news-details
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 13, 2025, திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 50:4-7; பிலி 2:6-11; லூக் 22:14-23:56 - கடவுள் ‘தேவையில்’ இருக்கிறார்!

பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் ஓர் இளைஞர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும்முட்டாள்கள்என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். ஒருமுறை அந்த இளைஞரின் கேலிகளைக் கேள்விப்பட்ட பங்குத்தந்தை அவரிடம் சென்று, “நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியுமா? உனக்கு அவ்வளவு துணிவு இருக்கிறதா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் அந்த இளைஞர் கோபமுற்று, “முட்டாள் சாமியாரே! எனக்கே சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்என்று அனைவரும் கேட்கும்படிக் கத்தினார்.

பங்குத்தந்தை அந்த இளைஞரிடம், “சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், ‘கிறிஸ்து எனக்காகச் சிலுவையில் இறந்தார்; ஆனால், அதைப்பற்றி எனக்குக் கவலையில்லைஎன்று உன்னால் கத்த முடியுமா?” என்று சவால் விடுத்தார். அந்தச் சவாலை ஏற்ற இளைஞர், பீடத்தை நெருங்கி வந்து உரத்தக் குரலில், “கிறிஸ்து எனக்காகச் சிலுவையில் இறந்தார்; ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லைஎனக் கத்தினார். பங்குத்தந்தை அவரிடம், “இன்னொரு முறை கத்துஎன்றார். இரண்டாவது முறையும் இளைஞர் கத்தினார். ஆனால், இம்முறை அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை இளைஞரிடம், “தயவுசெய்து, இறுதியாக ஒருமுறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு நீ போகலாம்என்றார். இம்முறை இளைஞர் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை; கண்களைத் தாழ்த்தினார்; கண்ணீர் வழிந்தோடியது.

இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர் சிறிது நேரம் அமைதியாக இருந்தபின் தொடர்ந்தார்: “அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதைச் சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்என்று கூறினார்.

தவக்காலத்தின் 6-ஆம் ஞாயிறைகுருத்து ஞாயிறுஅல்லதுபாடுகளின் ஞாயிறுஎனக் கொண்டாடுகிறோம். இன்று முதல் உயிர்ப்புப் பெருவிழா வரை உள்ள ஏழு நாள்களையும்புனித வாரம்என்று அழைக் கிறோம். புனித வார நாள்கள் கடவுள் நம்மை மீட்டு வெற்றி கொண்ட நாள்கள்! இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்னும் பாஸ்கா மறைபொருளைப் பொருள் உணர்ந்து கொண்டாடும் நாள்கள். ‘உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர், அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தியதன்...’ (யோவா 13:1) அடையாளமே இயேசு தம் சாவைப்பற்றி அறிந்த பின்னும் துணிவுடனும் வெற்றி ஆர்ப்பரிப்புடனும் எருசலேமுக்குள் நுழையும் இன்றைய நிகழ்வு.

ஆண்டவர் இயேசு எருசலேமில் நுழைந்தது முதல் சிலுவையில் அறையப்பட்டு இறக்கும் வரை இயேசுவின் பல தேவைகள் ஆங்காங்கே வெளிப்பட்டன. அந்தத் தேவையில் சிலர் இணைந்து கொண்டனர்; பலர் பிரிந்து சென்றனர். இயேசுவின் புனித தேவைகளில் நாமும் இணைந்துகொள்ள பாடுகளின் ஞாயிறு நம்மைப் பாசத்தோடு அழைக்கிறது.

கடவுள் அனைத்தையும் அறிந்தவர்; அனைத்தையும் கடந்தவர்; அனைத்தையும் படைத்தவர்; முழு ஆற்றல் கொண்டவர்; எல்லா இடங்களிலும் இருப்பவர்; அனைத்து நன்மைகளாலும் நிறைந்தவர்; தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருப்பவர்; முழுமையான நல்லவர். சின்னக் குறிப்பிடத்தில் கடவுளைப் பற்றிப் படித்த பாடங்கள் இவை. எல்லாவற்றையும் படைத்து, படைப்பின்மீது அதிகாரம் கொண்ட கடவுளுக்கு என்ன தேவை இருக்கிறது? அவர் எந்தத் தேவையும் அற்றவர். அவர் தருகிறவர், பெறுகிறவர் அல்லர்; எனினும், கடவுள் தேவையில் இருக்கிறார். The Lord is in need!

பல நேரங்களில் கடவுளின் தேவைகளில் நாம் இணைந்துகொள்ளாமல், நம்முடைய தேவைகளைக் குறித்தே நாம் கடவுளைப் பின்தொடர்கிறோம் என்பதுதான் உண்மை. இயேசுவும் ஒருமுறை தங்களுக்கு என்ன கிடைக்கும் என்னும் நோக்கத்தோடுதான் மக்கள் கடவுளைத் தேடுகிறார்கள் என்றே குறிப்பிட்டார் (யோவா 6:26). தம்மைத் தேடி வந்தவர்களை இயேசு ஒருபோதும் கைவிட்டதில்லை. இன்றைய நாளில் இயேசு எரிகோவை விட்டு எருசலேம் நோக்கிச் செல்லும் பயணத்திலும் வழியோரம் அமர்ந்திருந்த திமேயுவின் மகன் பர்த்திமேயுவுக்குப் பார்வை கொடுக்கிறார் (மாற் 10:47). நலம்பெற்ற அவர் உடனே இயேசுவைப் பின்தொடர்கிறார் (மாற் 10:52). இதை வியப்புடன் பார்க்கும் மக்கள் இயேசு தாங்கள் எதிர்பார்த்த ஒரு மெசியாவாக, ஒரு புதிய தாவீது அரசராக இருப்பாரோ என்றெண்ணிஓசான்னா!’ அதாவதுஎங்களை விடுவித்தருளும், ‘எங்களுக்கு உதவ வாரும்  என ஆர்ப்பரித்து முழக்கமிடுகின்றனர்.

எருசலேமில் தமக்கு நிகழவிருப்பவை அனைத்தையும் தெளிவுற தெரிந்த பின்பும் இயேசு துணிவுடன் மக்கள் பேரணியோடு நகரில் நுழைகிறார். இந்தப் பவனியில் இயேசு ஒலிவ மலையிலுள்ள பெத்பகு, பெத்தானியா (லூக் 19:29) எனும் ஊர்களுக்கு அருகில் வர, தம் இரு சீடர்களை அனுப்பி, கழுதைக்குட்டியை அவிழ்த்து வரக் கூறுகிறார். ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், “இது ஆண்டவருக்குத் தேவைஎனச் சொல்லுங்கள் (லூக் 19:31) என்கிறார்.

இந்தப் புனித வாரத்தில் தேவையில் இருக்கும் கடவுளுக்கு முதன்முதலில் உதவிட முன்வந்தது ஒரு கழுதைக் குட்டியே. கழுதை ஓர் அமைதியின், எளிமையின் அடையாளம். இயேசு கழுதையின்மேல் அமர்ந்து வரும்போது, மக்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே செல்கின்றனர். தரையில் விரிக்கப்பட்ட மேலுடைகளும், மரங்களிலிருந்து வெட்டித் தரையிலே பரப்பப்பட்ட மரக்கிளைகளும் இயேசுவுக்கு வாழ்த்தும் மரியாதையும் செலுத்துகின்றன.

இயேசுவின் இந்தப் பயணத்தில், இயேசுவைத் தீர்ப்பிடத் துடிக்கும் சமய மற்றும் அரசியல் தலைவர்கள், காட்டிக்கொடுக்க விரும்பிய யூதாசு, மறுதலிக்கும் பேதுரு, ஒரு மணி நேரம் விழித்திருக்க வலுவில்லாத சீடர்கள், ஆடையின்றித் தப்பி ஓடிய இளைஞர், நிர்வாணப்படுத்தும் படைவீரர்கள், ‘பரபாவையே விடுதலை செய்யும்எனக் கேட்கும் கூட்டத்தினர், ‘அவனைச் சிலுவை அறையும்என்று உரக்கக் கத்துபவர்கள், காறி உமிழ்பவர்கள், கன்னத்தில் அறைபவர்கள், கசையால் அடிப்பவர்கள், பொய்ச்சாட்சி சொல்பவர்கள், ஆணியால் அறைந்து முள்முடி சூட்டியவர்கள், ‘யூதரின் அரசரே வாழ்கஎன ஏளனம் செய்பவர்கள், கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்த பிலாத்து, கசப்புக் காடியைக் குடிக்கக் கொடுப்பவர்கள், இயேசுவின் ஆடையைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக்கொள்பவர்கள், ‘நீ மெசியா தானே! உன்னையும் எங்களையும் காப்பாற்றுஎனப் பழித்துரைத்த குற்றவாளி, இயேசு இறந்த பிறகும் விலாவில் ஊடுருவக் குத்துபவர்கள், ‘நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வாஎனப் பழித்துரைத்த வழிப்போக்கர்கள் எனப் பலரும் கடவுளின் தேவையில் இணைந்து கொள்ள மறுக்கின்றனர்.

அதேநேரத்தில், இயேசுவுக்காகப் பேச முடியாமல் மௌனியாய்ப் பயணிக்கும் சிலர், இயேசுவின் சிலுவையைச் சிறிது நேரம் சுமந்து சென்ற சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன், மாரடித்துப் புலம்பும் பெண்கள், ‘என்னை நினைவிற்கொள்ளும்என இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும் நல்ல கள்ளன், ‘இவர் உண்மையாகவே நேர்மையாளர்என்று கூறிய நூற்றுவர் தலைவர், தனது கல்லறையைத் தானமாய் அளித்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு, மறுப்பேதுமின்றிக் கழுதையைக் கொடுத்தவர், வெள்ளைப்போளமும் சந்தனத்தூளும் கொண்டு வந்த நிக்கதேம், மகதலா மரியா, குளோப்பாவின் மனைவி மரியா, சலோமி போன்ற பெண்கள், இறுதிவரை துணைநின்ற அன்னை மரியா மற்றும் அன்புச் சீடர் யோவான் போன்ற பலரும் கடவுளின் தேவையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.

நிறைவாக, இந்தப் புனித வாரத்தில் இயேசுவின் பாடுகளில் பங்கேற்கும் நாம், அவரின் தேவைகள் என்ன என்பதைச் சிந்தித்துச் செயல்பட அழைப்புப் பெறுகின்றோம். கெத்சமனி தோட்டத்தில் அவரோடு சேர்ந்து செபிக்க மூன்று சீடர்கள் தேவைப்பட்டனர். இரத்த வியர்வை வியர்க்கும்போது ஆறுதல் கூற வானதூதர் தேவைப்பட்டனர். சிலுவையைச் சுமக்கும்போது கூடவே இருந்து இலட்சியப் பயணத்தை நிறைவுசெய்ய அன்னை மரியாவின் உடனிருப்பு தேவைப்பட்டது. சிலுவையைச் சிறிது தூரம் தூக்கிச் சுமக்க சீமோன் தேவைப்பட்டார். பார்ப்பதற்கேற்ற அமைப்பும் விரும்பத்தக்க தோற்றமும் இல்லாத இயேசுவின் முகத்தைத் துடைக்க வெரோணிக்கா தேவைப்பட்டார். கல்லறையில் அடக்கம் செய்ய அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு தேவைப்பட்டார். இறுதியில் தம்முடைய அன்புத் தாயைப் பாதுகாப்பாய் ஒப்படைக்க யோவான் தேவைப்பட்டார்.

ஆம், ஆண்டவர் தேவையிலிருக்கிறார். ‘நான் தேவையில் இருக்கிறேன்என்று கூறியபோதுஇதோ, நான் வருகிறேன் ஆண்டவரேஎன்று கூறி ஒரு கழுதை முன்வந்தது. இயேசு தேவையிலிருப்பது அவரது பலவீனமோ அல்லது இயலாமையோ அல்ல; மாறாக, அவர் மனித இயல்பு (மனித உரு) எடுத்ததன் மகத்துவம் (யோவா 1:14). கடவுள் நிலையிலிருந்து மனுவுரு ஏற்று, நம்மில் ஒருவராய் வாழ்ந்து, நமக்காகவே இறந்த நம் மீட்பர் இயேசுவுக்கு, நீங்களும் நானும் தேவைப்படுகிறோம் என்பது நாம் பெற்ற பெரும்பேறு! இயேசுவின் தேவைகளில் இணைந்துகொள்ள முன்வருவோம். அவர் பாதையில் நம் கண்களைப் பதிப்போம்.