news-details
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு (18-05-2025) (மூன்றாம் ஆண்டு) திப 14:21-27; திவெ 21:1-5; யோவா 13:31-35

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு கடவுளின் அன்பைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறது. அன்பு என்பது கடவுளின் கொடை. இவ்வுலகில் அனைத்து உயிர்களையும் இயக்குவது அன்பு. ஒருவரின் வெளிப்புற அழகையும் அவர்களுடைய பொருள்களையும் செல்வாக்கையும் பதவியையும் பட்டத்தையும் திறமைகளையும் வைத்து நாம் மற்றவரை அன்பு செய்தல் கூடாது; மாறாக, அனைத்தையும் கடந்து மற்றவர்களை அவர்களுடைய நிறை-குறையோடு ஏற்று அன்பு செய்ய வேண்டும். ஆண்டவரை அன்பு செய்கிறோம் என்றால், அருகில் வாழும் அனைத்து மனிதர்களையும் அன்பு செய்ய வேண்டும். ஆண்டவர் இயேசு இந்த உலகத்தில் பிறந்தது முதல் இறந்தது வரை ஒவ்வொரு மனிதரையும் தேடிச்சென்று அன்பு செய்தார். நாம் வாழ்கின்ற இந்த மண்ணுலகில் ஒருவரையொருவர் முழுமையாக அன்பு செய்கின்றபோது புதியதொரு விண்ணகத்தை இம்மண்ணகத்திலே நாம் காண முடியும். எனவே, நாம் இயேசுவைப் போன்று அனைவரையும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் அன்பு செய்து வாழ்வோம்கடவுள் கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கையில் அனைவரையும் அன்பு செய்து, நமது அன்புறவால் இந்த மண்ணகத்தில் விண்ணகத்தைச் சுவைக்கவும், அன்பின் தூதுவர்களாக நாம் வாழ்ந்திடவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

சீடத்துவம் என்பது இயேசு என்ற ஒப்பற்றச் செல்வத்தைச் சுவைப்பதிலும் வாழ்வதிலும் அவரை அறிவிப்பதிலும்தான் அடங்கியிருக்கிறது. சீடர்கள் துணிச்சலுடன் இயேசுவைப் பற்றி அறிவிக்கிறார்கள். தங்களுடைய சாட்சிய வாழ்வால் அனைத்து மக்களும் இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் வளரக் காரணமாய் இருக்கிறார்கள். நம்பிக்கையில் தளராது இயேசுவின் சாட்சிகளாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

அன்பு, சகோதரத்துவம், மன்னிப்பு, ஏற்பு, பகிர்வு, உடனிருத்தல், தேவை அறிந்து உதவுதல் போன்ற பண்புகளில் நாம் வளரும்போது  நாம் வாழும் சமூகத்தைப் புதிய விண்ணகமாக மாற்ற இயலும். இமைப்பொழுதும் நம்மை விட்டு நீங்காது நம்முடன் பயணிக்கும் இறையோடு நாமும் பயணிப்போம். நாம் கடவுளோடு இணைந்திருக்கும்போது எந்தத் துன்பமும் நம்மை நெருங்க முடியாது. நமக்கு அனைத்துமாக இருக்கின்ற ஆண்டவரில் சங்கமமாக அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் அன்புறவாலும்  சீடத்துவப் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஞானத்தையும் உடல்நலனையும் தந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நிபந்தனையின்றி எம்மை அன்பு செய்யும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எம்முடன் வாழும் அனைவரையும் அன்பு செய்து, அன்பை மட்டும் அடித்தளமாகக் கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பான ஆண்டவரே! எங்கள் குடும்பங்களிலும் பங்கிலும் உள்ள அனைத்துக் குழந்தைகளும் ஒவ்வொரு நாளும் உமது அன்பை அனுபவிக்கவும், தாங்கள் சந்திக்கும் அனைத்து மனிதருக்குள்ளும் வாழும் இறைவனைக் கண்டுகொள்ளவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. அன்பான ஆண்டவரே! தெருக்களிலும் முதியோர் இல்லங்களிலும், எங்கள் குடும்பத்திலும், அன்பிற்காக ஏங்கும் அனைவருக்கும் நாங்கள் அன்பைக் கொடுத்து வாழவும், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உடனிருக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.