கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை 20-04-2025 அன்று உலகமே கொண்டாடிய வேளையில், தன்னைக் காண புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் குழுமி இருந்த மக்களுக்குத் தன்னுடைய திருக்கர ஆசிரை வழங்கி, ‘பாலஸ்தீனம், இஸ்ரயேல் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் அமைதி திரும்ப வேண்டும்; அதுவும் நீதியில் விளையக்கூடிய நிரந்தர அமைதியாய் இருக்க வேண்டும்’ என்று தன்னுடைய இறைவேண்டலை இறுதியாக இறைவனுக்கு அர்ப்பணித்த நிலையிலே, 21.04.2025 அன்று காலை 7:30 மணி அளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உயிர் இறைவனடி சேர்ந்ததை அறிந்து தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆழ்ந்த இறைவேண்டல் கலந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
கூட்டொருங்கியக்கப்
பாதையில் திரு அவையை அழைத்துச் சென்ற மிகப்பெரிய ஆளுமை திருத்தந்தை பிரான்சிஸ். இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அனைவரின் மனங்களுக்கும் இது வேதனை அளித்தாலும், அனைவரின் இதயங்களிலும் குடிகொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஏழை
எளிய மக்களுக்கும், புலம் பெயர்ந்து ஆதரவு தேடி வந்த மக்களுக்கும் ஆதரவு தந்தவர், அடைக்கலம் கொடுத்தவர். அகில உலகத்தையும் அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்தவரும் அவர். உலக அமைதி, சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமைக்கு முன்னுரிமை போன்ற இன்னும் பலவற்றில் புதிய சிந்தனைகளை விதைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.
மக்களின்
மனங்களை அறிந்தவன்தான் நல்லாயனாய், நல்ல தலைவனாய் இருக்க முடியும் என்பதைத் தன் வாழ்வில் வாழ்ந்து காட்டியவர். அவரது கனிவான சொற்களும், கள்ளமில்லாச் சிரிப்பும், அவரது அன்பின், இரக்கத்தின், எளிமையின் விழுமியங்களை எல்லாருக்கும் எடுத்துக்கூறின. கத்தோலிக்க மதத்தினுடைய தலைவர் என்ற அவருடைய
12 ஆண்டு கால உழைப்பானது உலகத்தின் கடைக்கோடி மக்களின் இதயத்திலும் கண்டிப்பாய் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவருடைய இழப்பால் அகில உலகக் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல; இன்னும் நல்ல பல உள்ளங்களும் கண்ணீரைக்
காணிக்கையாக்கினாலும்,
அவரது சான்று பகர்ந்த வாழ்வு, சரியான தலைமைத்துவம், எல்லாவற்றிற்கும் மேலாகத் தான் யாருடைய பதிலாளாய் இவ்வுலகில் வாழ்ந்தாரோ அதே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கை அனைத்திற்கும் நாம் கடவுளுக்கு நன்றி கூறுவோம். உயிர்த்த ஆண்டவருடைய கரங்களில் அவரது ஆன்மாவை ஒப்படைப்போம். இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்; நிலையான ஒளி இவர்மேல் ஒளிரட்டும்!
பேராயர் ஜார்ஜ்
அந்தோணிசாமி
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்