(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அன்புச் செல்வன்: “தந்தையே, நன்மை-தீமை அறிகின்ற மரமாகிய மனம் ஒரு பக்கம் நம் வாழ்விற்கு நல்லதைச் செய்தாலும், மற்றொரு பக்கம் சில பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதைக் கூறினீர்கள். அதற்கு விளக்கம் அளிக்க முடியுமா?”
அருள்பணி:
“மனம் எவ்வாறு நம் வாழ்விற்குள் பிரச்சினையைக் கொண்டு வருகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நம் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். மனித மனம் இரண்டு திசைகளில் இயங்குகின்றது. ஒன்று, புறம் நோக்கி இயங்குகின்றது; மற்றொன்று, அகம் நோக்கி இயங்குகின்றது. வழக்கமாக விழித்திருக்கும் நிலையில் மனம் புறம் நோக்கி இயங்குகின்றது. மனம் புறம் நோக்கி இயங்குவது நாம் உயிர் வாழ்வதற்கும் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வதற்கும் அவசியமானதாக இருக்கின்றது. அறிவைச் சேகரித்தல், உழைத்தல், புதியனவற்றை உருவாக்குதல், வாழ்வில் முன்னேறுதல் ஆகியன மனம் புறம் நோக்கி இயங்குவதாலேயே நடைபெறுகிறது.”
அன்புச் செல்வன்:
“இவையெல்லாம் வாழ்விற்கு அவசியமானவைதானே?”
அருள்பணி: “நிச்சயமாக! எனினும், புறம் நோக்கிய மனம் சில நன்மைகளை விளைவித்தாலும், சில தகாத விளைவுகளுக்கான காரணமாகவும் ஆகிவிடுகிறது. இந்தத் தகாத விளைவுகளுக்கான முக்கியமான காரணம், மனம் தனது மகிழ்ச்சியைப் புறம் நோக்கிய இயக்கத்தில் கண்டுகொள்ள முனைவதே! அதாவது, வாழ்வாதாரத்திற்காகவும், உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றைச் சேகரிப்பதற்காகவும் புறம் நோக்கி இயங்க ஆரம்பிக்கும் மனம், காலப்போக்கில் தனது மகிழ்ச்சியையும் புறத்தே தேட ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய தேடலின் காரணமாகவே பல்வேறு விதமான தீமைகள் மனித வாழ்விற்குள் குடியேற ஆரம்பிக்கின்றன. முக்கியமாக, மூன்று காரியங்களைச் சுட்டிக்காட்டலாம். அவை அ) தன்னிலிருந்தே அந்நியப்படல்,
ஆ) இருமைத்தன்மை, இ) ஒப்பீடும் அதோடு
இணைந்த மதிப்பீடும்!”
கிறிஸ்டினா:
“ஒவ்வொன்றாக விளக்குங்கள் தந்தையே!”
அருள்பணி:
“முதலாவதாக, புறம் நோக்கிய மனம் எப்பொழுதுமே புற உலகிலே சஞ்சரிப்பதன் காரணமாக, நம்மிலிருந்தும் நமக்குள் இருக்கும் கடவுளிடமிருந்து நாம் அந்நியப்படக் காரணமாக இருக்கின்றது” (self-alienation).
கடவுள் நம்முடன் இருந்தாலும், நாம் அவரை உணர முடியாததற்கான காரணம், நம் மனம் நம்மில் இல்லாமல் இருப்பதே! அது எங்கெங்கோ இருந்து, எதையெதையோ செய்து கொண்டிருக்கின்றது. நமக்குள்ளே கடவுள் இருந்தாலும், இந்த மனமோ வீடு தங்காமல் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. மனத்தின் இத்தகைய அவலநிலையை நம்மில் பலர் அறியாமல், நம் வாழ்வின் பிரச்சினைக்கான வேர் எங்கோ இருக்கின்றது என்று எண்ணி விழிப்புணர்வற்ற நிலையில் நம் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.”
அகஸ்டின்:
“இருமைத்தன்மை என்றால் என்ன தந்தையே?”
அருள்பணி: “இருமைத்தன்மை (duality) என்பது உலகின் அடிப்படைத்தன்மைகளில்
ஒன்று! இந்த உலகத்தின் ஓட்டம் ‘இருமை’ என்பதன் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
இரவு-பகல், வெம்மை-குளிர், மேலே-கீழே, இருள்-ஒளி, பொருண்மை-வெறுமை (matter-vacuum), அகம்-புறம்,
உள்ளே-வெளியே போன்ற இருமையே உலகின் அடிப்படைத்தன்மை. மேற்கூறப்பட்டவை வெளிப்படையாகப்
பார்க்கப்படும்போது ஒன்றுக்கொன்று எதிரானவை போன்று தோன்றினாலும், அவற்றின் கலப்பில்தான் இந்தப் பூமியின் ஓட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இத்தகைய இருமையை உணருகின்ற சக்தி மனித மனத்திற்கு உண்டு.”
அன்புச் செல்வன்:
“தந்தையே, எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது. இளைஞன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவ்வழியே வந்த பெரியவர் ‘தம்பி, எத்தனை ஆடுகள் மேய்க்கின்றாய்?’ என்று கேட்க, இளைஞன், ‘பெரியவரே! என்னிடம் கறுப்பு ஆடுகளும் இருக்கின்றன, வெள்ளை ஆடுகளும் இருக்கின்றன. நீங்கள் எந்த ஆட்டின் எண்ணிக்கையை கேட்கிறீர்கள்?’ என்று பதில் கேள்விக் கேட்டான். பெரியவர் ‘கறுப்பு ஆடுகளின் எண்ணிக்கை என்ன?’ என்று கேட்டார். ‘25’ என்று பதில் வந்தது. ‘வெள்ளை ஆடுகளின் எண்ணிக்கை?’ என்ற அவரது கேள்விக்கும் ‘25’ என்ற பதிலே வந்தது. இருவருக்குமிடையேயான உரையாடல் தொடர்ந்தது. ‘உன்னிடம் உள்ள ஆடுகளுக்கு உணவாக என்ன கொடுக்கிறாய்?’ என்று கேட்ட பெரியவரிடம், இளைஞன், ‘எந்த ஆட்டைக் குறித்துக் கேட்கிறீர்கள்? கறுப்பு ஆட்டையா? அல்லது வெள்ளை ஆட்டையா?’ என்று கேட்டான். பெரியவர், ‘கறுப்பு ஆடுகளுக்கு என்ன தருகிறாய்?’ என்று கேட்க, இளைஞன், ‘கருவேலமரக் காய்கள்’ என்றான். பெரியவர், ‘வெள்ளை ஆடுகளுக்கு?’ என்று கேட்க, அதற்கும் ‘கருவேலமரக் காய்கள்’ என்று பதில் தந்தான். பெரியவர் இலேசாக எரிச்சல் அடைந்தார். எனினும் எரிச்சலை அடக்கிக்கொண்டு ‘உன்னிடம் உள்ள ஆடுகள் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் தருகின்றன?’ என்று கேட்டார். ‘எந்த ஆட்டைக் கேட்கிறீர்கள்? கறுப்பு ஆட்டையா? அல்லது வெள்ளை ஆட்டையா?’ என்று கேட்க, பெரியவரும் ‘கறுப்பு ஆடுகள் எவ்வளவு பால் தருகின்றன?’ என்று கேட்க, ‘அரைப்படி பால்’ என்று பதில் வந்தது. ‘அப்படியானால் வெள்ளையாடுகள்?’ என்ற கேள்விக்கு ‘அதுவும் அரைப்படி பால்தான்’
என்றான் இளைஞன்.
பெரியவர்
எரிச்சலின் உச்சத்திற்குச் சென்றார். ‘உனக்குப் புத்தி பேதலித்து விட்டதா? ஏன் கறுப்பு ஆடுகள், வெள்ளை ஆடுகள் என ஒவ்வொரு முறையும்
பிரித்துப் பிரித்துப் பேசுகிறாய்?’ என்று கோபத்துடன் கேட்டார். இளைஞன் கொஞ்சமும் பதற்றப்படாமல் ‘தயவுசெய்து கோபப்படாதீர்கள். நான் அவ்வாறு கூறியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதோ இந்தக் கறுப்பு ஆடுகளெல்லாம் இருக்கின்றன அல்லவா? இவையனைத்தும் எனக்குச் சொந்தமானவை’ என்று
சொல்ல, பெரியவர் ஆர்வமுடன் ‘ஓ அப்படியா! அப்படியென்றால்
வெள்ளை ஆடுகள் யாருக்குச் சொந்தம்?’ என்று கேட்க, இளைஞனோ கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாமல் ‘அவையும் எனக்குத்தான் சொந்தம்’ என்றானாம். இதுதான் மனித சிந்தனை!
நீங்கள்
கூறுவதுபோல எதையும் பிரித்துப் பிரித்துப் பார்ப்பது. நான்-நீ, என்னுடையது-உன்னுடையது, படித்தவன்-படிக்காதவன், கறுப்பர்-வெள்ளையர் என்று பிரித்துப் பார்க்கும் தன்மையுடையது மனம்!”
அருள்பணி:
“இவ்வாறு இருமையாக இருப்பனவற்றை மனித மனம் ஒப்பிட்டு பிடித்தது-பிடிக்காதது, நல்லது-கெட்டது, உயர்ந்தது-தாழ்ந்தது, இன்பமானது-துன்பமானது, அழகானது-அசிங்கமானது, தேவையானது-தேவையற்றது, கடினமானது-எளிதானது என்று தரம் பிரித்து முத்திரை குத்துகிறது. இத்தகைய தரம் பிரித்தல் மனித மனம் செய்கின்ற வேலை! உலகத்தில் நல்லது என்றோ கெட்டது என்றோ, உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ, இன்பமானது என்றோ துன்பமானது என்றோ, அழகானது என்றோ அசிங்கமானது என்றோ, எந்தப் பிரிவினைகளும் கிடையாது. கடவுள் ஆறு நாள்களாக உலகைப் படைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டும் திருவிவிலியத்தின் முதல் பிரிவில், ‘கடவுள் அது நல்லது என்று கண்டார்’ என்ற வார்த்தைகள் ஆறு முறை வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, கடவுள் படைக்கப்பட்ட படைப்பில் தாழ்ந்தது, துன்பமானது, கடினமானது, கெட்டது, தேவையற்றது, அசிங்கமானது என்று ஏதுமில்லை. எனினும், மனித மனம் தனது இருமைத்தன்மையின் காரணமாகப் படைப்பையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் இவ்வாறு தரம் பிரிக்கிறது.”
அன்புச் செல்வன்:
“அதாவது, உலகத்தில் இயல்பாக இருக்கும் இருமையை மனித மனம் தரம் பிரித்து, அதை உயர்ந்தது-தாழ்ந்தது, இன்பம்-துன்பம் என்ற ரீதியில் மதிப்பீடு செய்கிறது. எதன் அடிப்படையில் நம் மனம் இத்தகைய மதிப்பீட்டைச் செய்கிறது தந்தையே!”
அருள்பணி:
“நம்மை மையமாக வைத்துதான்! அதாவது, மனிதர்களாகிய நமது நலத்தையும் சுகத்தையும் மையமாக வைத்துதான் நம் மனம் எல்லாவற்றையும் பிரிக்கிறது. மனம் இவ்வாறு செயல்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இவ்வாறு தரம் பிரித்தால்தான், நாம் நமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து நம்மை வளர்த்துக்கொள்ள முடியும், நம் வாழ்வை உயர்த்திக் கொள்ள முடியும். எனவே, இத்தகைய பாகுபாடும் தரம் பிரித்தலும் நம் வாழ்வாதாரத்திற்கு மிகவும் அவசியமானவையாக இருக்கின்றன. எனினும், மனித மனம் இவ்வாறு சுற்றியுள்ளவற்றைத் தரம் பிரிக்கும்போது, ஒருசில பிரச்சினைகள் உருவாகின்றன. தமிழ் ஆன்மிக மரபாகிய சைவ சித்தாந்தத்தின்படி ஒரு மனிதரின் வாழ்வு மகிழ்ச்சியற்றதாவும் நிறைவற்றதாகவும் இருப்பதற்குக் காரணம் ஆணவம், கன்மம் (வெறுப்பு), மாயை என்ற மூன்று காரணிகளே! இவை ‘மும்மலங்கள்’ என்று
அழைக்கப்படுகின்றன. இம்மூன்றுமே நம் மனம் சுற்றியுள்ளவற்றை இரண்டாகப் பிரித்துத் தரம் பிரிப்பதன் காரணமாக நம்மில் நிகழ்பவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றைக் குறித்து அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கலாம்.”
(தொடரும்)