news-details
இந்திய செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அழியாத் தடங்களை விட்டுச் சென்றுள்ளார்!

கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!

நமது அன்பிற்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்ததை எண்ணி மீளாத் துயரிலும் வருத்தத்திலும் இருக்கின்றோம். அவரது மறைவு நமக்கு மாபெரும் இழப்பாகும்.

உண்மையான மக்களின் மேய்ப்பராகத் திருத்தந்தை பிரான்சிஸ் தனது வாழ்க்கையை நற்செய்தி அறிவிப்பதிலும், ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் போராடுவதிலும், இரக்கம், நீதி மற்றும் இயற்கையின்மீது அக்கறை கொண்டு வாழ்வதிலும் தன்னையே இந்த உலகிற்கு அர்ப்பணித்தார். கத்தோலிக்கர்களின் ஆன்மிகத் தலைவராக அவர் திரு அவையை ஞானத்துடனும் தாழ்மையுடனும் திறந்த இதயத்துடனும் வழிநடத்தினார். மக்களை இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லவும், அன்பும் ஒற்றுமையும் நிலவவும் எப்போதும் பாடுபட்டார்.

பேதுருவின் வழித்தோன்றலாக 2013 முதல் 2025 வரை திரு அவையை வழிநடத்தியவர் என்ற நிலையில், அவரது படிப்பினைகள் என்றென்றும் மதிப்புடன் நினைவுகூரப்படும். ஒன்றிப்பின் சமூகமாகத் திரு அவையை மாற்றவேண்டும் எனும் அவரது பார்வை, அதாவது செவிமடுத்தல், தேர்ந்து தெளிதல், ஒருங்கிணைந்து பயணித்தல், ஒன்றிப்பை ஏற்படுத்துதல் எனும் அவரது பார்வை திரு அவையில் அனைத்து நிலைகளிலும் அழியாத் தடங்களை விட்டுச் சென்றுள்ளன. ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மக்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்தோர்மீது அவர் கொண்டிருந்த ஆழமான இரக்கம் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். மேலும், நாடுகளுக்கு இடையிலான உரையாடல்களை ஊக்குவித்த அவரது பங்களிப்பும் மிகச் சிறப்பானதாகும்.

சமயங்களுக்கு இடையிலான உரையாடலில் அவர் காட்டிய உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் உள்ளது. ‘இறைவா உமக்கே புகழ் (‘Laudato Si’) என்ற திருத்தூதுஊக்க உரை மூலம், இயற்கையைப் பாதுகாக்க அவர் விடுத்த அழைப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

நம் நாட்டை மிகவும் அன்பு செய்த திருத்தந்தை இந்தியாவிற்கு வருவதற்கு மிகவும் விரும்பினார். ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களைக் கவனிக்க வேண்டும் என்பதையும், ஒன்றிப்பின் திரு அவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் தொடர்ந்து நினைவூட்டினார். 2025, சனவரியில் புவனேஸ்வரில் நடைபெற்ற 36-வது இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின்போது, திருத்தந்தை இந்திய ஆயர்களுக்கு அனுப்பிய செய்தியில், அவர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் விளிம்புநிலையிலிருப்போருக்கு முதன்மை இடம் கொடுத்துஆலயத்தின் கதவுகளைத் திறந்துவிடக் கேட்டுக்கொண்டார். மேலும், அவர் திரு அவையில் ஒன்றிப்பின் பயனை ஒவ்வொரு திரு அவையும் மேம்படுத்தி, இணைந்து பயணித்தலின் கனியைப் பெற்றுக்கொள்ள ஆயர்களை ஊக்குவித்தார். திருத்தந்தை தன் பணிக்காலத்தில் புனித குரியாகோஸ் எலியாஸ் சவாரா, புனித எப்ரேசியா எலுவதிங்கள் (2014), புனித ஜோசப் வாஸ் (2015), புனித மரியம் திரேசியா சீராமெல் (2019), புனித தேவசகாயம் (2022) ஆகிய ஐந்து இந்தியர்களைப் புனிதராக உயர்த்தியுள்ளார்.

இந்தப் பெரும் துயரத்தை நாம் அனுபவிக்கும் இவ்வேளையில், எல்லா மறைமாவட்டங்கள், பங்குகள், துறவற இல்லங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்பது நாள்கள் துக்க அஞ்சலியை அனுசரிக்கவும், திருத்தந்தை பிரான்சிஸின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் சிறப்பு இறைவேண்டல்களை நடத்தவும் நான் அழைக்கிறேன். நாம் அனுபவிக்கும் துயரத்தின் அடையாளமாக, அனைத்து ஆலயங்களிலும் ஆலய மணிகளை ஒலிக்கச் செய்யக் கேட்டுக்கொள்கிறேன். இது நம் துயரத்தையும், நம் உன்னதத் திருத்தந்தையின் மறைவையும் அறிவிக்கும் செயல்பாடாக அமையும். திருத்தந்தையின் நினைவால் தங்கள் வசதிக்கேற்ப ஒருநாள் அனைத்து மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் தங்கள் பேராலயத்தில் கூடி திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றக் கேட்டுக்கொள்கிறேன். இது உலகமெங்கும் உள்ள திரு அவையுடன் நம் ஆழ்ந்த ஒற்றுமையின் வெளிப்பாடாக இருக்கும். அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நிலையான இளைப்பாற்றியை அருள்வாராக! இக்கடினமான சூழலில் புனித கன்னி மரியாவின் பரிந்துரையால் திரு அவை அமைதியும் வலிமையும் பெறுவதாக!