இறைவேண்டல் என்பது ஓர் அருள்வாழ்வுப் போராட்டம் என்னும் செய்தியைத் திரு அவைத் தந்தையர்கள், புனிதர்களின் வாழ்விலிருந்து அறியவருகிறோம். எல்லாப் புனிதர்களும் இறைவனோடு ஒன்றிப்பதற்காகப் பல தடைகளைக் கடந்தனர். உடல், உலகம், அலகை என்னும் முப்பெரும் பகைவர்களோடு போராடியே இறையனுபவத்தைப் பெற்றனர். புனித தோமா அக்குவினாவிலிருந்து, திரிதெந்தின் திருச்சங்கம்வரை இம்மூன்று ஆற்றல்களோடு நாம் போராட வேண்டும் என்னும் செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.
எபேசியருக்கு
எழுதப்பட்ட திருமடலில், “அப்பொழுது நீங்கள் இவ்வுலகப் போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீயநாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம்”
(எபே 2:2-3) என்னும் வரிகளில் இம்மூன்று பகைவர்கள் பற்றி வாசிக்கிறோம்.
யூபிலி
2025-க்கு ஆயத்தமாக 2021-ஆம் ஆண்டு முழுவதும் புதன்கிழமை மறைக்கல்வியில் இறைவேண்டல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 12.05.2021 அன்று அவர் ஆற்றிய உரையின் தலைப்பு ‘போராட்டமும் இறைவேண்டலே’ என்பதுதான்.
கிறித்தவ இறைவேண்டல் என்பது எளிதானதன்று; மாறாக, அது ஓர் அகப்போராட்டம் என்கிறார் திருத்தந்தை.
இறைவேண்டல்
செய்ய நினைக்கும்போதுதான் நாம் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய சிந்தனை நமக்கு வருகிறது என்று நாம் அனைவரும் அன்றாடம் சந்திக்கும் இறைவேண்டல் போராட்டம் பற்றிப் பகிர்கிறார் திருத்தந்தை. திரு அவை வரலாற்றின் எல்லா மாமனிதர்களும் இறைவேண்டலின் மகிழ்ச்சி பற்றி மட்டுமல்ல, இறைவேண்டலின் போராட்டம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துள்ளனர். குறித்த நேரத்தில் இறைவேண்டல் செய்வது, குறிப்பிட்ட முறையில் இறைவேண்டல், சில நேரங்களில் மனநிறைவற்ற இறைவேண்டல் போன்றவை எல்லாருக்கும் பொதுவான சிக்கல்கள் என்கிறார் திருத்தந்தை.
பல
புனிதர்கள் ‘இருண்ட இரவு’ என்னும் அனுபவத்தைப் பெற்றிருந்தனர். வாரக்கணக்கில், சில வேளைகளில் மாதக்கணக்கில் இறைவேண்டலில் இறையனுபவம் இன்றியே அவர்கள் இருந்திருக்கிறார்கள். இருப்பினும், ஒருபோதும் இறைவேண்டலை அவர்கள் கைவிட்டதில்லை.
கத்தோலிக்கத்
திரு அவையின் மறைக்கல்வி இறைவேண்டல் தடைகள் பற்றி விரிவாகப் பேசுகிறது. இறைவேண்டல் என்னும் போராட்டத்தில் நாம் வெற்றிபெற வேண்டுமென்றால், இறைவேண்டல் பற்றிய தவறான சிந்தனைகளை அகற்ற வேண்டும் (கதிம 2726). சிலர் இறைவேண்டலைத் ‘தலைவலி மாத்திரை’
போலக் கருதுகின்றனர். தலைவலி வரும்பொழுது மாத்திரையைப் பயன்படுத்துகிறோம்; தலைவலி போனவுடன் மாத்திரையைப் பயன்படுத்துவதில்லை. இறைவேண்டல் அப்படியல்ல; அது நம் அருள்வாழ்வின் உயிர்மூச்சு. எனவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும். இறைவேண்டலை உளவியல் நிறைவுதரும் உத்தியாகவோ, மனத்தை ஒருங்கிணைக்கும் தியானமாக மட்டுமோ நாம் சுருக்கிவிடக்கூடாது என்று கற்பிக்கிறது நமது திரு அவை.
சில
வேளைகளில் இறைவேண்டல் தொடர்பான சலிப்போ அல்லது சோர்வோ நமக்கு நேரிடலாம். அவ்வேளைகளில் நாம் மனம் சோர்ந்துவிடக்கூடாது. இப்போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு மறைக்கல்வி தரும் மருந்துகள் என்ன தெரியுமா? தாழ்ச்சி, நம்பிக்கை, தொடர் முயற்சி ஆகியவையே (கதிம 2728). திரு அவையின் புனிதர்கள் நமக்கு முன்னால் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.
இறைவேண்டலில்
மறையனுபவம் பெற்ற புனித அவிலா தெரசாவின் துறவு நாள்களின் தொடக்கத்தில் பராக்குகள், ஆர்வமின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். அவரது நாற்பதாவது வயதில் அருள்வாழ்வின் இரண்டாம் மனமாற்றம் நிகழ்ந்தது. அவரது இறைவேண்டல் செழுமை பெற்றதோடு, அவரது துறவற அவையின் அனைத்துச் சகோதரிகளையும் இறைவேண்டலில் ஊக்குவிக்கும் அருளையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னரும் இறைவேண்டலில் தடைகள் வராமலில்லை. ஆனால், அவற்றை உடைத்தெறியும் ஆற்றலும் மனந்தளராமையும் அவரிடம் வந்துவிட்டன. எனவே, மாபெரும் புனிதையாக வாழ்ந்தார்.
புனித
அவிலா தெரசாவைத் தன் ஆன்மிக அன்னையாகக் கருதிய புனித சிலுவை யோவான்தான் ‘ஆன்மாவின் இருண்ட இரவு’ என்னும் சொல்லாடலை அறிமுகப்படுத்தியவர். சில வேளைகளில் நமது இறைவேண்டல் நேரங்கள் வறண்டதாகவோ, இறைப்பிரசன்னம் இல்லாததாகவோ இருக்கின்றன. இறைவன் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்னும் மயக்க நிலை நேரலாம். ஆனாலும், அத்தகைய வேளைகளிலும் இறைவன் நம்மோடுதான் இருக்கிறார். இத்தகைய அனுபவங்களைக் கண்டு நாம் அஞ்ச வேண்டாம். இந்தப் போராட்டங்களே நம்மைத் தூய்மைப்படுத்தி, இறைவனிடம் நாம் நெருங்க உதவுகின்றன என்கிறார் புனித சிலுவை யோவான்.
“விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்” (1திமொ
6:12) என்று திமொத்தேயுவை ஊக்குவித்தார் பவுலடியார். நம் இறைவேண்டல் வாழ்வுக்கும் அது பொருந்தும். நம் வாழ்வே ஒரு போராட்டம்தான். அதைக் கண்டு சோர்ந்துவிடாமல், தொடர்ந்து போராடுவதே வெற்றி. இறைவேண்டலும் அப்படித்தான். இறைவனோடு ஒன்றிக்க நாம் போராட வேண்டும். அந்தப் போராட்டமே ஓர் இறைவேண்டல்தான்; அந்தப் போராட்டமே ஒரு வெற்றிதான்.