news-details
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 2-ஆம் ஞாயிறு (இறை இரக்கத்தின் ஞாயிறு) (27-04-2025) திப 5:12-16; திவெ 1:9-11,12-13,17-19; யோவா 20:19-31

திருப்பலி முன்னுரை

இன்று திரு அவை இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவனின் இரக்கம் அளப்பரியது! கருணை மிகுந்த இறைவன் தம்முடைய இரக்கத்தினால் எல்லாரையும் மன்னிக்கிறார், எப்போதும் மன்னிக்கிறார். “இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்என்கிறார் இயேசு. கண்களில் கருணையையும் இதயத்தில் இரக்கத்தையும் கொண்டு அனைவரையும் அன்பு செய்வோம்; பசிக்கு உணவு கொடுப்போம்; பயணத்தின்போது இல்லாதோருக்கும் இயலாதோருக்கும் அமர்வதற்கு இடம் கொடுப்போம்; நம்மிடம் இரந்து கேட்பவர்களுக்குஇல்லைஎன்று சொல்லாமல் இயன்றதைக் கொடுப்போம்கனத்த இதயங்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கொடுப்போம். இத்தகு இரக்கச் செயல்களைச் செய்வதன் வழியாக உயிர்த்த இயேசுவை நம் வாழ்விலும் அன்றாடம் அனுபவிப்போம். தோமா கிறிஸ்துவோடு வாழ்ந்தவர்; பாடுகளில் பங்கேற்றவர்; இந்தியாவிற்கு வந்து கிறிஸ்துவை விதைத்தவர்; ஆண்டவரைப் பார்த்துநீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்என்று கூறிச் சரணடைந்தவர். “நாமும் அவரோடு செல்வோம்; அவரோடு இறப்போம்என்று கூறி உயிரைக் கொடுத்தவர். ஐயம் சிறிதும் இன்றி புனித தோமாவைப் போன்று இறைவனைப் பற்றிக்கொள்வோம். இயேசுவின் மதிப்பீடுகளை இவ்வுலகிற்குக் கொடுத்து, உயிர்த்த இயேசுவின் மக்களாய் வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம்.

முதல் வாசகம் முன்னுரை

அச்சமுற்றுக் கோழைகளாக அறையைப் பூட்டிக்கொண்டு ஒளிந்திருந்த சீடர்கள் இயேசுவின் தோற்றம் கண்டு துணிச்சல் பெறுகின்றனர். அமைதி இழந்து உயிரச்சம் கொண்டவர்கள், உயிர்த்த இயேசுவின் குரலைக் கேட்டவுடன் உள்ளத்தில் புத்துணர்வு பெறுகிறார்கள்வீரியமுடன் பணி செய்கிறார்கள். நாமும் புதுவாழ்வில் நிலைத்து நம்பிக்கையோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆவியின் வல்லமை பெற்றவர்கள் பல அதிசயங்களைச் செய்வார்கள். அனைத்தையும் முன்னரே உய்த்துணரும் ஆற்றலைப் பெறுகிறார்கள். முதலும் முடிவுமாக இருக்கின்ற இறைவனின்  குரலைக் கேட்கும் திறனைப் பெறுகிறார்கள். அஞ்சாமல் துணிச்சலோடு பணிசெய்ய ஆற்றல் பெறுகிறார்கள். நாமும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்திட அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. இரக்கத்தின் ஆண்டவரே! திருத்தூதர்களைப் போன்று திரு அவைத் தலைவர்களும் மக்களை ஒற்றுமையின் பாதையில் வழிநடத்திடவும், மக்கள் இறைத்தந்தையின் அன்பைச் சுவைக்க வழிகாட்டிடவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. இரக்கத்தின் இறைவா! இறை இரக்கத்தின் ஞாயிறுத் திருப்பலியில் இன்று கலந்துகொண்டுள்ள நாங்கள் இரக்கச் செயல்களின் வழியாக இறைவனை எடுத்துரைக்கவும், மற்றவர்கள்மீது இரக்கம் கொண்டவர்களாக வாழவும், கனிவுள்ள வார்த்தைகளைப் பேசவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின் ஊற்றாகிய ஆண்டவரேஇந்தியாவின் திருத்தூதர் புனித தோமாவைப் போன்று ஐயம் நீங்கி, ‘என் ஆண்டவரே என் தேவனேஎன்று உம்மைப் பற்றிக்கொள்ளவும், நாங்கள் அனைவரும் தோமாவைப் போன்று நற்செய்தியின் தூதுவர்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மரணத்தை வென்று உயிர்த்த ஆண்டவரே! நீர் வழங்கிய அமைதியை நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் கொடுத்து வாழவும், குடும்பங்களுக்குள் அமைதியை ஏற்படுத்தவும், அருகில் வாழும் மக்கள் இயேசுவை எம்மில் காணும் வாழ்க்கை வாழவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.