிர்ச்சி நெடுநாள் நீடிக்காத வகையில், மார்ச் 13, 2013 அன்று இரவு 8:12 மணிக்கு ‘திருத்தந்தை பிரான்சிஸ்’ வடிவில் எளிமையும் தாழ்ச்சியும் துணிவும் தெளிவும் பணிவும் கொண்ட ஒரு வழிகாட்டியைத் திரு அவைக்குத் தந்த இறைவனுக்கு நன்றி கூறிய குரலொலியில் சேர்ந்தது எனது குரலும்தான்.
மகிழ்ச்சியில்
திளைத்த மக்கள் மெய்சிலிர்க்க, மாடத்தில் தோன்றிய வெண்புறா ‘பிரான்சிஸ்’ என்ற
பெயர் தாங்கி, தன் சிறகுகள் விரித்ததும் என் இதழ் செபித்தது; உலகோர் உள்ளங்களும் அவ்வாறே! மக்களின் ஆசி வேண்டி அவர் சிரம் தாழ்த்தியது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. “திரு அவையின் பயணத்தில், பிறரன்புடனும் சகோதரத்துவ உணர்வுடனும் நடப்போம்; ஒருவர் மற்றொருவருக்காகச்
செபிப்போம்; உலகிற்காகச் செபிப்போம்!” என்ற அவரின் முத்தான முதல் பதம், 130 கோடி கத்தோலிக்கர்களை மட்டுமல்ல, உலகோர் அனைவரின் இதயத்தையும் முத்தமிட்டது போலவே இருந்தது.
தென்
அமெரிக்க நாடான அர்ஜென்டினா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கால்பந்து விளையாட்டு. அத்தகைய சிறப்புப் பெற்ற அர்ஜென்டினா நாட்டில், 1936-ஆம் ஆண்டு, டிசம்பர் 17-ஆம் நாள் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, தனது 33 வயதில் சேசு சபை குருவாகி, 1992-இல் பியூனஸ் அயர்ஸ் உயர்மறைமாவட்டத் துணை ஆயராகவும், 1998-இல் அந்த உயர் மறைமாவட்டத்தின் பேராயராகவும், 2001-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களால் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டு, தனது 76 வயதில் உலகளாவிய கத்தோலிக்கத் திரு அவையின் தலைமைப் பணியாளராகப் பொறுப்பேற்றார்.
சேசு
சபை உறுப்பினர் ஒருவர் திருத்தந்தையானதும், ஐரோப்பியர் அல்லாதவர் திருத்தந்தையானதும் இதுவே முதல் முறை. கத்தோலிக்க இறை நம்பிக்கையில் ஆழமானவர், உறுதி கொண்டவர் என்பதையெல்லாம்விட, திரு அவையின் மீது அளப்பரிய பற்றுக் கொண்டவராகவும், மாபெரும் நம்பிக்கையாளராகவும், இரக்கம் நிறைந்த தந்தையாகவும் அவர் பயணித்தார் என்பதுதான் அவரின் தனிச்சிறப்பு. ஏழைகள்
மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர் “A passionate defender of the poor and dissenfranchised” என்று
அர்ஜென்டினா மக்களால் அழைக்கப்பட்டவர், திரு அவையின் தலைமைப் பொறுப்பிலும் அதை இறுதிவரை வாழ்ந்து காட்டியதால், உலக மக்களால் ‘ஏழைகளின் ஏந்தலாகவே’
போற்றப்படுகிறார்.
இவரது
சிந்தனை உயர்ந்தது; எண்ணம் பரந்தது; செயல்பாடுகள் சிறந்தது. 2001-இல் அனைவரும் அதிர்ச்சியடையும்படியாகக் கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, பியூனஸ் அயர்ஸில் உள்ள முனிஸ் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 12 எய்ட்ஸ் நோயாளிகளின் பாதங்களைக் கழுவி, அவர்களின் கால்களுக்கு முத்தமிட்டு, சமூகத்தில் நோயாளிகளும் ஏழைகளும் மறக்கப்படக்கூடாது என்று நினைவூட்டினார்.
சமூக
நீதிக்கொள்கைகளில் உறுதியாக இருந்த திருத்தந்தை பிரான்சிஸ், அகதிகளுக்கும் புலம்பெயர்வுக்கும் எப்போதும் தனது ஆதரவைத் தெரிவித்து வந்தார். ட்ரம்பின் முந்தைய ஆட்சியின்போது மெக்சிகோ மக்களின் புலப்பெயர்வுக்கு எதிராக அவர் சுவர் எழுப்பியபோது, உலகத் தலைவர்கள் மௌனித்தார்கள்; ஆனால், திருத்தந்தை பிரான்சிஸோ ஏதிலியரின் கூக்குரலாக வெளிப்பட்டார். ‘கட்டப்பட வேண்டியது சுவர்கள் அல்ல, பாலங்களே’
என இடித்துரைத்தார். போர் இல்லாத அமைதியான உலகுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த திருத்தந்தை, போரினால் துன்புறும் மக்களைத் தனது வேண்டுதல்களில் எப்போதும் நினைவுகூர்ந்தார். உலகில் அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இயேசுவின்
சீடனாக, இறைவாக்குரைக்கும் ஓர் இறைவாக்கினனாக, அநீதிகளைச் சுட்டிக்காட்டுவதிலும், தவறுகளை எடுத்துரைப்பதிலும், உண்மையை முழக்கமிட்டு அறிவிப்பதிலும் அவர் ஒருபோதும் தளர்ந்ததில்லை.
மனிதநேயப்
பண்பாளராக, ஏழைகளின் பங்காளனாக, இளையோரின் எழுச்சி நாயகனாக, ஏதிலியரின் உரிமைக் குரலாக, இயற்கையின் இனிய நேசனாக, இரக்கத்தின் தூதுவனாக, பெண்ணிய மாண்பு கண்ட பேராளுமையாக, திரு அவை வழிபாட்டு முறையில் சீர்திருத்தம் கண்ட சிற்பியாக, பல்லுயிர் நேயம்
கொண்டு உலகைக் காத்திட உலகோர் அனைவருக்கும் அழைப்பு
விடுத்த பொதுவுடைமைவாதியாக அறியப்பட்ட 21-ஆம் நூற்றாண்டின் மாபெரும் பேராளுமையாக வலம் வந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். அன்று கணியன் பூங்குன்றனார் முழங்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாட்டின் வழியில் ‘யாவரும் உடன்பிறந்தோர்’ என்று
முழங்கி உறவுச் சமூகத்தைக் கட்டியெழுப்பப் பேராவல் கொண்ட பொதுநலவாதி இவர்.
திரு
அவையின் நம்பிக்கை கோட்பாடுகளைக் காப்பதில் இரும்புக் கரமும், ஏழை எளிய மக்களை, ஒடுக்கப்பட்டோரை அரவணைப்பதில் இளகிய உள்ளமும் கொண்ட எளிமையும் தாழ்ச்சியும் நிறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ற நம்பிக்கையூட்டும் தலைவர் என்பதை எவராலும் மறுக்க இயலாது.
மேய்ப்புப்
பணி பற்றிய சிந்தனைகளையும் நடைமுறை எதார்த்தங்களையும் எளிமையையும் கற்றுக்கொள்ள இறைவன் தந்த மாபெரும் கொடையே இப்பேராளுமை! இவரின் சிந்தனையில் தெளிவு; செயல்களில் பணிவு; போதனையில் துணிவு இவை யாவரையும் பிரமிக்க வைத்தது என்றால் அது மிகையல்ல!
காலத்தின்
குறிப்பறிந்து அவர் திருவாய் மலரும் அமுத மொழிகள் தனிமனிதனை, சமூகத்தை, ஏன் இந்த உலகத்தையே தன்பால் திருப்பிப் பார்க்க வைத்தன. இவர் வழங்கிய மறையுரைகள், மூவேளைச் செய்திகள்,
பொதுச்சந்திப்புகள், சொற்பொழிவுகள், கடிதங்கள், செய்திகள், திருத் தூது மடல்கள், சுற்றறிக்கைகள், மேற்கொண்ட பயணங்கள், உலகோருக்கு வழங்கிய ‘Urbit et orbi’
எனப்படும் சிறப்பு ஆசிரும் செய்தியும் உலகோரின் கவனத்தை ஈர்த்தன. சாதாரண அடிப்படை உறவு நிலைகளை, கருத்தியலை எளிய நடையில் எடுத்துரைப்பதே இவரது தனிச்சிறப்பு. அது ஒவ்வொரு மனிதரையும் தங்கள் வாழ்வைப் புடமிட்டுப் பார்க்க வைத்தன.
“நற்செய்தியை நவிலவும், அமைதியை அறிவிக்கவும், நலந்தரும் செய்தியை உரைக்கவும்... வருவோரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன!” என்று உரைத்த எசாயாவின் கூற்று (52:7) இவரின் சொல்லிலும் செயலிலும் இறைவாக்குப் பணியிலும் முற்றிலும் ஒன்றித்திருக்கிறது.
இத்தகைய பொற்பாதங்கள் படைத்தோரை விண்ணகத்தில் இறைக்கூட்டம் வரவேற்பதைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகர்,
‘மின்னேர் அனைய பூங்கழல்கள்
அடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னேர்
அனைய மலர் கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்’ (50:1)
என்று
குறிப்பிடுகிறார். அதாவது, மின்னலையொத்த இறைவனின் அழகிய திருவடிகளை அடைந்தவர்கள் உலகச் செயல்பாடுகளைக் கடந்தார்கள். இறைவனின் திருப்பாதம் சென்றிருக்கும் அத்தகைய
விண்ணகவாசிகள் பொன்னொத்த மலர்கள் தூவி அவரை வழிபடுகின்றனர். அத்தகைய அருளைத் தனக்கு வழங்க வேண்டும் என வேண்டுகிறார். மேலும்,
‘வேண்டும் வேண்டும் மெய்யடியார்
உள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய்
அடியேன் இடர்களைந்த
அமுதே அருமாமணி முத்தே
தூண்டா
விளக்கின் சுடரனையாய்
தொண்ட னேற்கும்
உண்டாங்கொல்
வேண்டா
தொன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே’
(38:4)
என்று
வேண்டுகிறார். அதாவது, உன் அருளை நாடிய அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்து வைத்தாய். எண்ணில் பேரொளி தந்தாய்; சுடரொளி வீசும் உம்மைக் காணச் செய்தாய். இந்த விளக்கின் சுடரொளி என்றும் எரிய உமது அன்பைத் தவிர வேறொன்றும் எனக்கு வேண்டாம் என்று பாடுவது போல, நாமும் நம் திருத்தந்தைக்காக ‘இறைவா! உம் அடியார் இவர் உமது பேரின்ப வீட்டில் அணையா விளக்காக எந்நாளும் ஒளி வீச அன்பினால் முழுமையாய் ஆட்கொள்வீராக!’ என்று மன்றாடுவோம்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்