தூத்துக்குடி தோமையார்புரத்தைச் சேர்ந்த குடும்பம் செபஸ்தியான் குடும்பம். இவர் தலைமையாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றார். தனது மகன் சேவியர், மகள் அமலியை நன்கு படிக்க வைத்தார். எதிர்பாராமல் செபஸ்தியான் ஹார்ட் அட்டாக்கில் மறைந்துவிட்டார்.
கணவர்
மறைந்தபின் ஆசிரியையாய் இருந்து ஓய்வு பெற்ற மனைவி அருளம்மா பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்தினாள்.
மகன்
சேவியர் மதுரையில் படித்து டாக்டரானான். மகள் அமலி பி.ஏ. படிப்போடு
நிறுத்திக்கொண்டாள்.
தனது
மகன் டாக்டர் சேவியருக்குப் பெண் பார்த்தாள் அருளம்மா. தனது உறவினர் வீட்டுப்பெண் ரோஸ்லின் அமெரிக்காவில் சாஃப்ட்வேரில் பணிபுரிவதை அறிந்து, அவர்கள் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டாள் அருளம்மா.
“உங்க பையன் இந்தியாவில் டாக்டராக இருக்கிறார். எங்க மகள் அமெரிக்காவில் வேலை பார்க்கிறாள். இந்தச் சம்பந்தம் ஒத்து வருமாங்க?” என்றார்கள் ரோஸ்லின் பெற்றோர்கள்.
“சேவியர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த விசுவாசம் மிக்க பெண்ணைத்தான் விரும்புறான். மேலும் அவன் அமெரிக்காவுக்கு வேலைக்குச் சென்றுவிடுவான்” என்றாள்
தாய் அருளம்மா.
“உங்க பையன் அமெரிக்காவுக்குப் போறதுன்னாக்க நாங்க பெண் தாரோம். ஆனால், எங்க மகள் இங்கே வர விரும்பமாட்டாள். அதைப் பார்த்துக்கங்க” என்றார்
ரோஸ்லின் தந்தை.
“கட்டாயம் என் பையன் சேவியர் அமெரிக்காவுக்குப் போய்விடுவான். அவனுக்கு உங்க பெண்ணைக் கட்டாயம் பிடிக்கும். நான் படத்தைப் பார்த்திட்டேன்ல” என்றாள்
அருளம்மா.
“அப்படின்னா முடிச்சிருவோம். அடுத்த மாதம் எங்க மகளை வரச்சொல்றோம். நிச்சயம் பண்ணிட்டு உடனேயே கல்யாணத்தைச் சிறப்பாய் முடிச்சிருவோம்” என்றார்
ரோஸ்லின் தந்தை.
தூத்துக்குடி
கடற்கரையில் அமைந்த பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பாகத் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே சேவியர், ரோஸ்லின் இருவரும் அமெரிக்கா கிளம்பிவிட்டனர். அமெரிக்கா சென்றதும் நியூயார்க்கில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து விட்டான் சேவியர். அங்கே இந்திய டாக்டர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என்பதால், அவனது முயற்சி நிறைவேறிற்று.
திருமணம்
முடிந்த தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ரோஸ்லின் நியூயார்க்கிலிருந்து நியூ ஜெர்சிக்கு இடையே உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள். எனவே, தினமும் காரில் வேலைக்குப் போய் திரும்பிவந்து விடுவாள். அடுத்த ஆண்டே ரோஸ்லினுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டது.
பிறந்த
குழந்தையுடன் தூத்துக்குடி வந்தார்கள் தம்பதியினர். பனிமய மாதா கோவிலில் வைத்து குழந்தைக்கு ‘விமலா’ என்று ஞானஸ்நானப் பெயர் வைத்தார்கள்.
உறவினர்களைச்
சந்தித்து விட்டு மீண்டும் அமெரிக்கா சென்றனர் சேவியர்-ரோஸ்லின் தம்பதியினர். மிகவும் மகிழ்ச்சியாக நாள்கள் கடந்தபோது, ஒருநாள் சேவியரின் செல் அலறியது.
“சார், உங்க மனைவி கார் ஓட்டிச் சென்றபோது ஆக்சிடெண்டாகி ஸ்பாட்லேயே இறந்துட்டாங்க. அவங்க பின்னாடி காரில் போன ஒருவர் எங்களுக்குத் தெரிவித்தார். அதை உங்களுக்குச் சொல்கிறோம்” என்று
ஒரு சாஃப்ட்வேர்க்கார தமிழர் செய்தியைச் சொன்னார். டாக்டர் சேவியருக்கு இடி விழுந்தது போல் ஆகி விட்டது.
“வேலைக்குப் போக வேண்டாம், வீட்டிலேயே இருந்து பிள்ளையைப் பார்ன்னு சொன்னேனே, கேட்கமாட்டேன்னுட்டாளே, எல்லாம் பணத்தாசை”
என்று அழுதான் சேவியர். தாயில்லாத சிறு குழந்தையும் அழுதது. விதியை யாரால் மாற்ற முடியும்? இறைவனின் திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.
(தொடரும்)