மே மாதம் 11-ஆம் நாளை, 62-வது உலக இறையழைத்தலுக்காக இறைவேண்டல் செய்யும் ஒரு நாளாகக் கொண்டாடுகின்றோம். மார்ச் 19-ஆம் நாள் மறைந்த திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், “இறையழைத்தல் என்பது கடவுள் நம் இதயத்தில் விதைக்கும் ஒரு விலைமதிப்பற்ற கொடை” என்றும், “நம்மையே இழந்து அன்பு மற்றும் சேவையின் பயணத்தைத் தொடங்குவதற்கான ஓர் அழைப்பு” என்றும் கூறியுள்ளார். திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியின் முக்கியக் கருத்துகளைக் காண்போம்.
இளைஞர்களின் அச்சம்
எதிர்காலத்தைப்
பற்றிய அச்சம் இளைஞர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, நெருக்கடியான சூழல்கள், மதிப்பீடுகளற்ற சமூகம், அநியாயமாக நடத்தப்படும் எளிய மக்கள், சுயநலச் சமூகம், நம்பிக்கையைக் கெடுக்கும் போர்கள் எல்லாம் இளைய சமூகத்தைப் பாதிக்கின்ற காரணிகள். இருப்பினும், இறைவனின் அன்புக்குரியவர்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ அழைக்கப்படுகிறார்கள் என்றும், போராட்டங்கள் இருந்தபோதிலும் இளைஞர்களுடன் கடவுள் இருக்கிறார்; அவர்களை அன்பு கூர்கிறார் என்றும் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார் திருத்தந்தை.
இறையுறவில் இன்பம்
கண்ட
இளம்
புனிதர்கள்
திருநிலையினர்
இளையோருக்கு முன்மாதிரியாக அவர்களோடு தோள் கொடுத்துப் பயணிக்க முன்வர வேண்டும். இளமை என்பது வாழ்வின் இடைப்பட்ட காலம் அல்ல; மாறாக, ‘கடவுளின் இப்போது’ என்பதை இளைஞர்கள் மனத்தில் கொள்ள வேண்டும். இளம் புனிதர்களான புனித லீமாரோஸ், புனித டோமினிக் சாவியோ, புனித குழந்தை இயேசுவின் தெரசா, புனித வியாகுல அன்னையின் கபிரியேல், அருளாளர் கார்லோ அகுட்டீஸ், அருளாளர் பியர் சார்ஜ் பிரசாத் போன்ற இளைய புனிதர்கள் உயிர்த்த இறைவனோடு உள்ள உறவில் உண்மை மகிழ்ச்சியைக் காண்பதற்கு இந்த அழைத்தலே உதவியாக இருந்தது.
இறைகுரலுக்குப்
பற்றி
எரியும்
இதயம்
இயேசு
பேசும்போது எம்மாவு சீடர்களின் இதயம் பற்றி எரிந்ததைப்போல நம் இதயமும் பற்றி எரிய வேண்டும். அந்த இறைகுரல் நம்மை மீண்டும் மீண்டும் அர்ப்பண வாழ்வுக்குத் தூண்டுகிறது. அழைப்பும் எதிர்நோக்கும் மனித மகிழ்வுக்கு ஒன்றையொன்று துணைபுரிகின்றன. ஒவ்வோர் இறையழைப்பும், அது பொதுநிலையினராக இருந்தாலும், திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளராக இருந்தாலும், துறவு வாழ்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டவராக இருந்தாலும், அது நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. மேலும், இறையழைப்பு என்பது மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும், பொதுநன்மைக்குப் பங்களிப்பதற்கும் ஒரு வழியாக அமைந்துள்ளது. ஒவ்வோர் அழைத்தலும் எதிர்நோக்கினால் தூண்டப்படுகின்றது. எதிர்நோக்கு என்பது வெறுமனே மனிதரின் நேர்மறைச் சிந்தனை மட்டுமல்ல, இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதும் கூட. நற்செய்திக்கு உண்மையாக இருப்பதன் மூலம் அழைப்பு முதிர்ச்சி பெறுகிறது.
தேர்ந்து தெளிதல்
இளைஞர்கள்
தங்கள் இறையழைத்தலை இறைவேண்டல், அமைதி மற்றும் நற்சிந்தனைகள் வழியாகத் தெளிந்து தேர்ந்து, கடவுள் தங்களை வழிநடத்துகிறார் என்பதை நம்ப வேண்டும்; இளையோர் அனைவரும் எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்கிற வார்த்தையைக் கவனத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அழைத்தலைக் கண்டுபிடிப்பது என்பது தேர்ந்து தெளிதல் பயணத்தில்தான் கிடைக்கிறது. இளைஞர்களின் இறையழைத்தல் பயணங்களில் பொறுமையுடனும் ஞானத்துடனும் அவர்களை ஆதரிக்கவும், திரு அவையும் குறிப்பாக, வயது முதிர்ந்த உறுப்பினர்களும் அருள்பணியாளர்களும் முன்வர வேண்டும்.
இன்றியமையாத அமைதி
நின்று
நிதானமாக இதயத்தின் குரலுக்குச் செவிமடுத்து, ‘இறைகுரல் என்ன?’ எனக் கேட்க வேண்டும். இறைவேண்டலில் அமைதி என்பது இன்றியமையாதது. இறைகுரலுக்கு எப்படிச் செவிசாய்ப்பது? மனச்சாட்சியுடன் பதில் அளிப்பது? போன்றவை அமைதியில் அரங்கேறுகிறது. அமைதியான தியானம் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்மை உணர வைக்கிறது.
விளிம்பு நிலை
மக்களுக்குச்
செவிசாய்க்கும்
அழைத்தல்
வாழ்வு
என்பது ஒரு கொடை. விளிம்பு நிலை மக்கள் நடுவில் பணியாற்றவே இந்தக் கொடை. இறைகுரலுக்குச் செவிசாய்க்கிறவர்கள் காயப்பட்ட, ஒதுக்கப்பட்ட, கைவிடப்பட்ட நம் சகோதர- சகோதரிகளுக்குச் செவிகளைத் திறந்து வைப்பார்கள். கிறிஸ்துவின் உடனிருப்பை வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ள நாம் ஒளியையும் ஆறுதலையும் இருள்
படர்ந்த மக்களுக்கு அளிக்கிறோம்.
உப்பாக, புளிக்காரமாக
வாழ
அழைப்பு
பொதுநிலையினர்
உலகின் உப்பாக, புளிக்காரமாகத் தங்கள் அர்ப்பண வாழ்வை அழைப்பு வழியாக ஆழப்படுத்த வேண்டும். அருள்பணியாளர்கள், இறையழைத்தல் இயக்குநர்கள், ஆன்மிக இயக்குநர்கள் இளைஞர்களுடன் இணைந்து பயணித்து எதிர்நோக்கு, பொறுமை, நம்பிக்கையைக் கற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இறைவனின் உடனிருப்பைத் தங்களின் வழிகாட்டுதலால் காட்ட வேண்டும். அழைத்தலுக்கான அவசரத்தை அனைத்து வகைகளிலும் உணர வேண்டும்.
‘ஆம்’ என்பதே
இறையழைத்தலின்
பதில்
இறைவன்
மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எதிர்நோக்குக்கும் ‘ஆம்’ என்று திறம்படச் சொல்லக் கூடிய அருள்பணியாளர்கள், துறவியர், மறைபரப்புப் பணியாளர்கள், தம்பதியர் திரு அவைக்குத் தேவைப்படுகிறார்கள். இதயத்தில் சேமித்து வைக்கும் புதையல் அல்ல இந்த அழைத்தல்; மாறாக, சமூகத்தில் இது வளர்ந்து வலிமையாகி நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கை வளர்ப்பதாகும். இறைகுரலுக்குப் பதிலளிப்பது என்பது சகோதர-சகோதரிகளின் இறைவேண்டலிலும் ஆதரவிலும் அடங்கி இருக்கிறது.
தளராத நமது
இறைவேண்டல்
அழைத்தலை
அதிகரிப்பது உயிரோட்டமான பலன் தரும் திரு அவையை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுவது ஒன்றே மகிழ்வின் அடிப்படை. கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, எதிர்நோக்கின் சாட்சிகளாக
இருக்க, திரு அவையில் புதிய இறையழைத்தல்களுக்காக அறுவடையின் ஆண்டவரைத் தளராது நாம் மன்றாடுவோம். நற்செய்தியின் வழியில் தொடர்ந்து எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிப்போம்.