news-details
ஞாயிறு தோழன்
ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு (13-04-2025) எசா 50:4-7; பிலி 2:6-11; லூக் 22:14-23:56

திருப்பலி முன்னுரை

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று, இயேசுவின் புனிதப் பயணத்தைப் பற்றிச் சிந்திக்க அன்னையாம் திரு அவை இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறது. உலகிற்கு வந்த இயேசு தனிமையில் இருப்போருக்கு நண்பராக, கைவிடப்பட்டவர்களைக் கைவிடாது காப்பவராக, துன்பங்களைப் போக்கும் தூயவராக, இறைத்திட்டத்திற்குப் பணிந்தவராக வாழ்ந்தார்; தம்முடைய வாழ்வில் சந்தித்த அனைவருக்கும் நன்மைகளை மட்டுமே செய்தார்; நம் அனைவரையும் மீட்பதற்காகச் சிலுவையில் தமது விலைமதிக்க முடியாத உயிரையும் கொடுக்க முன்வந்தார். அவரைப் பார்த்துஓசன்னா!’ என்று முதலில் ஆர்ப்பரித்த மக்கள், பின்னர்ஒழிக!’ என்று கூச்சலிடுகின்றனர். அவரது அருஞ்செயலைக் கண்டு புகழ்ந்தவர்கள் பின்னர்இவனைச் சிலுவையில் அறையும்என்று கத்துகின்றனர். வாழ்த்தொலிகளையும், ஏளனப் பேச்சுகளையும், இயேசு கடவுளின் துணையோடு  கடந்துவிடுகிறார். இறுதிவரை தம்முடைய தந்தையின் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றுகின்றார். நமது வாழ்க்கைப் பயணத்தில் புகழ்ச்சிகளால் புல்லரித்துப் போகாமலும், இகழ்ச்சிகளால் மனம் தளர்ச்சி அடையாமலும் இறுதி வரை இறைவனைப் பற்றிக்கொண்டு வாழ்வோம். நமக்காகப் பாடுகளை ஏற்றுக்கொண்ட இயேசுவின்மீது நம் கண்களைப் பதிய வைப்போம். இயேசுவின் வார்த்தையை நமது வாழ்வுக்கு ஒளியாகவும், அவரது வாழ்வை நமது வாழ்க்கையாகவும் கொண்டு வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் உண்மையான ஊழியரின் பணியையும் வாழ்வையும் பற்றி எடுத்துரைக்கின்றது. ஆண்டவருடைய ஊழியர் துன்பங்கள் சூழ்ந்தாலும் இறைவனின் துணையோடு அவரது விருப்பத்தை நிறைவேற்ற எப்போதும் தயாராக இருக்கின்றார். நம்முடைய இன்னல்கள், துன்பங்கள், குழப்பங்கள், சுமைகள் அனைத்திலும் நம்மைக் கைவிடாது காக்கும் இறைவனின் கரம்பற்றி வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து மனிதத் துயரங்கள், வேதனைகள், சோதனைகள், துன்பங்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். அவரின் தாழ்மைக்கும் பணிவுக்கும் அவரே ஒப்பற்ற முன்மாதிரி. இயேசுவைப்போல் நாமும் பணிவோடும் தாழ்மையோடும் நடந்து கொள்ள அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) நல்ல ஆயனான ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது இரக்கத்தால் கிடைத்த அர்ப்பண வாழ்வின் மகத்துவம் உணர்ந்து, எங்கள் அனைவரையும் இறை ஒளியின் பாதையில் வழிநடத்தத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2) பாதுகாக்கும் ஆண்டவரே! புனித வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள நாங்கள் அனைவரும் உடன் வாழும் சகோதர- சகோதரிகளோடு நல்லுறவுடன் வாழத் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3) வாழ்வு கொடுக்கும் ஆண்டவரே! இன்று குருத்தோலைகளைக் கையில் ஏந்திதாவீதின் மகனுக்கு ஓசன்னா!’ என்று முழங்கிய நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் எந்நிலையிலும் உம்மைப் போற்றிப் புகழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4) எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அனைவரும் உம்மை அறிவதில் ஆர்வம் கொண்டு, இறைவார்த்தையை ஞானத்தோடு படித்து வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.