“இந்தியா, உணவுப் பாதுகாப்பிலிருந்து ‘விவசாயிகளின் வளர்ச்சி’ என்று மாறவேண்டும். விவசாயிகள் விளைபொருள்களைச் சந்தைப்படுத்தவும் மதிப்புக் கூட்டவும் தொழில் முனைவோராகவும் வணிகர்களாகவும் மாறவேண்டும். விவசாய விளைபொருள்களின் சந்தை மிகப்பெரியது. மதிப்புக் கூட்டுப் பொருள்கள் மூலம் தொழில் வளம் பெருகும். மாணவர்களின் ஆராய்ச்சி விவசாயிகளுக்கு நேரடிப் பலன் தருவதாக இருக்கவேண்டும். இதற்கு அரசு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆதரவளிக்கவேண்டும். விவசாயிகளை முன்னிறுத்துவதாக ஆராய்ச்சி இருக்கவேண்டும்.”
- உயர்திரு. ஜகதீப் தன்கர்,
குடியரசு துணைத் தலைவர்
“பா.ச.க.
அரசியல் சாசனத்தைச் சேதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை பா.ச.க.
400 இடங்களில் வெல்லும் என்ற உறுதியுடன் இருந்தது. அவர்களின் திட்டம் வெற்றி பெற்றிருந்தால் அரசியல் சாசனத்தை முற்றிலும் மாற்றியிருப்பர். புதிய குடியரசு, புதிய அரசியல் சாசனம் என மாற்றம் கொண்டு
வந்திருப்பார்கள். தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால்தான் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட்டது என நினைக்கலாம். ஆனால்,
பா.ச.க. இன்னும்
அரசியல் சாசனத்தைத் தாக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ். சிந்தனையில் வளர்ந்தவர்கள் திட்டமிட்ட முறையில் சிறு சிறு சட்ட மாற்றங்கள் மூலம் சாசனத்தின் அடிப்படைகள் பாதிக்கப்படுகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்ஃப் திருத்தச் சட்டம், கல்வி உரிமையைக் குறைத்தல் ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்.”
- உயர்திரு. ப. சிதம்பரம்,
முன்னாள் நிதி அமைச்சர்
“சாதிப் பெருமை பேசியும், சாதித் தலைவர்களை மிகைப்படுத்தியும், ஆயுதங்களுடன் பழிக்குப்பழி என வீர வசனங்களுடன்
மாணவர்களும் இளைஞர்களும் தங்களைத் திரைப்பட ஹீரோக்களாக நினைத்துச் சமூக ஊடகங்களில் வெளியிடும் ‘ரீல்ஸ்கள்’
பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்படும் இந்த ரீல்ஸ் காணொளிகள், சமூகத்தில் குறிப்பாக மாணவர்கள் இடையே சாதிய அடிப்படையிலான பகையையும் பிளவையும் ஆழமாகத் தூண்டுகின்றன. பள்ளி, கல்லூரி வளாக மோதல்கள், கல்வி நிலையங்களுக்குள்ளே மாணவர்கள் சாதி அடிப்படையாகப் பிரிந்து செயல்படுவது போன்ற செயல்பாடுகள் அவர்களின் படிப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன.”
- தமிழ்நாடு காவல்துறை