சுற்றி வாழும் அனைவராலும் கைவிடப்பட்ட சூழலில், அச்சம் மேலிடும்போது, தனிமையில் ஒருவர் நிற்கும்போது, மன அழுத்தத்தால் அழும்போது, வறுமை வாட்டும்போது ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுப்பார்க்கும் கேள்விகள்: ‘என்னைக் கைதூக்கி விடுபவர் யார்?’, ‘என் காயங்களுக்குக் கட்டுப் போடுபவர் யார்?’ என்பதுதான். இந்தக் கேள்விகளில் மறைந்திருக்கும் ஏக்கம்: “ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; எனக்குத் துணையாய் இரும்” என்பதுதான் (திபா 30:10). இக்கேள்வியும் மன்றாட்டும் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்புக்குப்பின் சீடர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மையம் கொண்டன.
கல்வாரிக்
கொடுமைகளுக்குப்பின் சீடர்களின் வாழ்நிலை, அச்சமும் விரக்தியும் நிறைந்ததாகவே இருந்தது. தங்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் பொய்த்துப்போனதாக எண்ணினர். உரோமையருக்கும் யூதர்களுக்கும் அச்சப்பட்டுக் கதவுகளை மூடி, தங்களையே பூட்டி வைத்துக்கொண்டனர். “ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்” (திபா
4:6) என்பதுபோல வேண்டிக்கொண்டனர். இந்த நிலையில்தான் உயிர்த்த ஆண்டவர் வெவ்வேறு சீடர்களுக்கு, வெவ்வேறு இடங்களில் தோன்றுகின்றார்.
பல
வழிகளில் காயப்பட்டிருந்த தம் சீடர்களை இயேசு தேடிச்சென்று குணமாக்கிய நிகழ்வுகளில் ஒன்றுதான் இன்று நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடுகளின் நேரத்தில் இயேசுவை விட்டுச் சீடர்கள் விலகிச் சென்றிருந்தாலும், கல்வாரி இயேசு கருணையோடு அவர்களை அண்டிச் சென்று ஒரு தாயைப்போல உணவூட்டுவதைக் காண்கின்றோம்.
சென்ற
வார நற்செய்தியில் சந்தேகத்துடன் போராடிப் புண்பட்டிருந்த தோமாவை உயிர்த்த இயேசு சந்தித்து நலமாக்கிய நிகழ்வைச் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக ‘இயேசுவை எனக்குத் தெரியாது’
என்று மறுதலித்த பேதுருவின் மனக்காயங்களை உயிர்த்த இயேசு குணமாக்கும் நிகழ்வை இன்று சிந்திக்கின்றோம்.
பல
சீடர்கள் இயேசுவை விட்டு விலகிச் சென்றபொழுது பன்னிரு சீடரின் சார்பாகப் பேதுரு ஒருவரே “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன”
(யோவா 6:68) எனத் தம் பற்றுறுதியை முழுமையாக வெளிப்படுத்துவார். ஆனால், அவரே இப்போது மற்றச் சீடர்களைப் பார்த்து, தான் மீன்பிடிக்கப் போவதாக அறிவிக்கிறார். உடனே தோமா, நத்தனியேல், யாக்கோபு, யோவான், மேலும் இரு சீடர்களும் சேர்ந்து ‘நாங்களும் உம்மோடு வருகிறோம்’
என்று கூறிப் படகில் ஏறுகிறார்கள் (21:3).
“இனி நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்”
(மத் 4:19; மாற் 1:17; லூக் 5:10) எனும் இயேசுவின் அழைப்பைத் தங்களால் தொடர முடியவில்லையே என்ற மனக்காயங்களோடும், ‘இயேசுவை எங்களுக்குத் தெரியாது’
என்று மறுதலித்தக் குற்றப்பழியோடும், எந்த மக்களைப் பிடிப்பதற்காக அழைக்கப்பட்டோமோ அவர்களே தற்போது தங்களைப் பிடித்து உரோமையர் கையில் ஒப்படைக்கத் தயாராகிவிட்டார்களே என்ற மனவேதனையோடும் சீடர்கள் தங்கள் பழைய வாழ்வைத் தேடிச்செல்கிறார்கள். ஆனால், அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில் சந்தித்தது ஏமாற்றமே! அன்று இரவு முழுவதும் அவர்கள் முயன்றும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை (21:3). யோவான் கூறும் ‘இரவு’ அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்வுக்குச் சென்ற அந்த நிலையையும் சேர்த்துக் குறிக்கிறது.
தங்கள்
பழைய வாழ்விலும் ஏற்பட்ட ஏமாற்றத்தால் உடைந்துபோன சீடர்களை மீண்டும் ‘மனிதர்களைப் பிடிப்பவர்களாக’ இயேசு
மாற்றுகிறார். அங்கே வியக்கத்தக்க முறையில் ஏராளமான மீன்கள் கிடைத்தது. இயேசுவை அவர்களுக்கு அடையாளப்படுத்தியது. அளவுக்கு அதிகமான இரசம் (2:6), அளவுக்கு அதிகமான தூய ஆவி (3:34), அளவுக்கு அதிகமான வாழ்வு தரும் தண்ணீர் (4:14; 7:37), அளவுக்கு அதிகமான அப்பம் (6:11) அளவுக்கு அதிகமான நிலைவாழ்வு (10:10) ஆகியவற்றின் ஊற்றாகிய இயேசுவே அதிகமான மீன்பாட்டிற்குக் காரணம் என அவர் கண்டுகொள்கிறார்.
இயேசுவின்
ஒற்றை வார்த்தையால் படகுகள் மூழ்கும் அளவுக்கு அதிகமான மீன்கள் கெனசரேத்து ஏரிக்கரையில் கிடைத்தது, பேதுருவின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. அதுதான்
அவரது முதல் அழைப்பு (லூக் 5:1-11). அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றியவர் அல்லவா அவர்! அந்நிகழ்வை அவரால் எப்படி மறந்திருக்க முடியும்? திபேரியக் கடலில் பேதுரு பெற்ற இந்த இறையனுபவம் ஏற்கெனவே அவர் கெனசரேத்து ஏரிக்கரையிலும் பெற்ற இறையனுபவத்தை நினைவூட்டுவதாக அமைந்திருக்கும்.
கெனசரேத்து
ஏரிக்கரையிலும் திபேரியக் கடலிலும் நடந்த இரு நிகழ்வுகளை இணைத்துச் சிந்திக்கும்போது, இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே உருவான ஓர் உறவின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. கெனசரேத்து ஏரியில் அளவற்ற மீன்பாட்டைக் கண்டதும் சீமோன் பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார்
(லூக் 5:8). திபேரியக் கடலில் கிடைத்த அளவற்ற மீன்பாட்டைக் கண்டதும், உடனே கடலில் குதித்து, இயேசுவை நோக்கி நீந்திச் செல்கிறார். கெனசரேத்து ஏரியில் தன்னை விட்டுப் போய்விடுமாறு வேண்டிக்கொள்ளும் பேதுரு, திபேரியக் கடலில் இயேசுவை நோக்கி விரைந்து செல்கிறார். கெனசரேத்து ஏரிக் கரையில் பேதுரு பெற்ற தன் அழைப்பை மீண்டும் உணர்கிறார். இந்தமுறை இயேசுவை விட்டு விலகிச் செல்ல மனமில்லாமல் இயேசுவை இறுகப் பற்றிப் பிடிக்கிறார். அதிலும் சிறப்பாக, பழைய நிலைக்குப் போகலாம் என்று நினைத்த பேதுருவை இன்னும் ஆழமாய் உறுதிப்படுத்துகிறார் இயேசு.
மும்முறை
இயேசுவை மறுதலித்த பேதுருவிடம் மும்முறை இயேசு “நீ என்மீது அன்பு
செலுத்துகிறாயா?” எனக் கேட்டு, மும்முறை அன்பு அறிக்கையிட வாய்ப்பளிக்கிறார்; அவரது மனக்காயங்களையும் போக்கிவிடுகின்றார். அதனால்தான் “அவர் தம் காயங்களால் நாங்கள் குணமடைந்துள்ளோம்” (1பேது
2:24) எனப் பேதுருவால் அறிக்கையிட முடிந்தது. இச்சந்திப்பில், மன்னிப்பு என்ற சொல்லோ, எண்ணமோ இடம்பெறவில்லை. ஆனால், அங்கு அன்பு பறைசாற்றப்பட்டது; பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பரிமாற்றத்தில் மன்னிப்பு மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்து, பேதுருவை மூழ்கச் செய்தது. ‘கைகளை விரித்துக் கொடுப்பாய்’ என்பது
தன் தலைவர் இயேசுவைப் போலவே பேதுருவும் நற்செய்தியின் பொருட்டுத் தன் உயிரைக் கையளிப்பார். இயேசுவைப் போலவே பேதுருவும் சிலுவையில் அறையப்படுவார் என்பதைக் குறிப்பதாக அமைகிறது.
சீடர்களின்
வலையில் கிடைத்த மீன்களின் எண்ணிக்கை ‘153’ என்பது சிறப்புக் கவனம் பெறுகிறது. இதற்கு அறிஞர் பலர் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்தாலும், அவற்றுள் தூய எரோணிமுசு அளிக்கும் விளக்கம் சிறந்ததாகத் தெரிகிறது. அதாவது,
பண்டையக் கால உயிரியல் அறிஞரின் கணக்குப்படி மீன் வகைகள் 153. இந்த 153 மீன்களுள் எல்லா மீன்களும் அடங்கிவிடும். 153 என்பது அனைத்து மீன்களையும் உள்ளடக்கும் ஒரு முழுமைச் சொல். எனவே, 153 மீன்கள் வலையில் பிடிபட்டன என்னும் செய்தியின் வழியாகப் பிற்காலத்தில் எல்லா வகையான மனிதரும் திரு அவை என்னும் படகில் வந்து சேர்வர்; யாரும் விடுபட்டுப் போகமாட்டார்கள் எனப் புரிந்துகொள்ளலாம்.
எனவே,
திரு அவை அனைவருக்குமானது. விளிம்புநிலையினர், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றோர், குழந்தைகள், பிறக்காத சிசுக்கள், புதுமைப் பாலினத்தவர், இல்லவாசிகள் என எல்லாருமே திரு
அவையின் கரங்களில் உள்ளனர். ஆகவே, உயிர்ப்பின் மக்களாகிய நாம் எவரையும் புறக்கணிக்கக் கூடாது என்பது முதல் செய்தி. மேலும், நமது நற்செய்தி அறிவிப்புப் பணியில் துன்புறுதலும் கடவுளின் ஆசி என்பது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய மற்றுமொரு பாடம்.
நிறைவாக,
இரவெல்லாம் உழைத்தும் பயனேதும் காணாத சீடர்களுக்கு உயிர்த்த இயேசு, ஒரு தாயின் கனிவோடு உணவு தயாரித்துப் பரிமாறியது போல, பசியிலும் களைப்பிலும் காயப்பட்டிருக்கும் இந்த மனிதகுலத்திற்கு நாமும் உயிர்த்த இயேசுவின் இரக்கத்தையும் அரவணைப்பையும் வழங்கிடுவோம்.