news-details
ஆன்மிகம்
தமிழ்நாடு ஆயர் பேரவையின் மறைக்கல்விப் பணிக்குழுத் தலைவர் மேதகு ஆல்பர்ட் G.A. அனஸ்தாஸ் அவர்களின் சுற்றறிக்கை! (‘எல்லாருக்கும் மறைக்கல்வி’)

உயிர்த்த நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவில் அன்பிற்கினியவர்களே!

மறைக்கல்விப் பணிகளால் இறைமக்களின் நம்பிக்கை வாழ்வை ஒளிரச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

இயேசு ஒரு மாபெரும் மறைக்கல்வியாளர். அவரது வாழ்வும் பணிகளும் போதனைகளும் வல்ல செயல்களும் அவர் ஏற்ற பாடுகளும், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் என அனைத்துமே மறைக்கல்வியின் பரிணாமங்கள். இயேசுவின் ஏக்கமும் நோக்கமும் வானகத் தந்தையின் எல்லையில்லா அன்பை இந்த மானிடம் உள்ளுணர வேண்டும் என்பதே. அந்த உயர்ந்த சிந்தனையை அவர் பல விதங்களில் பறைசாற்றினார். அதற்காக அவர் ஒரு கட்டமைப்பை உருவாக்கி, தாம் சென்ற இடங்களையும், சந்தித்த மக்களையும் மறைக்கல்விக் களமாக்கினார்.

இயேசு, தாம் அறிமுகப்படுத்திய இறையாட்சியை இம்மண்ணில் மலரச்செய்ய மறைக்கல்வியை ஒரு கருவியாக்கினார். அவரது மறைக்கல்வியில் உவமைகள், உருவகங்கள், நாட்டு நடப்புகள், கேள்வி-பதில்கள், உரையாடல்கள், அறிவுறுத்தல்கள், பாராட்டுகள், எச்சரிக்கைகள் என எல்லாம் நிறைந்திருந்தன. தாம் எடுத்துச் சொல்ல விரும்பிய எல்லாவற்றையும் மிக எளிமையாகவும் எதார்த்தமாகவும், எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்திலும் கையாண்டார்.

இயேசுவைப் பின்தொடர்ந்து பல மறைப்பணியாளர்கள் மறையை அறிவிக்கும் நோக்கில் தம் நாடு, வீடு, வசதி, கலாச்சாரம் என எல்லாவற்றையும் துறந்து நம் நாட்டிற்கு வந்து, தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி அர்ப்பணத்தோடு உழைத்த வரலாற்றை நாமறிவோம். அவர்கள் மறைப்பணி ஆற்றும் நோக்கில் பல பங்குத்தளங்களை உருவாக்கினர். பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினர். துறவு மடங்களை ஏற்படுத்தினர். குருமடங்களைத் தொடங்கினர். பற்பல தொண்டு நிறுவனங்களை நிறுவினர். எல்லாவற்றின் ஊடாகவும் நம்பிக்கை வளர் கல்வியான மறைக்கல்வியை வழங்கி கிறிஸ்துவின் மனநிலையில் மாணவச் செல்வங்களை உருவாக்கினர்.

மறைக்கல்வி என்பது ஒவ்வொரு மனிதனையும் இறை இயேசுவின் மனநிலையில் உருவாக்கி, இறைநம்பிக்கையில் முதிர்ச்சியடையச் செய்து, நற்செய்தி மதிப்பீடுகள் காட்டும் வாழ்க்கை முறையில் செயல்படப் பயிற்றுவிக்கும் கல்வி. மறைக்கல்விதான் திரு அவைக்குள் பல்லாயிரக்கணக்கான புனிதர்களையும் மறைச்சாட்சியர்களையும் இலக்குத் தெளிவோடு இறையாட்சிப் பாதையில் பயணிக்கவும் பணியாற்றவும் உருவாக்கத்தைக் கொடுத்துள்ளது. மறைக்கல்விதான் இந்தியாவில் சிறப்பாக, தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரமாயிரம் அருள்பணியாளர்களையும் துறவியரையும் அர்ப்பணமிக்கப் பொதுநிலையினரையும் உருவாக்கி அவர்களை உலகின் உப்பாக, ஒளியாக, புளிக்காரமாக ஆன்மிகப் பணிகளையும் சமூகப் பணிகளையும் பொறுப்போடும் பொறுமையோடும் செய்திடத் தூண்டியுள்ளது.

தமிழ்நாடு மறைக்கல்வியின் தந்தை என வருணிக்கப்படும் பாரிஸ் மறைபோதக அருள்தந்தை தாமஸ் கவான் டஃபி (1888-1942) மறைக்கல்வியின் முக்கியத்துவத்தைதிருமுழுக்குப் பெற்று மறைப்பணி ஆற்றத் தேர்ந்துகொள்ளப்பட்ட நம் பணிகளில் மறைக்கல்வியே மத்தி; பிற பணிகளெல்லாம் அதைச் சுத்திஎன்று பாமரத் தமிழில் பாங்காய் பகர்ந்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்குகள், அவற்றை வழிநடத்த பங்கு அருள்பணியாளர்கள் ஒருபுறம்; மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என்று பத்தாயிரத்திற்கும் மேலான பள்ளிக்கூடங்கள் - அவற்றை மேலாண்மை செய்யவும் நிர்வகிக்கவும் ஆயிரக்கணக்கான தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், துறவியர், பொதுநிலையினர் என மறுபுறம்இச்சூழலில் நம் பங்குகளிலும் பள்ளிகளிலும் மறைக்கல்விக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?

இந்தியத் திரு அவை தன்னகம் கொண்டுள்ள 136 மறைமாவட்டங்களுக்கும் மறைக்கல்விப் பணிக்கு முன்னோடியாகத் திகழ்வது எதுவெனில் 18 மறைமாவட்டங்களைக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு திரு அவைதான் என்ற பெருமை நமக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் கத்தோலிக்கப் பங்குகளில் இன்னும் ஞாயிறு மறைக்கல்வி நடத்தப்படாத பங்குகள் பல நூறு உள்ளன என்பது அதிர்ச்சி தரும் தகவல். அருள்பணியாளர்கள், துறவியர் நிர்வகிக்கும் பள்ளிக்கூடங்களில் மறைக்கல்வி, நன்னெறி வகுப்புகள் நடத்தப்படாதது மிகவும் வேதனை தரும் செய்தி. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மறைக்கல்வி வழங்காமலிருப்பது இறையாட்சி மதிப்பீடுகளுக்கும் கத்தோலிக்கத் திரு அவைக்கும் அதன் போதனைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் நாம் திரு அவைக்கு அளித்த வாக்குறுதிகளுக்கும் முற்றிலும் முரணான செயலாகத் தோன்றவில்லையா? மறைக்கல்வி இன்றி நாளைய நலமான திரு அவையைக் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. ஏனெனில், மறைக்கல்விதான் திரு அவையின் உயிர்மூச்சு.

நற்கருணை கிறித்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமாக (திவ, எண் 10) இருப்பதுபோல, இறைவார்த்தை, இறைநம்பிக்கை வாழ்வின் உயிர்நாடியாக (இவெ, எண் 24) இருப்பதுபோல, மறைக்கல்வி இறைநம்பிக்கைப் பயணத்தின் உயிர்மூச்சு (கிக, எண் 4) என்பதை உளமார உணர்ந்து களமிறங்கிச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. மறைக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத பங்குகளும் பள்ளிகளும் அல்லது அவற்றை நிர்வகிப்போரும் மறைமுகமாகத் திரு அவையையும், அதன் தலைவராகிய கிறிஸ்துவையும் கண்டுகொள்ளாத அபாயகரமான செயலை மேற்கொள்கின்றனரோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

திருத்தூதர் பவுல், “தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?” (உரோ 10:14-15) என எழுப்பும் பல கேள்விகளுக்கு நாம் கூறும் பதில் மொழி என்ன? மழலைப்பருவத்திலும் பதின் பருவத்திலும் வழங்காத மறைக்கல்வியையும் நன்னெறியையும் நம் பிள்ளைகளுக்கு எந்தப் பருவத்தில் வழங்கப் போகின்றோம்? ஏனெனில், மறைக்கல்வி, நன்னெறி ஏனைய பாடங்களைப் போன்றவையன்று; மாறாக, நம்பிக்கையையும் நல்வாழ்வையும் அனுபவமாக்கும் வாழ்வியல் கலைகள். விரும்பினால் நடத்துவதற்கும், விரும்பாவிட்டால் கண்டுகொள்ளாமலிருப்பதற்குமான விருப்பப்பாடங்கள் அல்ல; இப்பணிப் பொறுப்பிலிருக்கும் ஒவ்வொருவர்மீதும் சுமத்தப்பட்டுள்ள கட்டாயக் கடமை. இதில் யாருக்கும் விதிவிலக்கு இருக்கத் தேவையில்லை.

மறைக்கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்தே இரண்டாம் வத்திக்கான் சங்கம்திரு அவை தன் குழந்தைகள் அனைவரின் ஒழுக்க மற்றும் மறைக்கல்வியைத் தளரா ஊக்கத்துடன் வழங்க வேண்டிய முக்கியமான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் (கிறித்தவக் கல்வி, எண். 7) என அறிவுறுத்துகின்றது. அத்தோடு கத்தோலிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்உலகியல் அறிவு, மறை அறிவு ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, திருத்தூது உணர்விலும் ஊறித் திளைத்து, தங்கள் வாழ்வாலும் படிப்பினையாலும் ஒரே ஆசிரியரான கிறிஸ்துவுக்குச் சான்றுபகர வேண்டும் (கிறிஸ்தவக் கல்வி, எண். 8) என எதிர்பார்க்கின்றது.

எனவே, இந்தக் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டின் எல்லாப் பங்குத்தளங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் அவற்றின் பொறுப்பிலிருப்போர் ஞாயிறு மற்றும் பள்ளி மறைக்கல்வியையும் நம் பள்ளிகளில் பயிலும் பிற சபைகள், சமயங்கள், சார்ந்த மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வியையும் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆயர் பேரவை சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

மறைக்கல்விக்கான பாடநூல்களைத் திண்டிவனம் முப்பணி மையமும், நன்னெறிக் கல்விக்கான நூல்களைத் திண்டுக்கல் வைகறைப் பதிப்பகமும் வெளியிட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குத் தேவையான பாடநூல்களை உங்கள் மறைமாவட்ட மறைக்கல்விப் பணிக்குழுச் செயலர், மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர், பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஆகியோரை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம். மேற்காணும் பொறுப்பிலுள்ள அருள்பணியாளர்கள் தங்கள் பங்குகள், பள்ளிகளைச் சந்தித்துக் கலந்துரையாட வருகையில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ்நாடு திரு அவையானது 2011-2012-ஆம் ஆண்டுதனைமறைக்கல்வி ஆண்டாகஅறிவித்து, ‘எல்லாருக்கும் மறைக்கல்விஎனும் மையச் சிந்தனையோடு கொண்டாடியதை இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன். மறைக்கல்வி தொடர்பான நம் திட்டங்களும் பணிகளும் அந்த ஆண்டோடு முற்றுப்பெற்றுவிடவில்லை. அதன் ஒளியில் நாம் இன்னும் ஆழமாகத் திட்டமிட்டுப் பணிகளைத் தொடரக் கடமைகொண்டுள்ளோம்.

இத்தருணத்தில், ஒவ்வொரு மறைமாவட்டத்திலுமுள்ள பங்குகளில் நடைபெறும் ஞாயிறு மறைக்கல்வி, பள்ளி மறைக்கல்வி பற்றிய தகவல்களைச் சேகரித்து தமிழ்நாடு ஆயர் பேரவைக்கு அனுப்ப மறைமாவட்ட மறைக்கல்வி பணிக்குழுச் செயலர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று நிலவும் இந்தியச் சூழலில் மறைக்கல்வி, நன்னெறி தவிர்க்க இயலாத வாழ்வியல் பாடங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு மாணவச் செல்வங்களை உருவாக்கிட உங்கள் எல்லாரையும் மிக அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.