திருப்பலி முன்னுரை
உயிர்த்த
இயேசுவில் அன்பு உள்ளங்களே! ஆண்டவரில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு துணிவுடன் வாழ பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவைச் சாவு சீடர்கள் மத்தியில் பயத்தையும் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் உண்டாக்கியது. மனம் சோர்ந்துபோய் மீண்டும் தங்களது பழைய மீன்பிடித் தொழிலுக்குத் திரும்புகின்றனர். ஆனால், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களுக்குக் காட்சி கொடுத்து, நம்பிக்கையை அவர்கள் உள்ளத்தில் விதைக்கிறார். இயேசுவினுடைய உடனிருப்பும் ஆறுதலான வார்த்தைகளும் சீடர்களுடைய மத்தியில் நிறைந்த நம்பிக்கையைத் தருகின்றது. புதிய ஆற்றலுடன் நற்செய்தி அறிவிக்கத் தூண்டுகிறது. இயேசுவின் சீடர்களைப் போன்று இயேசுவை நாமும் அறிவோம், அனைவருக்கும் எடுத்துக்கூறுவோம். உயிர்த்த இயேசு வழங்கிய ஆன்மிகச் செல்வங்களான இறை நம்பிக்கை, அன்பு, உண்மை, நீதி, மன்னிப்பு போன்றவற்றால் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம். அகத்தில் ஆண்டவரின் ஆற்றலைப் பெற்றுத் துணிவுடன் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இயேசுவைக்
கண்ட திருத்தூதர்கள் “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்”
என்று கூறி ஆண்டவருக்குச் சாட்சி பகர்கிறார்கள்; இயேசுவின் திருப்பெயரை அச்சமின்றி அறிவிக்கிறார்கள். இயேசுவைப் பற்றி அறிவிப்பதால் வருகின்ற இன்னல்கள், இடையூறுகள் அனைத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றார்கள். இயேசுவின் திருப்பெயரை வாழ்க்கையால் அறிவிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இயேசுவின்
திருப்பெயரால் திருமுழுக்குப் பெற்ற நாம் அவரை ஆராதித்து வணங்க வேண்டும். நம் உள்ளத்தில் அன்றாடம் எழுந்தருளி வரும் இயேசுவையும், ஆலயத்தில்
நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்திருக்கும் இயேசுவையும் கண்டு அறிந்து, அன்பு செய்ய அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. உயிர்த்த
ஆண்டவரே! உமது மதிப்பீடுகளின்படி நாங்கள் வாழ்ந்து, உமது பணியை இன்னும் அதிகமான உத்வேகத்துடன் செய்வதற்குத் தேவையான
ஞானத்தைத் திரு
அவைத் தலைவர்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. புதுவாழ்வு
கொடுத்த ஆண்டவரே! உமது உயிர்ப்பின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அமைதியை அனுபவிக்கவும், அதை மற்றவர்களுக்கு வழங்கவும் தேவையான ஆற்றலைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நல்ல
ஆயரான ஆண்டவரே! உமது சீடர்களைப் போன்று நாங்களும் உம்மை அறிந்து அன்பு செய்யவும், இறுதிவரை உறுதியுடன் நற்செய்தியை அறிவிக்கவும், இயேசுவின் திருப்பெயர் நிலைக்க நாங்கள் தொய்வின்றி உழைத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஆற்றல்
வழங்கும் ஆண்டவரே! கணினி உலகில் வாழும் எம் இளைஞர்கள் அலைப்பேசிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட உம்மை அறிவதற்குக் கொடுக்கவும், ஆன்மிக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.