news-details
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 27, 2025, பாஸ்கா காலத்தின் 2-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு - இறை இரக்கத்தின் ஞாயிறு) திப 5:12-16; திவெ 1:9-11,12-13,17-19; யோவா 20:19-31 - தழும்புகள் தரும் நம்பிக்கை!

சந்தேகமும் இரக்கமும் ஒன்றையொன்று சந்திக்கும் ஞாயிறை இன்று கொண்டாடுகிறோம். இந்த ஞாயிறுஇறை இரக்கத்தின் ஞாயிறுஎன்றும், ‘தோமாவின் நாள்என்றும் அழைக்கப்படுகிறது. சந்தேகத்திலும் குழப்பத்திலும் தவித்த சீடர்களைத் தேடி குறிப்பாக, தோமாவைத் தேடிச் சென்று, அவருக்கு உறுதி வழங்கிய இயேசுவையும், இயேசு உயிர்த்து விட்டார் என்பதை நம்புவதில் ஆதாரம் கேட்பவராக, ஆண்டவரின் கைகளிலும் விலாவிலும் உண்டான காயங்களைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கும் தோமாவையும் இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.

உயிர்த்த ஆண்டவரைப் பிற சீடர்களோடு இணைந்து சந்திக்காத தோமா, திருவிவிலியத்தில் சந்தேகத்துக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் மனிதராகப் பார்க்கப்படுகிறார். இன்று நேற்றல்ல, காலத்திற்கும் அவர்சந்தேகத் தோமாஎன்றே அழைக்கப்படுகிறார்.

உயிர்த்த இயேசுவைக் கண்டதும் அனைத்துச் சீடர்களுக்கும் கலக்கம், குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன. இயேசுவிடம் கேட்க முடியாமல், மனத்துக்குள் மற்றச் சீடர்கள் புதைத்து வைத்திருந்த இதே சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுக் கேட்டார். எனவே, தோமாவை மட்டும்சந்தேக மனிதர்என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில், அச்சத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சந்தேகப்படுவது நல்லதுதானே! ‘சந்தேகப்படுவது அறிவுக்கான திறவுகோல்.’ எந்தத் தயக்கமுமின்றி ஒன்றைப்பற்றி அறியும் நோக்கில் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துபவரே அதை விரைவாகக் கற்றுக்கொள்கிறார். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு திருத்தூதர் தோமா. இன்றைய நாளில் கிறித்தவ வாழ்வின் மூன்று முக்கியமான கூறுகளைத் தோமாவின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.

முதலாவதாக, தோமாவின் துணிவு. பெத்தானியாவில் மார்த்தா-மரியாவின் சகோதரர் இலாசர் இறந்ததைக் குறித்து இயேசு, “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் (யோவா 11:11) என்று கூறும்போது, மற்றச் சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” (யோவா 11:8) என்று கேட்பார்கள். சீடர்களின் தயக்கத்திற்கான காரணம், இயேசு எருசலேமில் போதித்துக் கொண்டிருந்தபோது யூதர்கள் அவர்மேல் கல்லெறிய முயன்றார்கள் (10:33); இப்போது பெத்தானியாவுக்குப் போனால் இயேசுவுக்கு மட்டுமல்ல, தங்கள் மேலும் கல்லெறிவார்கள் என்ற அச்சத்தில் சீடர்கள் கொஞ்சம் பின்வாங்க நினைக்கும்போது, தோமா மட்டுமேநாமும் செல்வோம், அவரோடு இறப்போம்(11:16) என்ற நம்பிக்கையைக் கொடுப்பார். தோமா இயேசுவோடு இருக்கும்போதேஒரு சீடருக்கான அழகு மறைச்சாட்சியாக இறப்பதேஎன்பதைத் தன் வார்த்தைகள் வழியாக அழகுற வெளிப்படுத்துகிறார்.

இரண்டாவது, தோமாவின் நேர்மை. தோமா எதையும் எளிதில் ஏற்பவர் அல்லர்; தனக்குப் புரியாத ஒன்றை அவர் புரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் மாட்டார் (14:5); நம்புவதாக நடிக்கவும் அவரால் இயலாது. இயேசு மூன்று முறை தம் இறப்பைக் குறித்து முன்னறிவித்தபோது, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் எல்லாச் சீடர்களுமே குழப்பத்தில் இருந்தார்கள். அப்போது இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்... நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும் (14:1-4) என்பார். இயேசுவின் இந்தக் கூற்று சீடர் எவருக்கும் புரியவில்லை; கேள்வி கேட்டுத் தெளிவு பெறத் துணிவும் இல்லை. எல்லாரும் அமைதியாக இருக்கும் சூழலில் தோமா மட்டுமேஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” (14:5-6) என்ற கேள்வியை எழுப்பினார். தனக்குத் தெரியாததைதெரியாதுஎன்று சொல்வதற்கும், புரியாததைபுரியவில்லைஎன்று சொல்வதற்கும் ஓர் ஆரோக்கியமான நேர்மை வேண்டும். அது தோமாவிடம் இருந்தது. ‘எல்லாம் எனக்குத் தெரியும்எனக் காட்டிக்கொள்ளும் மனிதர்கள் மத்தியில், நேர்மையோடும் தாழ்ச்சியோடும் நடந்துகொண்டவர் தோமா.

மூன்றாவதாக, தோமாவின் சாட்சிய வாழ்வு. உயிர்ப்பின் உண்மையான மகிழ்ச்சி என்பது உலகின் கடையெல்லை வரைக்கும் சென்று, உயிர்ப்பின் நற்செய்தியை அறிவிப்பதுதான். “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; பாவங்களை மன்னியுங்கள்; உயிர்ப்பின் சாட்சிகளாய் மாறுங்கள் (20:22-23) என்பதுதான் இயேசு சீடர்களுக்கு முன்னுரைத்தது. எனவே, ‘கிறிஸ்து உயிர்த்தார்என்ற உண்மையை அறிந்து, அனுபவித்த தோமா அமைதியாக இருக்கவில்லை. உயிர்ப்பின் பொருள் புரிந்து, உள் மனமாற்றம் பெற்றார்; முற்றிலும் புதிதாய்ப் பிறந்த மனிதராக மாறினார். “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு...” (20:27) என்று இயேசு தோமாவிடம் கூறியபோது, அவர் இயேசுவைத் தொட்டாரா? என்பதில் தெளிவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், சிலுவையில் அறையுண்ட அதே இயேசு அவர்முன் நிற்பதைக் காண்கின்றார். “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” (20:28) எனக் கூறித் தன் நம்பிக்கையை வெளியிடுகின்றார். அவர் கூறிய சொற்கள் உண்மையிலேயே அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆழத்தைக் காட்டுகின்றன.

தோமாவின் இந்த உயர்ந்த நம்பிக்கை எந்த நற்செய்தியிலும் எவர் வாயிலிருந்தும் வந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. ‘இயேசு இறைவனும் ஆண்டவரும்என்னும் உண்மையை அப்படியே அறிக்கையிடுகிறார் தோமா. நம்பத் தயங்கிய தோமாவின் வாயிலிருந்தே நம்பிக்கையின் ஒப்புயர்வற்ற வாய்ப்பாடு வெளிவருவது வியப்பன்றோ! அன்றைய உரோமைப் பேரரசர்கள் தங்களை மக்கள் அனைவரும்ஆண்டவரே, கடவுளேஎன அழைக்க வேண்டும் என ஆணை பிறப்பித்த சூழலில், தொடக்க காலக் கிறித்தவர்கள் அரசர்களைகடவுள்என்று அழைக்காமல், அத்தகைய அடைமொழிக்கு உரியவர் இறைவனும், அவர் திருமகனுமான இயேசு மட்டுமே என்பதை அறிக்கையிட ஆதாரப் புள்ளியாகத் தோமாவின் நம்பிக்கை முழக்கம் அமைகிறது. ஆகவே, முதலில் நம்ப மறுத்த தோமா, கிறித்தவ நம்பிக்கையின் உச்சக்கட்ட அறிக்கையை வெளிப்படுத்தியவராகிறார்.

இயேசு தோமாவைத் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும் சிறப்பாக அறிவிக்கப் புறப்பட்டார். வேறுபட்டக் காலச்சூழல், புதிய பண்பாடு, கலாச்சாரம், வேற்று மக்கள், புதிய மொழி போன்ற தடைகள் எதுவும் அவரைத் தடுக்க இயலவில்லை. உயிர்ப்பின் உண்மையை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதற்காகக் கடல் கடந்து இந்தியா வந்தார். இயேசுவின் காயத்தின் தழும்புகளைத் தாங்கி நிற்கும் மாந்தர்களுக்குப் பணிசெய்வதன் விலையாகத் தன் உயிரையே கையளித்து, இந்தியாவின் முதல் மறைச்சாட்சியானார். ஆகவே, தோமா வாழ்வில் எது உண்மை என்பதைத் தேடினார்; அந்த உண்மைக்குச் சாட்சியாகத் தன்னையே கையளித்தார்.

இறுதியாக, இந்த நாள் நமக்கு உணர்த்தும் சில பாடங்களை மனத்தில் ஏற்போம். கிறித்தவ வாழ்வு தொடக்கம் முதல் இறுதிவரை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவேதான் கிறித்தவச் சமூகத்தைத் திருத்தூதர் பவுல்நம்பிக்கை கொண்டோரின் குடும்பம் (கலா 6:10) என்று அழைக்கிறார். மேலும் அவர் கிறித்தவ வாழ்வைநம்பிக்கை வாழ்வு எனும் போராட்டம் (1திமோ 1:1-2) என்றே வரையறை செய்கிறார். நமது இறைநம்பிக்கை வாழ்வில் கடவுள் மீதான சந்தேகங்களும் மனப்போராட்டங் களும் துயரங்களும் தோல்விகளும் ஏமாற்றங்களும் எண்ணிலடங்கா வகையில் ஊற்றெடுக்கும்போது, இறைநம்பிக்கையற்றவர்களாக வாழாமல் இறை நம்பிக்கை கொண்டவர்களாக வாழ தோமாவின் சாட்சிய வாழ்வு நம்மைத் தூண்டுகிறது.

நமது சமூகம் போர்க்குணங்களாலும் ஏழ்மை நிலையாலும் சமூக வெறுப்புகளாலும் நம்பிக்கையற்றத் தன்மைகளாலும் சிதைந்து கிடக்கும் இச்சூழலில், இன்று நாம் கொண்டாடும் இறை இரக்க ஞாயிறு இறைவனின் இரக்கத்தை, அன்பை, மன்னிப்பை எண்ணிப் பார்க்கப்படும் வெறும் பக்தி முயற்சியாக, வழிபாடு நிகழ்வாக மட்டும் அமைந்துவிடாமல், அது வாழ்வாக மாறவேண்டும். சிறு சிறு செயல்களில் இறைவனின் அன்பைக் கொடுப்போம். நிபந்தனைகள் ஏதுமின்றி நம்மை ஒவ்வொரு நாளும் தேடிவரும் இறைவன், சந்தேகம் என்ற சிறைக்குள் சிக்கித் தவிக்கும் நம் குடும்ப உறவுகளை விடுவிக்க மன்றாடுவோம். இறைவனின் இரக்கத்தை, வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் நாம் உணர, திருத்தூதர் தோமாவின் பரிந்துரையை நாடுவோம்.