news-details
தமிழக செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள்!

கிறித்தவர்களின் சமய விழாக்களில் நம்பிக்கையை ஆழமாகப் புடமிடும் நாள்புனித வெள்ளி.’ இறைமகன் இயேசு இம்மனுக்குல மீட்புக்காக, மானிடரின் பாவங்களை மன்னிப்பதற்காகச் சிலுவை சுமந்து, கல்வாரி மலை நோக்கிச் சென்று, கரம் விரித்து சிலுவையில் மரித்து, உயிர் துறந்ததை ஆழமான நம்பிக்கையோடும் பக்தி நிறைந்த செப உணர்வோடும் கொண்டாடும் நாள் புனித வெள்ளி. புனித வாரச் சிறப்பு நாள்களில் குறிப்பிடத்தக்க நாள் இப்புனித வெள்ளி. இந்நாளில் தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூடிட தமிழ்நாடு அரசுக்குக் குறிப்பாக, முதலமைச்சருக்குக் கிறித்தவர்கள் அன்போடு வேண்டும் கோரிக்கை இது.

03.01.2012-ஆம் ஆண்டு அரசு ஆணைப்படி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள், மகாவீரர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி மற்றும் முக்கியச் சிறப்பு நாள்களில் மதுபானக் கடைகளுக்குத் தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்கப்படுவதுபோல, கிறித்தவர்களின் புனித நாளான புனித வெள்ளி அன்றும் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்பது கிறித்தவர்களின் ஒரே கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை வலியுறுத்தி தமிழ்நாடு-புதுவை கத்தோலிக்கப் பொதுநிலையினர் பேரவையின் தற்போதைய தலைவரும், மதுரை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயருமான முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்குச் சபைகளின் இயக்குநர் அருள்பணி. ஜெயந்தன் அவர்களும் பிற கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட பரிந்துரைக்குமாறு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி அவர்கள் வழிகாட்டுதலில், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மின் அஞ்சலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இயேசு இறந்த தியாக நாளாம் புனித வெள்ளி நாளில் கேரளா மற்றும் டெல்லி மாநிலங்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதுபோல, தமிழ்நாடு அரசும் கிறித்தவ மக்களின் உணர்வினை மதித்து மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில அனைத்துக் கிறித்தவப் பெருமக்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கைக்குச் செவிமடுப்பார் என்றே நம்புகிறோம்!