திருப்பலி முன்னுரை
தவக்காலத்தின்
ஐந்தாம் ஞாயிறு மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் மன்னித்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவின்மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காகவே பல வினாக்களைத் தொடுக்கிறார்கள்.
“விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே கொடுத்தத் திருச்சட்டம்; நீர் என்ன சொல்கிறீர்?” என்று கையில் கற்களோடு நிற்கிறார்கள். பல நேரங்களில் மறைநூல்
அறிஞர் மற்றும் பரிசேயர்களைப் போன்று மற்றவர்கள்மீது குற்றம் சுமத்தவேண்டும், அவர்களைச் சிக்கவைக்க வேண்டும் என்பதற்காகப் பல வினாக்களைத் தொடுத்துக்கொண்டே
இருக்கிறோம். மற்றவர்களைத் தீர்ப்பிடுவதற்குப் பரிசேயரைப் போன்று கையில் கற்களோடும் வாயில் சொற்களோடும் காத்துக்கொண்டு இருக்கிறோம். இயேசு ஒருநாளும் எவரையும் தீர்ப்பிட்டதில்லை. நாமும் வன்மையான சொற்களை விடுத்து, மென்மையான சொற்களைப் பயன்படுத்துவோம். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் இயேசு, ‘ஏன் பாவம் செய்தாய்?’ என்று கேட்கவில்லை; மாறாக, ‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, இனி பாவம் செய்யாதீர்’ என்று
கூறுகின்றார். இன்று நம்மைப் பார்த்தும் ‘இனி பாவம் செய்யாதீர்கள்’ என்று
இயேசு கூறுகிறார். கடவுள் நம்மை நிபந்தனையில்லாமல் மன்னிப்பது போல, நாமும் பிறரை மன்னித்து, நல்லுறவுடன் வாழவும் வரம் கேட்டு இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசகம்
முன்னுரை
இன்றைய
முதல் வாசகத்தில் ஆண்டவர், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன்’
என்கிறார். நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், பிரச்சினைகள் போன்றவற்றைச் சந்திக்கும்போது வற்றாத வாழ்வு தரும் நீரோடையை நோக்கி ஆண்டவர் நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், ‘கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்’ என்றும், ‘கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்’ என்றும்
கூறுகின்றார். உலகச் செல்வங்களில் நாட்டம் கொள்ளாமல், உன்னதச் செல்வமாகிய இயேசுவைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1) அன்பின்
இறைவா! நீர் தேர்ந்துகொண்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும், இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைத் தொய்வின்றி எடுத்துரைக்கத் தேவையான அருள்வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2) இரக்கமுள்ள
ஆண்டவரே! நாங்கள் அனைவரும் இரக்கமுள்ளவர்களாக, அன்புள்ளவர்களாக, மன்னிப்பவர்களாக, கனிவுமிக்கவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றேம்.
3) பாசமுள்ள
ஆண்டவரே! நாங்கள் புறத் தோற்றத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, எம் அகத்திற்கும் கொடுத்து வாழவும், தூயவராகிய உம்மை தூய்மையான மனத்துடன் உட்கொள்ளவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4) அளவின்றி
எம்மை மன்னிக்கும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும், இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, எமது சொற்களால், வாழ்க்கையால் இயேசுவை அறிவிக்கவும், ஒவ்வொரு நாளும் இறை வார்த்தையைப் படித்து பலன் கொடுத்து வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.